கடவுளும் மதமும்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு கடவுளை விட, கடவுளின் பெயரால் செய்யப்பட்ட மூடநம்பிக்கைகளும், பார்ப்பன ஆதிக்கமுமே என்பது எவருக்கும்தெரியாததல்ல. திராவிட அரசியலின் அடிநாதமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதும்தான்.

ஆனால் சமீப காலமாக ஒரு புது மாதிரியான கடவுள் மறுப்புவாதிகளை பார்க்கிறேன். பெரும்பாலும்பார்ப்பனர்களைக் கொண்ட இந்த வகை கடவுள் மறுப்புவாதிகளை முதலில் வெளியிலிருந்து பார்த்த போது, ஒருவேளை இவர்களெல்லாம்நாம் எதிர்பார்த்த சமநிலையான புதிய சமூகத்தின் முன்னோர்களோ என நினைக்கத் தோன்றியது. அவர்களிடம் இந்து மதத்தினைப் பற்றி பேசும் வரை.

இவர்களை பொருத்தவரை, இந்து மதம் என்பது வாழும் வழிமுறையாம். கடவுள் மறுப்புக்கும் இந்து மத நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ஆனால் அதே சமயம் கிருத்துவ, இஸ்லாமிய சமயங்களை பின்பற்றுவது முட்டாள்தனமாம். இதைக் கேட்டவுடன் புதிய சமூகத்தின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் தளர்ந்தது எனக்கு.

இவர்களுக்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் படித்த ஆதிக்கவாதிகள் அவ்வளவுதான். இவர்களைப் போன்ற ஆட்களிடமிருந்து உண்மையான பகுத்தறிவாளிகளை இனம் காண்பது சற்றே கடினம்தான்.

கடவுளை ஒழித்தால் சாதிகளை அழித்துவிடலாம் எனத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையை கையிலெடுத்தார் பெரியார். ஆனால் இப்போதோ கடவுளைக் கூட ஒழித்துவிடலாம் ஆனால் சாதியையும் அதன் காரணியாக விளங்கும் மதத்தையும் ஒழிக்க முடியாது போல.

Advertisements
கடவுளும் மதமும்

சுவாமியே சரணம் ஐயப்பா!!

கார்த்திகை மாசம் வந்துடுச்சு. இனி எங்க பார்த்தாலும் இந்த கோஷத்தைக் கேட்கலாம். சின்ன வயதில் ஐயப்பனுக்கு மாலை போடும் சீசனான இந்த கார்த்திகை மாசம் வந்தாலே ஒரே குஷிதான். அதுக்கு முக்கியமான காரணம், அந்த பஜனைகள்.

ஐயப்ப பஜனைகள், தெரிஞ்சவங்க வீட்டிலயும், கோவில்லயும் நடந்தால் கூட்டமா போய் உக்காந்துக்கிட்டு தொண்டைத்தண்ணி வத்தற வரைக்கும் பாடுவோம் (கத்துவோம்). அதுவும் எங்கயாவது கோவில்ல மைக் வச்சுட்டங்கன்னா அவ்வளவுதான். மைக் பக்கத்துல யார் உட்காரதுன்னு ஒரு சின்ன சண்டையே நடக்கும். ஒரு வழியா மைக் பக்கத்தில் உட்காந்துட்டோம் எல்லோரும் காதைப் பொத்திக்க வேண்டியதுதான். சின்னப் பசங்கதானன்னு மத்தவங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

பஜனைகளுக்கு போவதற்கு, பாட்டுக்கடுத்த இன்னொரு காரணம் அங்க கொடுக்கிற பொங்கலோ, சுண்டலோ. சும்மா ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் பஜனைல பாடிட்டு அந்த பிரசாதம் வாங்கி சாப்பிடறப்ப கிடைக்கிற சந்தோசம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை. அதுவும் பெரும்பாலும் ஐயப்ப பஜனைகளில் கொடுக்கிற பிரசாதங்கள் அநியாடயத்துக்கு நல்லா இருக்கும்.

இதெல்லாம் ஒரு அஞ்சாவது படிக்கிற வரைக்கும்தான். அதுக்கப்புறம் பெரும்பாலும் பஜனைகளுக்கு போவதை விட்டாச்சு. ஆனாலும், ஐயப்பனுக்கு மாலை போட்டவங்களைப் பார்க்கும் போதும், மத்தவங்க அவங்களை (பொடிப்பயலைக் கூட) மரியாதையா ‘சாமி, சாமி’ன்னு கூப்பிடறதப் பார்க்கும்போதும் பெரிதானவுடன் நாமும் எல்லா வருஷமும் மலைக்கு மாலை போட்டுட்டு போகணும்னு நினைப்பேன்.

எங்க அப்பா எப்பவுமே சபரிமலைக்கு மாலை போட்டது கிடையாது. அப்போது அவர் லாரிக்கு டிரைவரா போயிட்டு இருந்தார். அதனால் ‘என் தொழிலுக்கு, மாலை போட்டுட்டு சுத்தபத்தமா எல்லாம் இருக்கமுடியாது’ன்னு சொல்லுவார். அதனால் ‘நம்ம வீட்டில் மாலை போட்டால் நாமதான் போடணும். நம்ம அப்பா, அம்மா எல்லாம் நம்மல சாமி, சாமின்னு கூப்பிடுவாங்க, திட்டவே மாட்டாங்க’ன்னு நினைப்பேன். ஒவ்வொருதடவை அவங்க திட்டும்போதும்,  ‘மாலை போட்டிருந்தால் நமக்கு இப்படி திட்டு விழாதே’ன்னு தோணியதுண்டு.

இந்த நினைப்பெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரைக்கும் இருந்தது. ஒவ்வொரு வருஷமும் வீட்டில் போய், ‘இந்த வருஷம் மாலை போடப்போறேன்’ என சொல்லத்தோன்றும். இருந்தாலும் ஏதோ ஒரு பயத்தில் சொல்லாமயே விட்டுடுவேன்.

வீட்டுல எதாவது திட்டுவாங்கங்கிறது ஒரு காரணமா இருந்தாலும், காலைல நாலு மணிக்கு எழுந்து குளிக்கணும், காலை சாப்பாடு கிடையாது, போன்றவைகளும் காரணமாக இருந்தன. பத்தாவது தாண்டினவுடன், மாலை போட்டுட்டு பொண்ணுங்களை சைட் அடிக்கக் கூடாதுங்கிறதும் இந்த காரணங்களில் ஒன்றாக சேந்துக்கிச்சு. இதெல்லாம் கஷ்டம்ன்னு கிடையாது. ஆனால் என்னால் செய்ய முடியுமாங்கிறதுதான் பயமே. அதுவும் இந்த சீனியர் பசங்களெல்லாம், ஏதாவது தப்பு பண்ணிட்டால் தேங்காய் உடையாது, அது இதுன்னு பயப்படுத்திட்டாங்க.

அதுக்கப்புறம் சபரி மலைக்கு மாலை போடும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விட்டது. அதுக்கு முக்கிய காரணம், எங்க ஊரில் மாலை போட்டுட்டு சுத்திட்டு இருந்தவங்கதான். சபரி மலைக்கு மாலை போடரவங்களில் பெரும்பாலானோர், எந்த வேலைக்கும் போகாமல் சும்மா சுத்திட்டு இருக்கிறவங்களாத்தான் இருந்தனர்.  அதுவும் நேத்துவரைக்கும் ஊரே அவனை ஒண்ணுக்கும் ஒதவாதவன்னு திட்டியிருக்கும். இன்னிக்கு மாலை போட்டுட்டு வந்தவுடனே சாமி, சாமின்னு மரியாதையா பேசும்.

இந்த முரண்பாடு எனக்கு பிடிக்கவில்லை. மேலும், சின்ன வயசில் பார்த்த உண்மையிலேயே பக்தியானவர்கள் ரொம்பவே குறைந்திருந்தார்கள். அப்போதெல்லாம், மாலை போட்டாங்கன்னா ஒரு தப்பும் பண்ணாமல் இருப்பாங்க (அல்லது, இருப்பாங்கன்னு சொல்லப்பட்டிருக்கிறேன்), ஆனால் இப்போதோ, எல்லாத்தையும் பண்ணிட்டு (தண்ணி, தம்), அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்துட்டு நானும் விரதம் இருந்திட்டேன்னு கோவிலுக்கு போறவங்க அதிகம் ஆனாங்க. இதனால் நாம மாலை போட்டாலும் இந்த கூட்டத்தில் சேத்திடுவாங்கன்னுட்டு அந்த எண்ணத்தையே விட்டுட்டேன்.

உண்மையிலேயே கடவுள் மேல் நிஜமான பக்தி காரணமாக மாலை போடறவங்க இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மேலே சொன்ன வகைகளில் பலர் இருந்ததால் அதுவே அதிகமாக கண்ணில்பட்டது. மேலும், ஓரளவு பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் படிக்க ஆரம்பித்தபோது, ஐயப்ப விரதத்தில் பெண்களை ஒதுக்கும் போக்கு, மிகப் பெரியத்தவராக வெளிப்பட்டது. அதுவும் எங்க ஊரில் சிலர், பெண்களை சுத்தம் கருதி வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள். இதெல்லாம் பார்த்தபிறகு, ஐயப்ப விரதத்தின் மேல் இருந்த ஈர்ப்பு சுத்தமாகப் போய்விட்டது.

சுவாமியே சரணம் ஐயப்பா!!

விளம்பரத் தூதுவரான கடவுள்

சமீபத்தில் இஸ்கான் (Iskcon) சென்றிருந்தபோது தொன்றிய விஷயம் இது. பெங்களூர் இஸ்கான் கோவிலுக்கு செல்வதில் எப்போதும் எனக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லையென்றாலும், புதிதாக பெங்களூருக்கு வரும் அனைத்து நண்பர்களின் லிஸ்டிலும் இந்த இடம் இருப்பதால், தவிர்க்க முடிந்ததில்லை.

இதற்கு முன் பல தடவை போயிருந்தாலும் இந்த முறைதான் 200 ரூபாய் ஸ்பெஷல் தரிசனத்தில் சென்றிருந்தேன். இந்த 200 ரூபாய் டிக்கெட் இருந்தால்தான் உங்களால் கோவிலை சுற்றி வர முடியும். இல்லையென்றால் சற்று தொலைவிலிருந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டியதுதான். அதே போல சிறப்பு பிரசாதம், சிறப்பு பூஜை எல்லாமும் இந்த ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி வருபவர்களுக்கு மட்டுமே.

இங்கு மட்டும் இல்லை. எல்லா பிரபலமான கோவில்களிலும் இதே நிலைதான். கடவுள் கூட காசு இருந்தால்தான் எளிதாக காணக்கிடைக்கிறார் இந்த நாட்டில்.

நான் கோவிலுக்கு செல்வது எப்போதும் சாமி கும்பிடுவதற்கு அல்ல. கோவில்களின் அமைதி நமது மனதுக்கும் அமைதி கொடுக்கும் என்பதால்தான். இந்த அமைதியை பல பிரபலமாகாத கோவில்களிலும், சில சர்ச்களிலும் மட்டுமே அனுபவித்திருக்கிறேன். இங்கேயும் ஏதாவது விசேஷ நாட்களில் போனால் அந்த அமைதி கிடைக்காது.

இஸ்கானுக்கு போய்விட்டு வெளியே வரும்போது கோவிலுக்கு போய்வந்த உணர்வு துளியும் இருந்ததில்லை எனக்கு.  ஏதோ ஷாப்பிங் மாலுக்குள் சென்றுவந்தது போலத்தான் எப்போதும் இருக்கும். கோவிலைவிட்டு வெளியேவரும் வழி முழுக்க கடைகள். சாப்பாட்டு ஐட்டங்கள் பிரசாதம் என்ற பெயரிலும், மற்ற பொருட்கள் கிருஷ்ணன் படத்துடனும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணன் படம்போட்ட டி‍-ஷர்ட் போட்டால் கிருஷ்ணனின் அருள் கிடைத்துவிடுமா? ஏன்யா இப்படி அலும்பு பண்ணறீங்க‌?

என்னைப் பொறுத்தவரை இது ஒரு அற்புதமான வியாபாரத் தந்திரம். நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் விளம்பரத்தில் நடிக்கவைத்து தங்கள் பொருட்களை விற்பவர்களுக்கும், கிருஷ்ணனை நன்றாக தங்கத்தில் அலங்காரப்படுத்திக் காண்பித்துவிட்டு அவன் பெயரால் பொருட்களை விற்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.

இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் ‘இவர்கள் இந்த பணம் மூலம் பல பேருக்கு சாப்பாடு போடறாங்க, அதனால் இப்படி வியாபாரம் செய்வது தப்பில்லை’ என சொன்னான். ப‌ல‌ர‌து க‌ருத்தும் இதுதான்.

‘திருடுபவனும், கொள்ளைக்காரனும் கூட தனக்கென்று ஒரு நியாயமானக் காரணம் வைத்திருப்பான். அதனால் அவன் செய்வது சரியென்றாகிவிடுமா?’ என நான் கேட்டால் உடனே என்னை நாத்திகன் என்று சொல்லுகிறார்கள். இங்கே நாத்திகம் எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியல. தப்ப தப்புன்னு சொன்னால் நாத்திகமா? என்னய்யா இது?

இது இங்கு மட்டும் இல்லை,  இஸ்கானுக்கு கிருஷ்ணன் என்றால்,  திருப்பதியில் வெங்கடாஜலபதி, வாடிகனில் இயேசு,  மெக்காவில் அல்லா. அனைவரும் விளம்பரத் தூதர்களாகவே உபயோகப்படுத்தப் படுகிறார்கள்.

கடவுள் நம்பிக்கையை இவர்கள் வியாபார நோக்கத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள் என்றால் சில சாமியார்கள் வேறு சில விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை.

வாட்டிகனிலும், திருப்பதியிலும், இஸ்கானிலும் கோடிகோடியாய் கொட்டும் பலர் அதில் பாதியை தாங்கள் தினமும் பார்க்கும் ஏழைகளுக்கு கொடுத்திருந்தாலே பல பேர் இவர்களை தெய்வமாக வணங்கியிருப்பார்கள்.

எப்போது மனிதன் அன்பும், அமைதியும்தான் கடவுள் என உணர்கிறானோ அப்போதுவரை இதுபோன்றவர்களின் வேலைகள் நிற்கப் போவதில்லை.

விளம்பரத் தூதுவரான கடவுள்

எப்போது வரும் வெளிச்சம்?

இப்போ எங்கே பார்த்தாலும் பேசப் பட்டிக்கிட்டுருக்கும் ஒரு விஷயம், ராமஜென்ம பூமி/பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்கிற தீர்ப்புதான். இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த தீர்ப்பு வர்றதுனாலதான், எந்திரன் வெளியீடும் தள்ளிப்போனதாக ஒரு தகவல். தீர்ப்பை தள்ளிவைக்க முடியாதுன்னு நீதிமன்றம் திட்டவட்டமா அறிவிச்சுட்டாங்க.  அதனால ஊருக்கு போக திட்டம் வச்சிருந்த நண்பர்கள் நிறைய பேர், அதை இன்னும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டனர்.

இந்த வழக்கு, எனக்கு எப்பவும் விளங்காத ஒன்று. அதாவது அந்த இடம், ‘ராமருக்கு சொந்தமா? இல்லை பாபருக்கு சொந்தமா?’. அவங்க ரெண்டு பேருமே இப்போ இல்லை, அவங்க வம்சாவளியினரும் யாரும் இருப்பதா தெரியல. அப்போ எப்படி தீர்ப்பு சொல்லுவாங்க? ‘ராமரை வழிபடுபவர்களுக்கா, இல்லை அல்லாவை வழிபடுபவர்களுக்கா என்றா?’

ராமர் வாழ்ந்த இடம், அங்கே ராமருக்குத்தான் கோவில் இருக்க வேண்டும், பாபர், கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதியைக் கட்டினார் என்று கூறித்தான், மசூதியை இடித்தனர். ராமாயணத்தின்படி, கடவுளின் எந்த சக்தியும் இல்லாமல் மனிதனாகத்தானே ராமன் வாழ்ந்தான்? பிறகு எப்படி, சாதாரண மனிதனை கோவில் கட்டி வணங்கினர்? முகலாயப் படையெடுப்பின்போது, இந்தியாவில் இருந்த எவ்வளவோ கோவில்கள் அளிக்கப்பட்டன. ஏன் மற்ற இடங்களில் எல்லாம் இதைப்போல புதியக் கோவிலைக் கட்டும் முயற்சியில் இவர்கள் இறங்கவில்லை?

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுள் அல்லா என்றால், ஏன் மசூதியை இடித்தவர்களை அவர் ஒன்றும் செய்யவில்லை? இதே கேள்வியை, ராமனை நம்புபவர்களிடமும் கேட்கலாம். தன் கோவிலை இடித்தவனின் வம்சம், தன் நாட்டையே பல வருடங்கள் ஆளும் வண்ணம் அருளியது ஏனோ?

என்னைப் பொறுத்தவரை, ராமன் இருந்ததற்கும் ஆதாரம் இல்லை, அல்லா இருப்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால், இவர்கள் இருவரில் யாருடைய வழிபாட்டுத் தளம் அயோத்தியில் இருக்கவேண்டுமென, தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தீர்ப்பளிக்கப் போகிறதாம் நீதிமன்றம்.

இரு தரப்பினரும், தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், எந்தவித எதிர்ப்போ, கோலாகலமோ இன்றி ஏற்றுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். எனக்கு சத்தியமாக நம்பிக்கை இல்லை. இரு தரப்பினருக்கும் தீர்ப்பு மிக முக்கியம். முக்கியமாக அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு. எனவேதான் தீர்ப்பு வெளிவருவதற்கு எந்த இடையூறுமின்றி பேசிவருகின்றனர்.

இல்லாத இருவருக்காக,  இருக்கும் பல ஆயிரக்கணக்கானோர் சண்டையிட்டுக் கொள்வது,  உண்மையிலேயே வேதனையான விஷயம்தான். இதை எப்போது எல்லோரும் புரிந்து கொள்கிறார்களோ,  அதுவரை இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்போவதில்லை. அத்தகைய வெளிச்சத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எப்போது வரும் வெளிச்சம்?

சாதி, மதங்களின் அரசியல்

சாதிப்பற்று பற்றியும், மதப்பற்று  பற்றியும் பல ஆயிரக்கணக்கானோர்  பல மொழிகளில் தங்களதுக் கருத்துக்களைப் பதித்திருப்பது தெரிந்தாலும், இதைப்பற்றி எனது கருத்துகளில் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  சாதி மதங்களைப் பற்றி எழுதும் போதும் பேசும்போதும் எனக்கு தெரிந்தவரை பெரும்பாலானவர்கள்  வெளிப்படையாக தங்களின் சாதிப்பற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆனால்,  நிறைய பேருக்கு நிச்சயம் சாதி, மதப் பற்றுகள் தங்களின் முன்னோர்களிடமிருந்து சிறிதும் குறையாமல் இருந்து கொண்டுதானிருக்கிறது. இப்போதைய உலகில் முழுவதுமாக சாதி, மதங்களை மறுக்கின்ற மனிதர்களோ, அமைப்புகளோ மிக மிகக் குறைவு.

 இதைப் பற்றி நடுநிலையானக்  கருத்தைக் கொண்டிருப்பவர்கள் கூட, தன் சாதிக்காரனா, இல்லை அடுத்த சாதிக்காரனா என வரும்போது, இருவருமே தனக்கு நெருங்கியவர்கள் இல்லாத பட்சத்தில், தன் சாதிக்காரனுக்கு ஆதரவான நிலை எடுப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.  என் வீட்டில், எந்தக் கூட்டணியில் இருந்தாலும்,  பாமக எங்கள் தொகுதியில் போட்டியிட்டால்,  எங்கள்  குடும்பத்தில் அனைவரும் பாமகவிற்குத் தான் வாக்களிப்பார்கள்.

நான் கேட்டால், பெரும்பாலும் சரியான காரணம் எதுவும் அவர்களால் சொல்லமுடிந்ததில்லை, ‘நமக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்த கட்சி’ என்பதைத் தான் என் தந்தை அடிக்கடி சொல்லுவார். சரி, அவர்களாவது போன தலைமுறை என்று விட்டுவிடலாம் . என் பெரியப்பாவின் மகன்களும்,  தங்கள் சாதியினர் என வரும்போது காட்டும் அக்கறைதான் என்னை கவலை கொள்ள செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், நான் ஏதாவது சொல்லப் போனால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘நீ பெருசா படிச்சிட்டங்கறதுனால, சொந்தக் காரங்க எல்லாம் இல்லைன்னு ஆகாது. சொந்தத்துக்கு அப்புறம்தான் எல்லாம்’. நேற்று வரை யாரென்றே தெரியாமல் இருந்தவன், நமது சாதி என்றவுடன் எப்படி மாமா, மச்சான், பங்காளி ஆகிறார்கள் என்பது எனக்கு இன்றுவரை விளங்காத ஒன்று.

 இது படிக்காமல் கிராமத்தில் இருப்பவர்களிடம் மட்டும் இருந்திருந்தால், மக்களுக்கு படிப்பறிவு வரும்போது இதெல்லாம் மறைந்துவிடுமென  விட்டுவிடலாம்.   ஆனால், படித்துவிட்டு தகவல் தொழிற்நுட்பத் துறையில் வேலை செய்யும் நண்பர்கள் சிலரே சாதிகளையும் மதத்தையும் முக்கிய விஷயமாகப் பேசும்போதுதான்,  சாதி, மதம் என்பவை எப்பொழுதுமே அழிக்க முடியாத விஷயமாக மாறிவிடுமோ என்ற பயம் வருகிறது.

புதிதாகக் கல்லூரியில் முதுகலை கணினி பிரிவில் சேர்ந்திருந்த நண்பனிடம், கல்லூரி எல்லாம்  எப்படியிருக்கிறது என்ற கேள்விக்கு அவன் அளித்த பதிலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை.  ‘எங்க சாதிக்கார பசங்க நாலுபேரு இருக்காங்க. அவனுங்க கூட சேர்ந்தாச்சு. அவனுங்களும், கிளாசில இருக்க எங்க சாதிப் பொண்ணுங்க யாருன்னும் சொல்லிட்டாங்க. அவங்கள மட்டும் சைட் அடிச்சுட்டு போயிட்டு இருக்க வேண்டியதுதான்’. இதுதான் அவன் அளித்த பதில். நிச்சயமாக முதுகலைப் படிக்கும் மாணவனிடம் இந்த அளவுக்கு சாதிப் பற்றை நான் எதிர்பார்க்கவில்லை.

ஒருமுறை நண்பர்கள் சில விஷயங்களை விவாதித்து கொண்டிருந்தோம். அதில் நான், ‘நம்மையே ஒருவன்  தீட்டு என்று கோவில் கருவறைக்குள்  அனுமதிக்க மாட்டேன் என்கிறான். நாம் இன்னும் சிலரை, நம்மைவிட தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்குகிறோம்’  எனக்கூறியபோது நண்பன் ஒருவன், “தாழ்த்தப்பட்டோர்களுக்கான அமைப்புகள் எதுவும் இல்லை என்றால், நாட்டில் சாதிப் பிரச்சனைகள் எதுவும் வராது. நம்மில் யாரும் கருவறைக்குள் நுழையவிடவில்லை என்று சண்டையிடுவதில்லை,  நம்மைப் போல் ஏன் அவர்கள் இருக்கமாட்டேன் என்கிறார்கள்”  என்றான்.

அதற்கு  நான், “நாம் முதுகெலும்பில்லாமல் இருக்கிறோம் என்பதற்காக, அனைவரையும் அவ்வாறு இருக்கச்சொல்ல முடியாது” எனக் கூறினேன். சூடாகப் போன இந்த விவாதத்தில், கடைசி வரை அவன் இந்த போராட்டங்களின் அவசியத்தை புரிந்து கொள்ளவே இல்லை. இவர்களைப் போன்று சமுதாயத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் களைய நடக்கும் போராட்டங்கள் வீண் வேலை எனக் கருதுபவர்களும் நிறைய உண்டு.

 இது இந்து மதத்தில் மட்டுமில்லை. கிருத்துவ மதத்திலும் உள்ளது.  என்னுடன் பேசிக் கொண்டிருந்த  ரோமன்  கதோலிக்  பிரிவை சேர்ந்த ஒரு  பெண், மற்ற பிரிவினரின் நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் பெரிதாக சாடினாள். CSI பிரிவை சேர்ந்த இன்னொரு பெண்ணோ RC இன் குறைகளை மட்டுமே பேசினாள். முஸ்லிம் மதத்திலும் சாதி வாரியான வேறுபாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

தங்களுக்குள்ளேயே இவ்வளவு பிரிவுகளைக் கொண்டிருக்கும் இவர்களுக்கு (அனைத்து மதத்தினரும்தான்),  மற்ற மதத்தினர்  என்று வரும்போது மட்டும், நாமெல்லாம் ஒரு மதத்தினர்  என்ற  உணர்வு எங்கிருந்து வருகிறதோ  தெரியவில்லை.  இவர்களுக்கு நாமெல்லாம் ஒரே மனிதர்கள்  என்னும் உணர்வு எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை.  

முஸ்லீம்களை எனக்குப் பிடிக்காது எனச் சொல்கின்ற பலரை நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய  ஆச்சர்யமெல்லாம் ஒரு சாதி அல்லது மதத்தை வைத்து எப்படி ஒரு தனி மனிதனின் சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும் பலர் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான்.

இது கிராமத்தில் இருக்கும் சென்ற தலைமுறைக்காரர்களில்  இருந்து, ஐடி துறையில் இருக்கும் நவீன இளைஞர்கள் வரை தொடர்கிறது. தங்களைப் பகுத்தறிவாளர்கள் எனச் சொல்பவர்களும் இதில் அடக்கம். பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், ஒரு மனிதன் பார்ப்பனன் என்பதற்காகவே அவனை வெறுக்கிறார்கள் என்பதும் உண்மை.  ‘பிறப்பால் சாதி, மதப் பிரிவினைகள் இருக்கக்கூடாது’ என்னும் கருத்தை வலியுறுத்தும்  இவர்களும்  பிறப்பை வைத்து தானே ‘இவன் பார்ப்பனன்’ என முடிவு செய்து வெறுத்து ஒதுக்குகிறார்கள். இதன் நியாயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை.

இது போன்ற நிலைப்பாடுகளால் இதை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் அதிகம்.  இந்து மதப்பற்றாலர்களை இழுக்க ஒரு கூட்டமும், சிறுபான்மையினரை இழுக்க ஒரு கூட்டமும் என இந்திய அளவிலும் அனைத்து கட்சிகளும் சாதியையும், மதத்தையும் வைத்தே பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. மொத்தத்தில் சாதி, மதங்களை ஆதரித்தோ, எதிர்த்தோ அரசியல் செய்வதற்கு நிச்சயம் இவர்களுக்கு இவை தேவைப்படுகிறது.  பகுத்தறிவாளர்கள் சொல்லும்படி, பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் முன்னேறினாலும், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என இவர்கள் வைத்திருக்கும் இரு பிரிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சாதி மதங்கள் இல்லாத உலகு என்பது  கற்பனையாகவே  போய்விடுமோ என எண்ணத் தோன்றுகிறது.  முழுமையாக சாதி, மதங்களை ஒழிக்க அதைப்பற்றியே துளியும் பேசாமலிருப்பது அவசியமாகிறது. ஆனால் அதை செய்யும் எந்த அரசியல் அமைப்பையும் எனக்கு யாரும் இதுவரை அறிமுகப் படுத்தவில்லை.

சாதி, மதங்களின் அரசியல்