வழக்கு எண் 18/9

இப்படம்குறித்த எக்கச்சக்க நல்லவிதமான விமர்சனங்களால் படத்தை பார்க்கலாமென்றால், இந்த வாரம் வரை பெங்களூரில் படம் ரிலீஸாகவில்லை. சரி இதுக்கு மேலயும்காத்திருக்க வேண்டாமென்று, ஓசூரில் போய் படத்தைப் பார்க்கப்போனபோது, படம்எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என சிறிய சந்தேகத்துடன்தான் போனேன். ஆனால், படம் முடிந்து வெளியே வந்தபோது, ‘நல்லவேளை இந்த படத்தை மிஸ் பண்ணல’ என எண்ணும் அளவிற்க்கு ஒரு தரமான படத்தை அளித்திருந்தார், பாலாஜி சக்திவேல்.

ஒரு மிக எளிதாக, நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் கதாப்பாத்திரங்களையும், நாளிதழ்களில் படிக்கும் செய்திகளையும் கொண்டே உலகத்தரமான படங்களைக் கொடுக்க முடியும் என்பதை Children of Heaven, White balloon போன்ற இரானியப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதை தமிழிலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையும், மேல்த்தட்டு மக்களின் வாழ்க்கையும் இணையும் மிகச்சிறிய கோட்டை அழகாகப் பிடித்து, அனைவருக்கும் பிடித்த ஒரு படத்தைக் கொடுத்ததற்காக நிச்சயம் இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

படத்தில் வரும் எல்லா நடிகர்களுமே புதுமுகங்களாக இருப்பது, கதையுடன் ஒன்றிப்போக மிகவும் உதவுகிறது. மேலும், அனைவரது அபாரமான நடிப்பு இதற்கு மேலும் மெருகூட்டுகிறது.

அது எப்படி சில படங்களுக்கு எல்லாமே அமைகிறது எனத் தெரியவில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என அனைத்தும் சரியாக அமைந்திருந்தது இப்படத்தில். ஒரு குறை சொல்ல வேண்டுமானால், பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இனிமேல் ‘இளம்பெண் மீது ஆசிட் வீச்சு, இளைஞர் கைது’ என வரும் செய்திகளை படிக்கும் போதெல்லாம், வேலுவும், ஜோதியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. உண்மையிலேயே அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு உலகத்தரமான படைப்பு இத்திரைப்படம்.

படத்தின் இறுதிக்காட்சியில் இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் ஊற்றுவது படத்தில் பார்க்கும்போது நன்றாக இருந்தாலும், சற்றே நடைமுறை வாழ்க்கைக்கு முரணாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. என்னைப் பொருத்தவரை, வேலுவை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது அந்த வண்டியின் பின்னே ஜோதி ஓடிவரும் காட்சிதான் முடிவாக அமைந்திருக்க வேண்டும். இருந்தாலும், படம் முடிந்து வெளியே வரும்போது சற்று ரிலாக்ஸாக வர அந்தக் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் உதவுகின்றன.

தமிழ் சினிமாவின் தரத்தைப் பற்றிக் கேட்பவர்களிடம் பார்க்க சொல்லக்கூடிய மிகச்சிலப் படங்களில் ஒன்று இந்த வழக்கு எண் 18/9.

Advertisements
வழக்கு எண் 18/9

அழகர்சாமியின் குதிரை

ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்,ஒரு வில்லன், ஒரு காமெடியன், காதல், சண்டை இவைகள் இல்லாமல் தமிழ் படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் அபூர்வமான நிகழ்வுகள், நந்தலாலா போல.

அழகர்சாமியின் குதிரையில் இவை எதுவுமே இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் இவை எதையும் முக்கியமாக வைத்து கதை புனையப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு. படத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். கதை யார் தோள்மீதும் பயணப்படவில்லை. மாறாக, அனைவரையும் தன் மிதேற்றி பயணப்பட வைக்கிறது, நம்மையும் சேர்த்து.

இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே சுசீந்திரனை பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் ஹீரோ என சொல்ல முடியாது. எந்த நட்சத்திரமும் இதில் நடிக்க மாட்டார். அப்படியிருந்தும் புது முகங்களையும், அப்புக்குட்டி போன்றோரையும் வைத்துக்கொண்டு பல நட்சத்திரங்களால் தர முடியாத தரமான படைப்பொன்றை கொடுத்திருக்கிறார்.

படம் முழுக்க மெல்லியதான ஒரு நகைச்சுவையுடன் கதை நகர்கிறது. காமடிக்காக சேர்க்கப்பட்ட சூரி பெரிதாக எடுபடவில்லையெனினும், மற்றவர்கள் அனைவரும் இவரின் வேலையை நிறைவு செய்துவிடுகின்றனர்.

கோவிலுக்கு வரி வசூல் செய்யுமிடம், உள்ளூர் கோடங்கி மற்றும் மலையாள மந்திரவாதிகள் குறி சொல்லுமிடங்கள், குதிரையை காணோமென போலீஸில் புகார் கொடுக்க செல்லுமிடங்கள் என அனைத்தும் இயல்பான நகைச்சுவைக் காட்சிகள். முக்கியமாக இனிமேல் இந்த ஊரில் மழையே பெய்யாது என ஊர்த்தலைவர் சாபம் கொடுத்தவுடனே அடை மழை பெய்யுமிடம் குபீர் சிரிப்பு.

அப்புக்குட்டியின் சொந்த ஊராக காண்பிக்கப்படும் அந்த மலைக்கிராமமும், அதன் வளைந்து நெளிந்த மலைப்பாதைகளும் கொள்ளை அழகு. குதிக்குது குதிரைக்குட்டி பாடலில் அந்த கிராமத்தின் அழகை படம்பிடிப்பதில் மிகவும் சிரத்தை எடுத்திருக்கின்றனர்.

இது இளையராஜாவுக்கான கதை. இவரைத்தவிர பொருத்தமாக யாராவது இந்தப்படத்துக்கு இசையமைக்க முடியுமா என தெரியவில்லை.  மூன்றே பாடல்கள். மூன்றும் மூன்றுவிதம். அனைத்தும் அருமை. பின்னணியிசையிலும் கலக்கியிருக்கிறார் ராஜா.

ஒரு சிறுகதைக்குள், சாதி பிரச்சினை, மூட நம்பிக்கைகள், மென்மையான காதல், கிராமத்தினரின் வறுமை, வாழ்க்கை முறை என அனைத்தையும் கொண்டுவந்த பாஸ்கர் சக்தி திறமையானவர்தான். இதுபோன்ற படங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இது போல பல நல்ல தமிழ் இலக்கியப் படைப்புகளை வெண்திரையில் கொண்டுவர உதவும்.

அழகர்சாமியின் குதிரை – ஆற்றில் இறங்கும் மரக்குதிரையல்ல, துள்ளி ஓடும் நிஜக்குதிரை.

அழகர்சாமியின் குதிரை

கோ – ஒரு பார்வை

முதலில் உலகக் கோப்பை, அதற்கு பிறகு தேர்தல் என பல காரணங்களால் தள்ளிவைக்கப் பட்ட பெரிய படங்களில் ‘கோ’ வும் ஒன்று. இந்த கோடை விடுமுறைக்கு வரப்போகும் நல்ல படங்களுக்கான ஆரம்பம் என்றால் நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

சினிமாவில் பத்திரிக்கை, ஹீரோ பத்திரிக்கையாளன், வில்லன்கள் அரசியல்வாதிகள் என நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றனதான். எனவே கதை ஒன்றும் புதிதில்லை. ஆனால் சொன்ன விதம் புதிது.

முதல் காட்சியில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞராக வரும் ஜீவா பறந்து பறந்து படமெடுப்பதைப் பார்த்தவுடனே இன்னொரு ஹீரோயிசப் படமோ என பயந்து போனேன். நல்லவேளையா கேவி ஆனந்த் அந்த மாதிரி எதுவும் சொதப்பவில்லை.

ஹீரோ ஜீவா. பஞ்ச் டயலாக், பாய்ந்து பாய்ந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இல்லாத ஒரு கமர்சியல் படத்தில் நடித்ததற்காக முதலில் அவரைப் பாராட்ட வேண்டும். மற்றபடி சவாலான ரோல் எல்லாம் இல்லை. கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்.

ஹீரோயின்கள் கார்த்திகா, பியா. கதையைப் பொருத்தவரை கார்த்திகாவுக்குத்தான் முக்கியமான ரோல் என்றாலும் சொதப்பலான நடிப்புதான். சில காட்சிகளில் முகத்தில் எந்தவிதமான பாவனைகளுமில்லாமல் நிற்கும் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். பியாவைப் பொருத்தவரை பரவாயில்லை. அரசியல், பத்திரிக்கை என பரபரப்பாக செல்லும் படத்தின் மென்மையான சிலக் காட்சிகள் இவர் வருமிடங்கள் மட்டுமே.

பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ் போன்றவர்கள் சிஎம், எதிர்கட்சித் தலைவர் என்ற கேரக்டர்களின் முக்கியத்துவத்துக்காக மட்டுமே நடித்திருக்கின்றனர் என நினைக்கிறேன். படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையுமில்லை. அஜ்மலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம். நிறைவாக செய்திருக்கிறார்.

தமிழ் பத்திரிக்கை அலுவலகம் இவ்வளவு மாடர்னாக இருக்குமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லவேண்டும். இன்றைய அரசியலின் அவல நிலையை படம்பிடித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது ஆச்சரியம்தான். படத்தை வாங்கி, தேர்தல் முடியும் வரை கிடப்பில் போட்டதுகூட ராஜதந்திரமோ?

இறுதியில் வரும் திருப்பங்கள் என்னதான் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டினாலும், சொல்லவந்த விஷயத்தை சரியாக சொல்லமுடியாமல் ஆக்கிவிடுகிறது. இளைஞர்கள் கையில் நாடு செல்லவேண்டுமென சொல்ல நினைத்திருந்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதில் ஒருத்தன் தவறானவன் அது இது என இழுத்திருப்பது எதற்காக எனத் தெரியவில்லை.

ஹாரிஸ் வருசத்துக்கு ஒரு மெலடி போட்டுடறார். இந்த வருஷத்துக்கு ‘என்னவோ ஏதோ’. அயன் படத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் வரும் நெஞ்சே நெஞ்சே பாடல் போல இதிலும் தேவையில்லாத இடத்தில் ஒரு பாடல் வருகிறது. என்னதான் பாடல்கள் ஹிட்டானாலும், கட்டாயம் எல்லா பாட்டையும் படத்தில் வைக்கவேண்டுமா என்ன?

‘கோ’ பொழுதுபோக்கிற்கான ஒரு படம். வேறு ஒரு நல்ல படம் வரும்வரை தாராளமாக கோ‍ பார்க்கலாம்.

கோ – ஒரு பார்வை

மைனா.. மைனா..

ஒருவழியா நேத்துதான் மைனா பார்த்தேன். பெங்களூரில் இந்த வாரமாவது வெளியாகும் எனக் காத்திருந்து அது நடக்காததால் ஓசூர் போய்தான் பார்க்கவேண்டியிருந்தது. பெங்களூரில் எப்பவுமே இதுதான் பிரச்சினை. எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், பெரிய ஹீரோ இல்லைன்னா இங்க அது ரிலீஸ் ஆகாது.

பிரபு சாலமனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவருடைய முந்தையப் படங்கள் கதையும், ட்ரைலரும் வித்தியாசமானப் படம் எனப் பார்க்க தூண்டும். போய் பார்த்தால் திரைக்கதையில் ஏதாவது ஒன்று சொதப்பி இருப்பார் மேலும் அனைத்தும் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாகத்தான் இருந்தன. ஆனால் இந்தப் படத்தில் அதை புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார்.

மூணாருக்குப் பக்கத்தில் இவ்வளவு அழகான கிராமத்தை கதைக்களமாகத் தேர்ந்தெடுத்ததற்கே இவருக்கு தனி பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். அதுவும் அந்த மலைப் பகுதியின் அழகையும், அங்கே சென்று வரும்போது ஏற்படும் இடர்பாடுகளையும் தெளிவாகக் காட்டும் வண்ணம் திரைக்கதை அமைத்தது நிச்சயம் புத்திசாலித்தனமான விஷயம்தான்.

ஆனால் பல இடங்களில் பருத்திவீரனின் சாயல் அடிப்பதைத் தவிர்த்திருக்கலாம். சின்ன வயதிலிருந்தே ரௌடி பயலாக திரிவது, சிறுவயது காதல், ஓவராகப் பேசும் ஒரு பொடியன், காதலுனுக்காக அம்மாவிடம் கதாநாயகி சண்டையிடுவது, உருக்கமான க்ளைமாக்ஸ் என அனைத்திலும் பருத்திவீரனின் பாதிப்பு தெரிகிறது.

படத்தில் பெரும்பாலோனோர் புதுமுகங்கள் அல்லது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியவர்கள். இவர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையான படைப்பைக் கொடுத்த பிரபு சாலமன், மிகவும் பாராட்டுக்குரியவர். படத்தின் ஒவ்வொருக் காட்சியிலும் இவரது உழைப்பு தெரிகிறது.

விதார்த். தொட்டுப்பார் மூலம் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், இதுதான் தன் முதல் படமாக சொல்லுவார் என எதிர்பார்க்கிறேன். மிகச் சிறப்பான நடிப்பு. கதாப்பாத்திரத்துடன் முதல் காட்சியில் இருந்தே ஒன்றிவிடுகிறார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.

அமலா.  நெஞ்சத்தை கொள்ளைக் கொண்டு போகிறது இவரது நடிப்பு. கிராமத்து இளம்பெண் மைனாவாக வாழ்ந்திருக்கிறார். நல்ல களையான, பெரிதாக மேக் அப் இல்லாத பரு விழுந்த முகத்துடன் மைனாவாக இவர் வரும்போது நம் மனமும் சுருளியை போல இவரை நேசிக்க வைக்கிறது. ஒவ்வொருக் காட்சியிலும் தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது இவரிடமிருந்து. தமிழ் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த இன்னொரு நடிகை கிடைத்துவிட்டார் (மறுபடியும் கேரளாவுக்கே நன்றி!!). சிந்து சமவெளியின் மூலம் ஒரு மாதிரியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டிருப்பார். நல்லவேளை மைனா வந்து காப்பாற்றியது.

போலீஸ் அதிகாரியாக வரும் நபர் (அவர் பெயர் என்ன?), தம்பி ராமையா என அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தம்பி ராமையாவுக்கு, மெயின் காமடியனாக இதுதான் முதல் படம். சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இசை இமான். நம்பவே முடியவில்லை. பாடல் வரிகள் தெளிவாகக் கேட்கின்றன. இதுபோன்ற கதைகளுக்கு இமானால் இசை அமைக்க முடியும் என, படம் வெளிவரும் முன் யாராவது சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். இது போன்று தொடர்ந்து இவர் இசையமைத்தால் நம் காதுகளுக்கு நல்லது. ‘மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’  பாடல் நல்ல மெலடி, இன்னும் சில நாட்களுக்கு நம் மக்களின் உதடுகளில் முணுமுணுக்க வைக்கும்.

ஒரே ஒரு நெருடலான விஷயம். வன்முறைக் காட்சிகள். இது போன்ற இயல்பான கதையம்சம் கொண்ட அனைத்து படங்களிலும் இப்போது வன்முறைக் காட்சிகளும் சற்றே அதிகமாக வருவது வருத்தமாக இருக்கின்றது. அதுவும் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளை சற்றே குறைத்திருக்கலாம்.

மூணாரின் மலைப் பகுதியூடாக கதையோடு சேர்ந்து நாமும் பிரயாணிக்கையிலேயே தெரிகிறது படக் குழுவினரின் உழைப்பு. நிச்சயம் அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கின்றது. அந்த மலைப் பகுதியின் அழகை சிறப்பாகக் காட்டியதில் ஒளிப்பதிவாளர் சுகுமாரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பாடல் காட்சியில் மைனாவின் இமை பட்டு தொட்டாசிணுங்கி செடி மூடும். இது போன்ற கவிதைத்துவமான காட்சிகள் பல. நிச்சயம் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் மைனா நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

மைனா.. மைனா..