கிராமத்து பேருந்து – சில நினைவுகள்

சிறு வயதில் பேருந்தில் செல்வது என்பதே அலாதியான இன்பம். ஆனால் எங்கள் கிராமத்திலேயே 12ஆம் வகுப்பு வரை பள்ளி இருந்தால், பேருந்து பயணம் என்பது கல்லூரிக்கு போகும் வரை அரிதான ஒன்றே. 12 வயது வரை தனியாக பேருந்தில் பயணம் செய்ததில்லை நான். முதல்முறையாக தனியாக பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனை செய்ததைப் போன்ற ஒரு ஆனந்தம். இத்தனைக்கும் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 10கிமீ மட்டுமே. ஆனால் அந்த 10கிமீ தூர பயணத்தைப் பற்றி நாள் முழுக்க நண்பர்களிடம் பேச விஷயங்கள் இருந்தன.

கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தது முதல் தினமும் பேருந்து பயணம் செய்யவேண்டியதாகியது. அந்த அரை மணி நேரப் பயணத்தில் பார்க்கும் நிகழ்வுகளை தனித்தனி சிறுகதைகளாகவே எழுதலாம்.

கவந்தப்பாடியில் இருந்து எங்கள் கிராமம் வழியாக பவானி செல்லும் K4. அந்த பேருந்துக்கு இரண்டு நிமிடம் முன்பு ஒரு அரசுப் பேருந்தும், இரண்டு நிமிடம் கழித்து ஒரு தனியார் பேருந்தும் இருந்ததால், இது எப்பவுமே கூட்டமில்லாமல்தான் வரும். எனவே நான்  பெரும்பாலான சமயம் இந்த பேருந்தில்தான் செல்வேன். பேருந்தின் நடத்துனர் அடிக்கடி, “என்னை வேற நல்ல ரூட்டுக்கு மாத்த மாட்டேங்கிறாங்க. இந்த ரூட்டுல பேட்டாவே வர மாட்டேங்குது” எனப் புலம்பினாலும், பஸ் பாஸுடன் ஏறும் என்னை ஒரு புன்னகையுடன் வரவேற்பார். பேருந்தை சிலநாட்கள் தவறவிட்டு, அடுத்த நாள் ஏறும் போதெல்லாம், “நேத்து ஏன் வரலை?” எனக் கேட்பார். 

சுமார் 5 வருடங்களுக்கு பிறகு இந்த முறை ஊருக்கு போயிருந்த போது அதே பேருந்தில் ஏறியபோது, அவரை மறுபடியும் சந்த்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு நாளில் மறந்திருப்பார் என நினைத்தேன். என்னை பார்த்தவுடன் அதே சிநேகப் புன்னகையுடன் நலம் விசாரித்தார்.

எங்கள் கல்லூரிக்கு தினமும் பவானியில் இருந்து காலையில் சிறப்பு பேருந்து செல்லும். கல்லூரியில் படித்த நான்கு வருடங்களில் இந்த பேருந்தை தவறவிட்ட நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமீபத்தில் நண்பன் ஒருவனிடமிருந்து அழைப்பு. பல நாள் கழித்து திடீரென்று கூப்பிடுகிறானே என்னவென்று எடுத்தால், “மச்சான், ஊருக்கு வந்தேன் B16 பாத்தவுடனே ஞாபகம் வந்துது, அதுதான்டா கூப்பிட்டேன்” என்றான். இவனைப்போன்றே  பவானி பேருந்து நிலையத்திற்கு 8 மணிக்கு வந்து, 8:15க்கு வரும் இந்த பேருந்திற்காக காத்திருக்கும் 15நிமிடங்களில் பேசி நட்பான நண்பர்கள் பலர்.

B16  என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அதன் நடத்துனர்களில் ஒருவர்தான். நான் சேர்ந்த முதல் வருடத்தில் இருந்து எங்களிடம் “கல்லூரி எப்படி?”, “இங்கு படித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி?” என்று விசாரித்த அவர், மூன்றாம் வருடத்தில் எங்களிடம் அவரது மகனை அறிமுகப்படுத்தி, “இவன் உங்க காலேஜில ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கான்” என சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த பெருமையும் மகிழ்ச்சியும் இன்னும் என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு முறை மகன் பணம் கேட்கும் போதும், முன்னால் உக்கார்ந்திருக்கும் அவனுக்கு தெரியாமல், “ஏப்ப இதுக்கு காசு கட்டணுமாமே? அப்படியா?” எனக் கேட்டுவிட்டு, தனது மகன் சொன்னது உண்மைதான் எனத் தெரியும்போது, “நான் கேட்டேன்னு அவன்கிட்ட சொல்லாதீங்க்கப்பா, வருத்தப்படுவான்” என சொல்லி நெகிழ வைப்பார்.

எங்கள் கிராமத்திலிருந்து ஈரோட்டுக்கு அரை மணி நேரத்திற்க்கு ஒரு பேருந்து புறப்படும். ஈரோட்டிற்கு வேலைக்கு செல்லும் அனைவரும் இவைகளில்தான் பயணிப்பர். இவை அனைத்தும் தனியார் பேருந்துகள் என்பதால் நடத்துனர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். கிராமத்திலிருந்து செல்லும் பல பெண்களுக்கு இவர்கள்தான் ஹீரோ. சிலபேர் தான் தினம் செல்லும் பேருந்தின் நடத்துனர்களையே திருமணமும் செய்தனர்.

இந்த பேருந்துகளில் செல்லும் நண்பர்கள் தினமும் சொல்லும் நிகழ்வுகளை வைத்து தனி திரைப்படமே எடுக்கலாம். இந்த பேருந்தில் நடத்துனராக இருக்கும் என் நண்பன் ஒருவனும் இதே போல் தன்னுடன் பேருந்தில் தினமும் கல்லூரிக்கு வந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டான். எப்படிடா? எனக் கேட்டால், “தெரியல மச்சி, தினமும் என்கிட்ட டிக்கட் வாங்கறப்ப சிரிக்கும். கொஞ்ச நாளா நல்லா பேசவும் ஆரம்பிச்சிட்டோம். எல்லாரும் ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவே உண்மை ஆயிடுச்சு.” என்பான். காதல் என்றால் அப்படி இப்படி என உளறிக்கொட்டும் திரைப்படங்களைப் பார்த்து பழகிப்போன நமக்கு இது போன்ற எளிமையான எந்த சினிமாத்தனமும் இல்லாமல் ஜெயித்த காதல்கள் ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும்.

ஐந்து ரூபாய் டிக்கெட்டிற்கு பத்து ரூபாய் கொடுத்தாலே எரிந்து விழும் நடத்துனர்களைப் பார்த்து பழகியவர்களுக்கு, நாலரை ருபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் சில்லரை கொடுக்கும் எங்களூர் நடத்துனர்கள் ஆச்சரியமானவர்களாகத்தான் தெரிவார்கள்.  சில நேரங்களில் மூணரை ருபாய்க்கு 100 ரூபாய் கொடுக்கும் போது, நாளைக்கு 7 ருபாயா கொடுப்பா எனச் சொல்லியவர்களும் உண்டு.

பேருந்தில் ஏறியவுடன் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பக்கத்தில் இருப்பவர் பற்றிக்கூட கவலைப்படாமல் போய்க் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் இந்த நினைவுகள் எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருக்கின்றன. ஆனால் இன்னமும் கிராமத்தில் உள்ள நண்பர்கள், அன்று பேருந்தில் நடந்த சம்பவங்களை விவாதித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். சில மனிதர்கள் எப்போதும் மாறுவதில்லை.

Advertisements
கிராமத்து பேருந்து – சில நினைவுகள்

எது உண்மையான பாசம்?

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை, உடன் வேலை செய்யும் பெண், வலையகத்தில்  ஏதோ வண்ண கயிறுகளைத் தேடிக்கொண்டிருந்தாள். என்ன‌  செய்கிறாயென‌க் கேட்டபோது, ரக்ஷா ப‌ந்த‌ன் திருவிழாவ‌ன்று தன் அண்ணனுக்குக் கட்ட‌‌ப் பொருத்த‌மான‌ ராக்கியைத் தேடிக்கொண்டிருப்ப‌தாக‌ சொன்னாள்.

ஒருவழியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து என்னிடம் காட்டி, ‘எப்படி இருக்கு?’ எனக் கேட்ட போது, வழக்கம்போல என் கண் முதலில் என்ன விலை என்பதைத்தான் தேடியது. $18 (இந்தியாவில் வாங்க‌, ரூ.1000) என்ற விலையைப் பார்த்ததும், சற்றே அதிர்ச்சியானேன். என்னதான் இந்த பெண்களின் அநாவசிய செலவுகள் எனக்குத் தெரிந்திருந்தாலும், ஒரு கலர் கயிற்றுக்கு 1000 ரூபாய் செலவளிக்கும் அளவுக்கு முட்டாள்களாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

ஒரு ராக்கிக்கு எதற்கு இவ்வளவு செலவு எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இன்னுமொரு அதிர்ச்சி. ‘நாம எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா செலவு செஞ்சு ராக்கி வாங்கிக் கட்டறமோ, அவ்வள‌வு அதிக விலையில் சகோதரனிடம் பரிசு வாங்கலாம், அதனால்தான்’, இதுதான் அவர்களின் பதில். சகோதரப் பாசத்தையும்கூட ஏதோ வியாபாரம்போல பார்க்கும் இந்த மனநிலையை எண்ணி வருத்தம் அடைவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை என்னால்.

எவ்வளவு பேசிப் பார்த்தும், இந்த வியாபார உலகம் அவர்களிடம் உண்டாக்கி வைத்திருக்கும் மாயத்தோற்றத்தை போக்கமுடியவில்லை. சரி எப்படியோ தொலைந்து போங்கள் எனக்கூறிவிட்டு ஊருக்கு செல்ல பேருந்து ஏறினேன்.

ஓசூரில் இருந்து சேலத்துக்கு பயணிக்கையில், பக்கத்து சீட்டில் உட்கார்த்திருந்த பையன், ‘ஏங்க‌ சேலத்தில இருந்து மதுரைக்கு பஸ் இருக்குமில்ல? இங்கிட்டு இருந்து கெளம்பிற பஸ்ஸை விட்டுட்டேன்’ எனக் கேட்டான். ஓசூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கிறானாம்.

டிக்கெட்டிற்கு, வழக்கமாக வாங்குவதைவிட 5 ரூ அதிகமாக (சிறப்பு பேருந்தாம், அதெப்படி கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் எல்லா பேருந்தும் சிறப்பு பேருந்தாகிறது என்பது இன்றுவரை எனக்கு புரியவில்லை) வாங்க, ‘ஒரே பஸ்ஸில ஏறாமல் மாறி போறதிலயே அதிகக் காசு போகும், இதுல ஸ்பெஷல் பஸ்ஸுன்னு இவனுங்க வேற புடுங்கறானுங்க’ எனப் புலம்பிக்கொண்டே டிக்கெட் எடுத்த அவனிடம் பேச்சு கொடுத்ததில் அவன் சொன்ன‌ சில விஷயங்கள்.

‘மூணு நாலு மாசத்துக்கு பெறவு வீட்டுக்கு போறேன். சும்மா சும்மா வீட்டுக்கு போயிட்டு வந்தா வாங்கற சம்பளம் அதுக்கே சரியா போயிடும். அப்பறம் எப்புடி நாலு காசு பாக்கிறது? இப்பயே,  பாத்து நாளாச்சு ஊருக்கு ஒருவாட்டி வந்துட்டுபோன்னு தங்கச்சி கூப்பிட்டுக்கிட்டே இருந்தா(ள்), அதுதான் போயி அந்த புள்ளய பாத்துட்டு வந்துபுடுவோம்னு போயிட்டு இருக்கேன்’.

கிறுக்குத்தனமாக நான், ‘ரக்ஷா பந்தனுக்கா?’ எனக்கேட்க அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்து, ‘அப்படீன்னா?’ என்றான். தேவையில்லாமல் அதைப்பற்றி பேசி என் கிறுக்குத்தனத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பாமல் ‘ஒண்ணுமில்லை’ எனக்கூறிப் பேச்சை மாற்றினேன்.

எனக்கென்னவோ அண்ணனுக்காக 1000ரூபாய்க்கு ராக்கி வாங்கியத் தங்கையின் பாசத்தில் தெரிந்த போலித்தனம், ரக்ஷா பந்தன் என்றால் என்னவென்றே தெரியாவிடினும், அண்ணனை பார்ப்பதே மகிழ்ச்சியான விஷயமாய் எண்ணும் அந்த முகம் தெரியாத மதுரைத் தங்கையின் பாசத்தில் தெரியவில்லை.

இது போன்ற உண்மையான பாசம் கிடைக்குமென்றால் ஏழையாக இருப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. பணம் பெருகப்பெருகப் போலித்தனமும் பெருகுமென்றால், அந்தப் பணத்தை ஏன் விழுந்துவிழுந்து சம்பாதிக்க வேண்டும்?

எது உண்மையான பாசம்?

பேருந்தில் பார்த்த ஒரு பெண்

அபூர்வமாக வாய்க்கும் பகல் பயணம் அது. வேலை காரணமாக பெரும்பாலும் இரவுப் பயணமே செய்யும் காலச்சூழலில், ஒரு முறை பகலில் பயணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. பகல் பயணத்தின் போது பேருந்துகள் பெரும்பாலும் சிறு நகரங்களுக்கும் செல்லும் என்பதால் நிறைய புது இடங்கள் தெரியவரும். இரவு அளிக்கும் இருட்டென்னும் ஆடையின்றி நிர்வாணமான இயற்கை, தன் அழகை அனைவரும் கண்டுகழிக்க அனுமதிக்கும் பகலில் பயணம் செய்வது உண்மையிலேயே நல்ல நிகழ்வுதான். பல விந்தை மனிதர்களையும் காணமுடிகிறதே.

பயணம் என்பதே ஒரு இனிமையான அனுபவம்தான். அது பேருந்தாக இருந்தாலும் சரி, ரயிலாக இருந்தாலும் சரி. விமானத்தில் இன்னும் பயணம் செய்ததில்லை என்பதால் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும், பேருந்து பயணத்திலும், புகைவண்டி பயணத்திலும் சந்திக்கும் விதவிதமான மனிதர்களையும், காணும் பல அற்புத காட்சிகளையும் விமானத்தில் செல்லும்போது நிச்சயம் காண‌முடியாது.

பெரும்பாலும் சொந்த ஊருக்கு பேருந்து பயணமே. முன்பதிவு செய்து செல்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் மேற்சொன்னவைதான். முன்பதிவு செய்து பிரயாணிக்கும்போது ஏறுமிடம், இறங்குமிடம் தவிர வேறு தெரிவதில்லை. அந்த மாதிரி பயணத்தில் பார்த்த ஒரு விந்தையான பெண்ணை பற்றிய பதிவுதான் இது.

அழகிய பெண் அவள். உலக அழகியையெல்லாம் உதாரணமாகக் கொள்ளத் தேவையில்லை. பார்த்தவுடன் இன்னொருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு இலட்சணமான பெண். பெங்களூரிலிருந்து சேலம் செல்கிற பேருந்தில் கிருஷ்ணகிரியில் ஏறினாள். இவளுடன் சேலம் வரை ஒரே பேருந்தில் பிரயாணிக்கிறோம் என்ற எண்ணமே மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணம் கலையாக இருந்தாள்.

அவளுடைய தந்தைக்கும் தன் மகளைப் பற்றிய என் போன்றவர்களின் எண்ணங்கள் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். நடக்கவே சிரம‌ப்பட்ட போதிலும் பேருந்தில் ஏறி, அவள் எங்கு அமரவேண்டும், எங்கு அமர்ந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பது வரை பார்த்து பார்த்து ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, கீழிறங்கினார். கீழிறங்கியும் சென்ற பாடில்லை. அவள் அமர்ந்திருந்த இருக்கையின் சாளரத்தின் அருகே நின்றவாரு மகளுக்கு அறிவரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். தந்தைக்கே உரிய அக்கறையுடன் அவர் சொல்லிக் கொண்டிருந்த‌ அறிவுரைகளைக் கேட்டபோது, அந்தப் பெண் இப்போதுதான் முதல்முறையாக தனியாக செல்கிறாள் எனத் தோன்றியது.

ஒரு வழியாக பேருந்து கிளம்பி கிருஷ்ண‌கிரி எல்லையைத் தாண்டியவுடன், அந்தப் பெண் படபடவென பின்னால் வந்தாள். நான் ஒரு வேளை எதையாவது மறந்துவிட்டாளோ என்னவோ என பார்த்தபோது, எனக்கு சற்று முன்னால் இருந்த பையனுடன் உட்கார்ந்துகொண்டு, சேலம் வரும் வரை ஒரே கொஞ்சலும், கெஞ்சலுமாக பேருந்தில் அனைவருக்கும் தெரியும்படி, விளையாடிக் கொண்டு வந்தனர்.

என்னைப் போல, அவள் ஏறிய போதும், அவள் அப்பாவிடம் பேசிய போதும் கவனித்த இன்னும் சிலரும், நகர எல்லையைத் தாண்டியவுடன் அவளின் அடக்கமும், பணிவும் எங்கே போனது எனத் தெரியாமல் என்னைப் போலவே திகைத்திருந்திருந்தனர். பாவம் அவளின் தந்தை. இவளின் நடிப்புத் தெரியாமல், இவள் செல்லுமிடத்திற்கு சென்றுவிட்ட செய்திவரும் வரை தவித்துக்கொண்டு இருந்திருப்பார்.

புகைப்படத்திற்கு நன்றி : Flickr.com மற்றும் புகைப்படக் கலைஞர்

பேருந்தில் பார்த்த ஒரு பெண்

நான் கவிதை எழுதப் போறேன்

‘நான் கவிதை எழுதப் போறேன்.’

‘எதுக்கு உனக்கு இந்த வெட்டி வேலை. உனக்கு எது வருமோ அதைப் செய்ய‌வேண்டியதுதான?’

‘எவ்வளவு நாளைக்குத்தான் மொக்கை மொக்கையா எழுதறது. என் பதிவை படிக்கிற சிலரும் இனிமேல் வரமாட்டாங்க. அதனால், கவிதை எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். கவிதை எழுதறவங்க பதிவையெல்லாம் பார்த்திருக்கேன். ஒரு நாலுவரி நச்சுன்னு எழுதிட்டு, தினம் ஒரு பதிவு போட்டுடறாங்க. நம்மள மாதிரி மொக்கை போடறவங்கதான் புதுசு புதுசா யோசிக்க வேண்டியிருக்கு’

‘சரி.. எங்க ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்’

‘நீ காற்று, நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்’

‘டேய் பரதேசி நாயே, இது சினிமா பாட்டுடா. இப்படியெல்லாம் காப்பியடிச்ச, அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்து அடிச்சுட்டு போவாங்க‌’

‘அய்யய்யோ, அப்ப கவிதை வரணும்ன்னா என்ன பண்ணனும்’

‘காதலிக்கணும்ன்னு பல பேரு சொல்லறாங்க‌’

‘சரி, அப்ப நான் காதலிக்க போறேன்’

‘காதலிக்க போறீயா? உன் முகத்தை என்னிக்காவது கண்ணாடியில பார்த்திருக்கியா. அப்படியே முகம் ஒரு பிரச்சினை இல்லைன்னாலும், பார்க்கிற பொண்ணையெல்லாம் கேவலமா ஓட்டிட்டு இருந்தா எந்த பொண்ணு உன்னை லவ்வும்’

‘அதுவும் சரிதான், ஓகே இனிமேல் சிறுகதை எழுதப்போறேன்.’

‘சிறுகதையா. இப்ப கதை எழுதறதெல்லாம் சாதாரண விஷயமில்லை. யாருக்கும் புரியாத மாதிரி எழுதினால்தான் எழுத்தாளர்னே ஒத்துக்கிறாங்க. எதேதோ பின் நவீனம், முன் நவீனம்ன்னு எல்லாம் பேசறாங்க. உனக்கு ஒழுங்கா தமிழில் தப்பில்லாம டைப் அடிக்கவே வராது. இதுல இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நீ கதை எழுத ஆரம்பிக்கறதுக்குள்ள, புதுசா எதாவது நவீனம் வந்துடும். எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை?’

‘அப்ப இருக்கறதிலயே ஜாலியான வேலை. சினிமா பார்த்து விமர்சனம் எழுதப் போறேன்’

‘என்னது ஜாலியான வேலையா. விமர்சனம் எழுதறவங்களைப் போயி கேட்டு பாரு. அடிச்சு பிடிச்சு மொக்கை படம்னாலும் மொத நாளே பார்த்து விமர்சனம் எழுதினால்தான் மரியாதை. அதுவும் தமிழ் படங்களை விமர்சனம் பண்ணறதுக்கு முன்னாடி அந்த படம் எந்த உலக மொழிப் படத்திலிருந்து காப்பி அடிச்சிருந்தாலும், அந்த படத்தையும் பார்த்துட்டு இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லணும். படத்தில் ஒவ்வொரு சீன்லயும் கேமரா ஆங்கிள் எப்படி இருந்துச்சு, எடிட்டிங் எப்படின்னு டைரக்டரை விட தெளிவா பார்த்துட்டு விமர்சனம் எழுதணும்.’

‘அய்யய்யோ இது இவ்வளவு கஷ்டமா? அப்ப இனிமேல் மொக்கை போடப் போறேன். ஆனால் இனிமேலும் இதைப் படிப்பாங்களா?’

‘இவ்வளவு நாளூம் அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்க. அதையும் மீறி நீ எதையாவது உருப்படியா எழுதித் தொலைக்க மாட்டியான்னு நம்பி இவ்வளவு பேரு படிக்கலையா. அதே மாதிரி இதையும் படிப்பாங்க. கவலைப்படாத. ஹலோ படிப்பீங்க தான‌?’

நான் கவிதை எழுதப் போறேன்

வானவில் – 24/12/2010

வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த கோளாரும் இல்லை என்பதை நிரூபிக்க, வாக்களித்தவுடன் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை ஒரு ரசீதாக அந்த மெஷின் கொடுக்கும் வகையில் மாற்றங்களை கொண்டுவர தேர்தல் கமிஷன் பரிசீலித்துக்கொண்டு இருப்பதாக நேற்று ஒரு செய்தியில் பார்த்தேன். எனக்குத் தெரிந்து இது சரியான யோசனை இல்லை.

இது போன்ற ரசீது கொடுக்கும் நிலை உருவானால், தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு கேட்பவர்களுக்கு மிக எளிதாகிவிடும் என்பது என் எண்ணம். ‘என் கட்சிக்கு ஓட்டுப்போட்ட இரசீதைக் காண்பித்தால் இவ்வளவு பணம் தர்றேன்’ என ஒவ்வொரு கட்சியும் ஆர‌ம்பித்து விடுவார்கள். அப்புறம், பணபலம் இருப்பவர்கள் மட்டுமே ஜெயிக்கும் நிலை வந்துவிடும்.

என்னதான் நாடு நகரம் என பேசினாலும் நாமும் மனிதர்கள்தானே. ‘என் கட்சிக்கு ஓட்டுப்போட்ட இரசீதுக்கு 5000 ரூபாய்’ என எவனாவது அறிவித்தால் ‘எனக்கு காசெல்லாம் வேணாம், உனக்கு ஓட்டுப் போட மாட்டேன்’ என எதிர்கட்சி வேட்பாளர் மட்டுமே சொல்லுவான்.

‘அப்ப எப்படித்தான் இதை நம்புறது?’ ஒண்ணும் கவலையெல்லாம் பட்டுக்கத் தேவையில்லை. தப்பா ஓட்டு விழுந்தா என்ன ஆகப் போகுது, இவனுக்கு பதிலா அவன் அடிப்பான். நமக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சியைத் தவிர வேற எதுவும் தெரியாதே. இரண்டு கட்சிக்காரனும் கொள்ளை அடிக்கிறவன்தான். எவன் ஜெயிச்சா என்ன?

இல்லையெனில், ரொம்ப நாளா ‘ஜனநாயகத்தில் மக்கள்தான் முழு சக்தி படைத்தவர்கள்’ என கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருப்பதைப் போலவே ‘இதிலயும் எல்லா சரியாத்தான் இருக்கும்’ என நம்பிக்கொண்டு செல்லவேண்டியதுதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெங்காயத்தோட டார்ச்சர் தாங்கலை. முன்னையெல்லாம் இதை உறிச்சாத்தான் கண்ணீர் வரும். இப்ப சில வாரமா வாங்க நினைச்சாலே கண்ணீர் வருது. என்னக் காரணம்ன்னு தெரியல, எப்ப பார்த்தாலும் இந்த வெங்காய விலை மட்டும் திடீருன்னு அதிகமாயிடுது. சில வருஷங்கள் முன்னால் இதே மாதிரி வெங்காய விலை மிகப் பெரும் அரசியலானதாக ஒரு ஞாபகம்.

அப்பவெல்லாம் வீட்டில் இருந்ததால் எந்த பிரச்சினையும் இல்லை. இப்ப வெளியில் தங்கி இருக்கிறப்பதான் கஷ்டம் தெரியுது. இங்க எந்த ஹோட்டலிலும், ஆனியன் தோசையோ, ஆம்லெட்டோ இல்லை. வெங்காய விலை குறையற வரைக்கும் இதெல்லாம் கிடையாதாம். சாம்பாரில் கூட வெங்காயம் போட மாட்டேங்கிறாங்க. 😦

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில சமயங்களில் நாம எழுதற பதிவே நமக்கு பிரச்சினை ஆயிடுது. என் பெயர் படும் பாட்டைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். இதைப் படிச்சதுக்கப்புறம், என் பெயரை ஒழுங்கா கூப்பிட்டுட்டு இருந்தவங்களும் இப்ப அன்பாஸ், அன்பாஸ்கான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. 😐

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில வாரங்களாக வழக்கத்துக்கும் கொஞ்சம் குறைவாகத்தான் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் வேலைப்பளு (!?) காரணமென்றாலும், சும்ம சும்மா வெறும் மொக்கைப் பதிவுகளை எழுதுவதை குறைத்துக்கொள்ளலாம் என்பதும் ஒரு எண்ணம். இது என்னுடைய 52ஆவது பதிவு. இதில் உருப்படியாக எழுதியிருப்பது எனப் பார்த்தால் பாதிதான் தேறும். பதிவெழுத ஆரம்பித்த புதிதில் எல்லோரையும் போல ஒரு ஆர்வத்தில் தோன்றியதெல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது அந்த ஆர்வம் சற்றே குறைந்த நிலையில், இனி எந்தப் பதிவை எழுதும் முன்னும், இது தேறுமா என யோசிக்கத் தொடங்கியதின் விழைவே இது. என்னுடைய கடைசி மூன்று நான்கு பதிவுகளில் சற்றே உருப்படியான விஷய்ங்களை கொஞ்சம் சீரியஸாக‌ எழுதியதற்கு இதுதான் காரணம். யோசித்துப்பார்த்தால் இது ஒரு நல்ல விஷயமாகவே படுகிறது. 🙂

அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.. 🙂

வானவில் – 24/12/2010

பெண்ணாதிக்கம்

குறிப்பு: முதலிலேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான பதிவு. ஏதோ நான் சீரியஸா ஏதாவது எழுதியிருப்பேன்னு நெனைச்சு திட்டிட்டு போகலாம்னு வந்திருந்தீங்கன்னா சாரி.

எப்ப பார்த்தாலும் ஆணாதிக்கத்தைப் பத்தியும், பெண்ணியம் பத்தியும் நிறையப் பதிவுகள் வருது. சரி ஒரு மாற்றமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் சில விஷய்ங்கள் பத்தி எழுதலாம்ன்னுட்டுத்தான் இந்த இடுகை.

1. பேருந்துகளில், ஆண்கள் பெண்களுக்கான இடத்தில் உட்கார்ந்திருந்தால் சத்தம்போட்டு எழுப்பி விட்டுட்டு உட்காருபவர்கள், ஆண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது யார் வந்தாலும் எந்திரிக்கிறதில்லை. 😐

2. ஒரு பொண்ணை லவ் பண்ணவைக்கணும்ன்னா எப்ப பார்த்தாலும் பசங்கதான் லோலோன்னு அலைஞ்சு திரிஞ்சி ஏதேதோ செய்யணும். பொண்ணுங்களுக்கு பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தாப் போதும். எதுவும் செய்யத் தேவையில்லை, பசங்கத் தானாப் பின்னாடி சுத்துவாங்க (சினிமாவைத் தவிர. தமிழ் சினிமால வர மாதிரி, பசங்கப் பின்னாடி சுத்திசுத்திப் போய் லவ் பண்ணற பொண்ணுங்களை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை). 😳

3. இந்தப் பொண்ணுங்களுக்கு எந்த கலரில் டிரஸ் போட்டாலும் நல்லாத்தான் இருக்கு. நாம கொஞ்சம் கலர்ஃபுல்லா டிரஸ் போட்டால் உடனே, ‘என்ன மச்சி, ராமராஜன் ரசிகர் மன்றத்தில் சேர்ந்திட்டயா? இல்லை ஆந்திராப் பக்கம் போயிட்டு வந்தியா?’ என கேட்டுக்கேட்டு இனிமேல் அந்தத் துணியை போடவே முடியாதபடி பண்ணிடறாங்க. இதனாலயே நாம எப்ப பார்த்தாலும், கருப்பு வெள்ளையிலும், சாயம் போன கலரிலும் சட்டைப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு. 😦

4. ஆண்களுக்கு பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பா வேலைக்கு போயாகணும். இல்லைன்னா, பார்க்கிறவன் எல்லாம் ‘வெட்டியாத்தான் இருக்கியா?, வெட்டியாத்தான் இருக்கியா?’ன்னு கேட்டுக்கேட்டே சாவடிச்சுடுவாங்க. பெரும்பாலான பொண்ணுங்களுக்கு அதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவங்களுக்கு பிடிச்சா வேலைக்கு போவாங்க, இல்லைன்னா ‘அதுதான் அவர் வேலைக்கு போறாரே, அது போதும், நான் வீட்டைப் பாத்துக்கிறேன்’னு சொல்லிட்டு வீட்டில் இருந்துக்குவாங்க. 😐

5. நாம கஷ்டப்பட்டு (?) வேலை பண்ணி, எல்லாத்துக்கும் சரிசரின்னு சொல்லி, ஆன்சைட் வாய்ப்பு கிடைக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும். இவங்க ஏற்கனவே ஆன்சைட்டில் இருக்கறவனைக் கல்யாணப் பண்ணிட்டு, என் ஹஸ்பண்ட் ஆன்சைட்டில் இருக்கிறார். நான் போகணும்ன்னு சொல்லிட்டு, அவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டிருந்தவனுக்கெல்லாம் ஆப்படிச்சுட்டு போயிடுவாங்க.  👿

6. நான் ஏதாவது தப்பு பண்ணி மாட்டிக்கிட்டால் செம அடி அடிக்கற அப்பாவும், அம்மாவும், என் தங்கச்சி ஏதாவது பண்ணினால் ‘பொண்ணுன்னு பாக்கிறேன், இனிமேல் இந்த மாதிரி தப்பு பண்ணினா நடக்கிறதே வேற’ன்னு எல்லா தடவையும் ஒரே டயலாக்கை சொல்லிட்டு விட்டுடுவாங்க‌. 😐

7. இதையெல்லாம் விட பெரிய விஷயம். சின்ன வயசில் கோவிலில் பிரசாதம் வாங்க நிக்கும் போது, மன்னன் பட ரஜினி, கவுண்டமணி கணக்கா சண்டை போட்டு போய் முதலில் நின்னால், முதலில் பொண்ணுங்க வாங்கம்மான்னு கூப்பிட்டு அவங்களுக்கு பிரசாதம் கொடுத்திட்டுத்தான் நமக்கு கொடுப்பாங்க. எவ்வள்வு கடுப்பாகும்ன்னு யோசிங்க மக்களே.. !! 👿

இன்னும் நிறைய விஷயம் இருந்தாலும் இதுக்கே எத்தனை பேரு திட்டுவாங்கன்னு தெரியாததால இதனுடன் நிறுத்திக்கிறேன். 😀

பெண்ணாதிக்கம்

வானவில் – 25/11/2010

திருந்தாத ஜென்மங்கள்

எங்க ரூமில் ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு வலிப்பு, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கு. அவனுக்கு இப்ப வீட்டில் கல்யாணத்துக்கு பெண் பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க. அவன்கிட்ட ‘பெண் பாக்கிறப்பவே இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் இருக்குன்னு சொல்லிடு, அப்பதான் பின்னாடி எந்த பிரச்சினையும் இருக்காது’ன்னு சொன்னால், ‘இதையெல்லாம் போய் பொண்ணு வீட்டில் சொல்லுவாங்களா?’ன்னு கேக்கறான். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த மாதிரி ஆளுங்க திருந்த மாட்டாங்களா? இவனை நம்பி கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு யாரோ? அந்த பொண்ணை நினைச்சால்தான் கஷ்டமா இருக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீரா ராடியா

நீரா ராடியா டேப் சம்பந்தப்பட்ட விஷயங்களை படிக்கும்போதுதான் அரசியலில் நாம நினைச்சே பார்க்காத பல விஷயங்கள் நடக்குதுன்னு தெரியுது. அதைப் பற்றி படிக்கும்போது ஏற்படும் ஆச்சரியங்கள், யப்பா. கட்சி, கூட்டணி என இந்த அரசியல்வாதிகள் உண்டாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை தவிடு பொடியாக்குகின்றன இந்த பதிவுகள். இதுபோன்ற அரசியலில் சம்பந்தமே இல்லாத இடைத்தரகர்கள் மூலமாகத்தான் எல்லா விஷயங்களும் நடக்கிறது என்றால், இவர்கள் ஒவ்வொரு தடவையும் நேரில் போய் பார்ப்பதெல்லாம் எதற்காக?  ஒவ்வொரு உரையாடல் பற்றிய விவரங்களை படிக்கும்போதும் தலை சுற்றுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஷஸ் தொடர்

ஒருவழியா இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகியிருக்கும் நிலையில் இது போன்ற மொக்கையான தொடர்களை தவிர்ப்பதே நல்லது.

இந்த விஷயத்தில் எனக்கு ஆஸ்திரேலியாவை ரொம்ப பிடிக்கும். அவங்க ஜெயிக்கிறாங்களோ, இல்லையோ கண்டிப்பா ஜெயிக்க முயற்சி செய்வாங்க. அதனால போட்டிகள் நல்லா விறுவிறுப்பாக இருக்கும். ஆஷஸ் (Ashes) தொடர் இன்னிக்கு ஆரம்பிச்சுடுச்சு. முதல் நாளிலேயே இங்கிலாந்து ஆல் அவுட். டெஸ்டுன்னா இப்படி இருந்தால்தான் பார்க்கிற நமக்கும் ஆர்வம் உண்டாகும். அதை விட்டுட்டு ஒர்ரே அணி மூணு நாளைக்கு ஆடினால் எவன் பார்ப்பான்?

ஆஷஸ் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடித்த தொடராக இருப்பதற்கு இந்த விறுவிறுப்பே காரணமாகப் படுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நட்பு

எனக்கு எப்பவுமே ஒரு கெட்ட பழக்கம். நான் அதிகமாக யாருக்கும் ஃபோன் பண்ணிப் பேச மாட்டேன். இதனாலயே பல நண்பர்கள், பழைய நண்பர்கள் ஆகிட்டாங்க. இதுக்கு முக்கியமான காரணம், எப்ப கால் பண்ண நினைத்தாலும் ஒருவேளை ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பாங்களோ, நாம தொல்லை பண்ணிடுவமோன்னுதான். பேசி ஒரு வருஷம் ஆன ஃப்ரண்ட் ஒரு பொண்ணுக்கிட்ட போனவாரம் பேசிட்டு இருந்தேன். அப்பதான் புரிஞ்சுது, பல சமயங்களில் நாம நினைக்கிறதெல்லாம் அர்த்தமே இல்லாத விஷய்ங்கள்ன்னு. தொடர்ந்து தொடர்பில் இருந்தால் எல்லோரும் எப்போதும் போல நெருங்கிய நண்பர்களாகவே இருப்பாங்க. மாறணும்ன்னு நினைக்கிறேன். மாறுவனான்னு தெரியல. 🙂

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகம் – The Lost Symbol

டான் ப்ரவுன் (Dan Brown) எனக்கு மிகவும் பிடித்த த்ரில்லர் கதை எழுத்தாளர். இவரோட கதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததே, வரலாற்று சம்பவங்களையும், உண்மையான இடங்களையும், பலர் அறிந்திறாத விஷயங்களையும் கோர்வையாக்கி விறுவிறுப்பான நாவலைக் கொடுப்பதுதான்.

அவரது நாவல் தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol), அமெரிக்காவிலுள்ள மேசன் அமைப்பினரையும், அவர்களின் நம்பிக்கைக‌ளையும் பின்னணியாகக் கொண்ட கதை. கடவுள் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார் (அல்லது மக்கள்தான் கடவுள்) என்னும் கருத்தினை வலியுறுத்தும் இந்நாவல் நிச்சயம் பல ஆச்சரியங்களை நமக்குள் விதைக்கும்.

இதைப் படிக்கும் முன், வெப்பத்தை அளவிட நியூட்டன், வேறு ஒரு அளவியை உபயோகித்தார் என்பதும், அதில் நீர் கொதிக்கும் வெப்பநிலை 33 டிகிரி என்பதும் சத்தியமாக நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. இதுபோன்ற நமக்கு தெரியாத விஷயங்கள் பலவற்றை நமக்கு சொல்லியவாறே ஜெட் வேகத்தில் கதை பறக்கிறது.

த்ரில்லர் என்ற பெயரில் லாஜிக்கே இல்லாத முடிவுகளுடன் உள்ள கதைகளை படிப்பதற்கு, இந்த புத்தகத்தைப் படிக்கலாம். த்ரில்லர் படிச்ச மாதிரியும் ஆச்சு, சில விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்ட மாதிரியும் ஆச்சு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஆசிரியை: ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இதில இருந்து என்ன தெரியுது?

மாணவன்: நாங்க படிக்கறதெல்லாம் வேஸ்ட். இதை விட்டுட்டு நல்ல பொண்ணைத் தேடிப் பிடித்தால் போதும், வாழ்க்கையில் உருப்பட்டுடலாம். 🙂

வானவில் – 25/11/2010