தந்தை பெரியார் – அழிக்க முடியாத ஒரு பிம்பம்

செப் 17, திராவிடர் தலைவர் பெரியாரின் பிறந்த நாள். இன்று பலருக்கும் பெரியார் என்றால், ‘பார்ப்பனரை பழிப்பவர்’, ‘நாத்திகர்’, ‘திராவிடக் கட்சிகளின் மூலமான திராவிடர் கழகத்தை நிறுவியவர்’ என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பெரியாரின் அரசியலும், தொண்டும் இவைகளைத் தாண்டியது. இதைத் தெரிந்துகொள்ள பெரியாருக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பெரியாரின் பாதிப்புகள் தமிழகத்தின் அரசியலிலும், சமூகத்திலும் எவ்வளவு எனப் புரிந்துகொள்ள முடியும். பல சிறந்த நூல்கள் உள்ளன. முகப்புத்தகத்துக்கு ஒதுக்கும் நேரத்தில் 1 சதவீத நேரம் போதும் இவரைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள.

3% பார்ப்பனர்கள் அரசு வேலைகளிலும், மேற்படிப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் குரல் கொடுத்து, இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தவர்கள் பெரியாரும், அவர் வழித்தோன்றல்களும்தான்.

இந்தியாவிலே தமிழர்கள் மட்டும்தான் சாதிப்பெயரை தனது பெயருடன் சேர்க்காமலிருக்கும் தைரியத்தை பெற்றிருக்கின்றனர். இதைப் பெருமையாக வேறு மாநில மக்களிடம் கூறும் பலருக்கும் (சில பார்ப்பனர்கள் கூட), இது பெரியாரினால் நடந்தது என்பது தெரிவதில்லை.

பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே நுழைவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரியாரின் போராட்டங்கள் உதவியிருக்கின்றன. பார்ப்பன ஆதிக்க நீதித்துறை இல்லாமலிருந்திருந்தால், கருவறைக்குள்ளும் பலர் நுழைந்திருக்க முடியும். விரைவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் நுழைவார்கள் என நம்புகிறேன்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தின் பங்கைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று ஏதோ இந்தப் போராட்டத்தால் தங்களது வாழ்வே போனது போல் புலம்பிக்கொண்டு இருக்கும் பலரும், இந்த போராட்டம் நடக்கவில்லையென்றால் தமிழருக்கான அடையாளத்தை இழந்திருப்போம் என்பதையும், இந்தி இல்லாத்தால்தான் தமிழர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்

இங்கே அலுவலகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நான் பேசினால் என்னை ஏதோ ஒரு பிற்போக்குவாதி போல் பார்க்கும் பலரும், இட ஒதுக்கீடு இல்லையென்றால் இன்றும் அவர்களின் தந்தை தொழிலைத்தான் செய்துகொண்டிருந்திருப்பர் என்பதை மறந்துவிடுகின்றனர். இவர்களெல்லாம் பெரியாரின் காலத்திற்கு கூட செல்லவேண்டியதில்லை. சற்றே கர்நாடகப் பக்கம் வந்து பார்க்கட்டும். என்னுடன் பணிபுரியும் 10 கன்னடர்களில் 9பேர் பார்ப்பனர் மற்றும் இதர மேல் சாதியினர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தேடித்தான் காணவேண்டியுள்ளது இங்கே.

நேற்றைக்கு அரசியலுக்கு வந்த பலரும் பெரியாரை கன்னடர் என்றும், திராவிடர் அரசியலால்தான் தமிழர்களுக்கு எல்லாம் போனதாகவும் புலம்புவது வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம் விடக் கொடுமை, ‘இந்தியை கற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்’ என முழங்கிய மபொசி போன்றோரை இவர்கள் தமிழர்களின் தலைவர் என‌ சொல்லுவதுதான்.

பெரியாரைப் பற்றி யார் என்ன சொன்னால் என்ன, பெரியார் அழிக்கமுடியாத ஒரு பிம்பம். அவரின் நடவடிக்ககள் தமிழக மக்களிடையே உண்டாக்கிய தாக்கங்கள் அப்படி. எனவே இது போன்றோரின் பேச்சுகளூக்கும் செயல்களுக்கும் பதிலடி கொடுப்பதை விடுத்து பெரியாரின் சீர்திருத்தங்கள் பலவும் தமிழர்களின் நடைமுறை வழக்காக மாறும் நாளை நோக்கி பிரயாணிப்போம். அதுதான் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை. தமிழகத்தில் புற்றீசல் போல சாதிக்கட்சிகள் முளைத்து மறைமுகப் பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்கும் இந்த காலத்தில் இதுதான் மிகவும் முக்கியமானப் பணி.

Advertisements
தந்தை பெரியார் – அழிக்க முடியாத ஒரு பிம்பம்

திராவிடமும் தமிழ் தேசியமும்

சமீப காலமாக திராவிடர் இயக்கங்களும், பெரியாரியக் கருத்துக்களை  ஏற்றுக்கொண்டவர்களும்   தமிழ்  தேசியத்துக்கு  எதிரானவர்கள்  என்ற   மாயையை  சில  ‘தூய’  தமிழர்  அமைப்புகள்  உருவாக்கிவருகின்றன.  மேலும் இந்த அமைப்புகள் இன்னும் ஒரு படி மேலே போய் ஏதோ இப்பொழுது தமிழர்கள் அனுபவிக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் ‘திராவிடர்’ கொள்கைகள்தான் காரணம் எனவும், அதை விடுத்து தூய தமிழர் அமைப்புகளின் கொள்கைகள் மூலமாகவே தமிழர்களின் நலன்கள் காக்கப்படும் என்பது போலவும் பேசும் பொது இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

இந்த அமைப்புகளை பொருத்தவரை, எவன் ஒருவனுக்கு தமிழ் தாய் மொழியாக இருக்கிறதோ அவன் மட்டுமே நட்பு கொள்ள ஏற்றவன். மற்ற ஆட்களை எல்லாம் தமிழகத்தை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமா என்ன?

பிறகு, ஒவ்வொரு தலைவர்களின் பின்னணியையும் ஆராய்ந்து இவர் தெலுங்குக்காரர், இவர் கன்னடிகர் எனவே இவர்களெல்லாம் நம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள தகுதியில்லாதவர்கள் என்ற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இவர்களின் ஆய்விலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்ட பெரியாரும் தப்பவில்லை.

சமீபத்திய நாம் தமிழர் அமைப்பின் ஆய்வறிக்கை பெரியாரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல், ஏதோ அவரின் கொள்கைகள்தான் நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என குறிப்பிட்டிருந்ததை அறிந்த போது, சீமான் மேல் இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது. நாம் தமிழர் அமைப்பின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் அவர்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சமீப காலமாக அவர்களின் நடவடிக்கைகள், இவர்களுக்கும் சிவ சேனா, MNS போன்ற அடிப்படைவாத அமைப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபிக்கின்றன.

பெரியார், திராவிடர் எனக் குறிப்பிட்டது பார்ப்பனர் அல்லாத மக்களைத்தானே தவிர, அண்டை மாநில மக்களை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற பொருளில் அல்ல என்பதை பலர் எடுத்துரைத்தும் ஏன் இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

பெரியார் தமிழ் தேசியத்தை ஆதரித்தவர் என்பது பெரியாரை உண்மையிலேயெ பின்பற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். பெரியார் சொன்ன தமிழ் தேசியத்துக்கும், இவர்கள் சொல்லும் தமிழ் தேசியத்துக்கும் வித்தியாசம் உண்டு. பெரியார் கனவு கண்ட தமிழ் தேசம் தமிழகத்தில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் சாதி, மதம் மொழி கடந்து இணைக்கும் ஒரு நாடு. ஆனால் தற்போது நாம் தமிழர் போன்ற அமைப்புகள் சொல்லும் தமிழ் தேசத்தில் தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை.

இதைவிடக் கொடுமையான விஷயம், சிங்களர்களை திராவிடர்கள் எனக் குறிப்பிடுவதுதான். சிங்களர்களை திராவிடர்கள் எனக் கருதமுடியாது என பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கும் போது, இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி ஒரு தகவல் கிடைத்தது என தெரியவில்லை.

நாம் தமிழர் அறிக்கையின்படி, இந்து மத சம்பிரதாயங்களில் மூழ்கித்திழைத்த பார்ப்பனர் உள்ளிட்டவர்களைக் கூட அவர்கள் தமிழர்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் தமிழகத்தில் வாழும் மற்ற திராவிட மொழிகளை தாய்மொழியாகவும், தமிழை வழக்கு மொழியாகவும் கொண்ட மக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை படித்தபோது இவர்களின் மூடத்தனத்தை இன்னும் எவ்வளவு பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது என்றே தோன்றுகிறது.

இவர்கள் கூறும் பழமைவாத பாசிச தமிழ் தேசத்துக்கு, இப்போதிருக்கும் இந்திய தேசமே தேவலாம். தமிழ் தேசத்தின் உண்மையான நோக்கமே ஆரிய மூடப் பழக்க வழக்கங்களான சாதி பேதங்கள், பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றை  அழித்து, அனைவருக்கும் சரிசமமான வாழ்க்கையை அழிப்பதுதான், அதற்கு பெரியாரின் திராவிடர் கொள்கைகளைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்பதை இவர்கள் எல்லாம் எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை.

திராவிடமும் தமிழ் தேசியமும்

கடவுளும் மதமும்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு கடவுளை விட, கடவுளின் பெயரால் செய்யப்பட்ட மூடநம்பிக்கைகளும், பார்ப்பன ஆதிக்கமுமே என்பது எவருக்கும்தெரியாததல்ல. திராவிட அரசியலின் அடிநாதமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதும்தான்.

ஆனால் சமீப காலமாக ஒரு புது மாதிரியான கடவுள் மறுப்புவாதிகளை பார்க்கிறேன். பெரும்பாலும்பார்ப்பனர்களைக் கொண்ட இந்த வகை கடவுள் மறுப்புவாதிகளை முதலில் வெளியிலிருந்து பார்த்த போது, ஒருவேளை இவர்களெல்லாம்நாம் எதிர்பார்த்த சமநிலையான புதிய சமூகத்தின் முன்னோர்களோ என நினைக்கத் தோன்றியது. அவர்களிடம் இந்து மதத்தினைப் பற்றி பேசும் வரை.

இவர்களை பொருத்தவரை, இந்து மதம் என்பது வாழும் வழிமுறையாம். கடவுள் மறுப்புக்கும் இந்து மத நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ஆனால் அதே சமயம் கிருத்துவ, இஸ்லாமிய சமயங்களை பின்பற்றுவது முட்டாள்தனமாம். இதைக் கேட்டவுடன் புதிய சமூகத்தின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் தளர்ந்தது எனக்கு.

இவர்களுக்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் படித்த ஆதிக்கவாதிகள் அவ்வளவுதான். இவர்களைப் போன்ற ஆட்களிடமிருந்து உண்மையான பகுத்தறிவாளிகளை இனம் காண்பது சற்றே கடினம்தான்.

கடவுளை ஒழித்தால் சாதிகளை அழித்துவிடலாம் எனத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையை கையிலெடுத்தார் பெரியார். ஆனால் இப்போதோ கடவுளைக் கூட ஒழித்துவிடலாம் ஆனால் சாதியையும் அதன் காரணியாக விளங்கும் மதத்தையும் ஒழிக்க முடியாது போல.

கடவுளும் மதமும்