தந்தை பெரியார் – அழிக்க முடியாத ஒரு பிம்பம்

செப் 17, திராவிடர் தலைவர் பெரியாரின் பிறந்த நாள். இன்று பலருக்கும் பெரியார் என்றால், ‘பார்ப்பனரை பழிப்பவர்’, ‘நாத்திகர்’, ‘திராவிடக் கட்சிகளின் மூலமான திராவிடர் கழகத்தை நிறுவியவர்’ என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பெரியாரின் அரசியலும், தொண்டும் இவைகளைத் தாண்டியது. இதைத் தெரிந்துகொள்ள பெரியாருக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பெரியாரின் பாதிப்புகள் தமிழகத்தின் அரசியலிலும், சமூகத்திலும் எவ்வளவு எனப் புரிந்துகொள்ள முடியும். பல சிறந்த நூல்கள் உள்ளன. முகப்புத்தகத்துக்கு ஒதுக்கும் நேரத்தில் 1 சதவீத நேரம் போதும் இவரைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள.

3% பார்ப்பனர்கள் அரசு வேலைகளிலும், மேற்படிப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் குரல் கொடுத்து, இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தவர்கள் பெரியாரும், அவர் வழித்தோன்றல்களும்தான்.

இந்தியாவிலே தமிழர்கள் மட்டும்தான் சாதிப்பெயரை தனது பெயருடன் சேர்க்காமலிருக்கும் தைரியத்தை பெற்றிருக்கின்றனர். இதைப் பெருமையாக வேறு மாநில மக்களிடம் கூறும் பலருக்கும் (சில பார்ப்பனர்கள் கூட), இது பெரியாரினால் நடந்தது என்பது தெரிவதில்லை.

பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே நுழைவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரியாரின் போராட்டங்கள் உதவியிருக்கின்றன. பார்ப்பன ஆதிக்க நீதித்துறை இல்லாமலிருந்திருந்தால், கருவறைக்குள்ளும் பலர் நுழைந்திருக்க முடியும். விரைவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் நுழைவார்கள் என நம்புகிறேன்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தின் பங்கைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று ஏதோ இந்தப் போராட்டத்தால் தங்களது வாழ்வே போனது போல் புலம்பிக்கொண்டு இருக்கும் பலரும், இந்த போராட்டம் நடக்கவில்லையென்றால் தமிழருக்கான அடையாளத்தை இழந்திருப்போம் என்பதையும், இந்தி இல்லாத்தால்தான் தமிழர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்

இங்கே அலுவலகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நான் பேசினால் என்னை ஏதோ ஒரு பிற்போக்குவாதி போல் பார்க்கும் பலரும், இட ஒதுக்கீடு இல்லையென்றால் இன்றும் அவர்களின் தந்தை தொழிலைத்தான் செய்துகொண்டிருந்திருப்பர் என்பதை மறந்துவிடுகின்றனர். இவர்களெல்லாம் பெரியாரின் காலத்திற்கு கூட செல்லவேண்டியதில்லை. சற்றே கர்நாடகப் பக்கம் வந்து பார்க்கட்டும். என்னுடன் பணிபுரியும் 10 கன்னடர்களில் 9பேர் பார்ப்பனர் மற்றும் இதர மேல் சாதியினர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தேடித்தான் காணவேண்டியுள்ளது இங்கே.

நேற்றைக்கு அரசியலுக்கு வந்த பலரும் பெரியாரை கன்னடர் என்றும், திராவிடர் அரசியலால்தான் தமிழர்களுக்கு எல்லாம் போனதாகவும் புலம்புவது வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம் விடக் கொடுமை, ‘இந்தியை கற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்’ என முழங்கிய மபொசி போன்றோரை இவர்கள் தமிழர்களின் தலைவர் என‌ சொல்லுவதுதான்.

பெரியாரைப் பற்றி யார் என்ன சொன்னால் என்ன, பெரியார் அழிக்கமுடியாத ஒரு பிம்பம். அவரின் நடவடிக்ககள் தமிழக மக்களிடையே உண்டாக்கிய தாக்கங்கள் அப்படி. எனவே இது போன்றோரின் பேச்சுகளூக்கும் செயல்களுக்கும் பதிலடி கொடுப்பதை விடுத்து பெரியாரின் சீர்திருத்தங்கள் பலவும் தமிழர்களின் நடைமுறை வழக்காக மாறும் நாளை நோக்கி பிரயாணிப்போம். அதுதான் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை. தமிழகத்தில் புற்றீசல் போல சாதிக்கட்சிகள் முளைத்து மறைமுகப் பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்கும் இந்த காலத்தில் இதுதான் மிகவும் முக்கியமானப் பணி.

Advertisements
தந்தை பெரியார் – அழிக்க முடியாத ஒரு பிம்பம்

கடவுளும் மதமும்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு கடவுளை விட, கடவுளின் பெயரால் செய்யப்பட்ட மூடநம்பிக்கைகளும், பார்ப்பன ஆதிக்கமுமே என்பது எவருக்கும்தெரியாததல்ல. திராவிட அரசியலின் அடிநாதமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதும்தான்.

ஆனால் சமீப காலமாக ஒரு புது மாதிரியான கடவுள் மறுப்புவாதிகளை பார்க்கிறேன். பெரும்பாலும்பார்ப்பனர்களைக் கொண்ட இந்த வகை கடவுள் மறுப்புவாதிகளை முதலில் வெளியிலிருந்து பார்த்த போது, ஒருவேளை இவர்களெல்லாம்நாம் எதிர்பார்த்த சமநிலையான புதிய சமூகத்தின் முன்னோர்களோ என நினைக்கத் தோன்றியது. அவர்களிடம் இந்து மதத்தினைப் பற்றி பேசும் வரை.

இவர்களை பொருத்தவரை, இந்து மதம் என்பது வாழும் வழிமுறையாம். கடவுள் மறுப்புக்கும் இந்து மத நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ஆனால் அதே சமயம் கிருத்துவ, இஸ்லாமிய சமயங்களை பின்பற்றுவது முட்டாள்தனமாம். இதைக் கேட்டவுடன் புதிய சமூகத்தின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் தளர்ந்தது எனக்கு.

இவர்களுக்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் படித்த ஆதிக்கவாதிகள் அவ்வளவுதான். இவர்களைப் போன்ற ஆட்களிடமிருந்து உண்மையான பகுத்தறிவாளிகளை இனம் காண்பது சற்றே கடினம்தான்.

கடவுளை ஒழித்தால் சாதிகளை அழித்துவிடலாம் எனத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையை கையிலெடுத்தார் பெரியார். ஆனால் இப்போதோ கடவுளைக் கூட ஒழித்துவிடலாம் ஆனால் சாதியையும் அதன் காரணியாக விளங்கும் மதத்தையும் ஒழிக்க முடியாது போல.

கடவுளும் மதமும்

மனுதர்மத்தை நிலைநிறுத்தும் கோவில் சடங்கு

சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்த சம்பவம் இது. பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது என்பதற்கான உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்.

மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழக்கம் கடந்த 400 வருடங்களாக கடைபிடிக்கப் படுகிறது என்பதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் அடிக்கடி இக்கொவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம் என்பதும்தான். அரசுக்கு தெரிந்தே இது போல‌ மனிதர்களை சாதி ரீதியாக வர்க்கம் பிரிக்கும் முயற்சிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான்.

இத்தனைக்கும் அங்கே சாப்பிட்டவர்கள் யாரும் துறவிகளோ முனிவர்களோ கிடையாது. சாப்பிட்டவனும், அந்த எச்சிலையின் மேல் உருண்டவனும் ஒரே பள்ளியில் படிப்பவர்களாகவோ அல்லது ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ கூட இருக்கக் கூடும். இங்கே ஒருவனை உயர்ந்தவனாகவும், மற்றொருவனைத் தாழ்ந்தவனாகவும் ஆக்கி வைத்திருப்பது மனுதர்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

சாமியார், சாமி என்பதையெல்லாம் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என விட்டுவிட்டாலும், இது போன்ற சம்பவங்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் நிறைய இளைஞர்கள் இருந்தனர். உருண்டவர்களிலும்தான்.  இதுபோன்ற மனுதர்மம் சார்ந்த நம்பிக்கைகள் அடுத்த தலைமுறையினரிடமும் தொடர்கிறது என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

இந்த செய்தியில் ஒரே ஆறுதலான விஷயம், சில தலித் அமைப்பினர் இந்த பழக்கத்திற்கெதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனால்தான் இந்தவிஷயம் வெளி உலகத்துக்கு தெரியவே வந்தது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நிச்சயம் இந்தக் கொடுமைகளை களைய முடியும் என நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் அனைவரும் சமம் என்ற நிலை வரும்.

மனுதர்மத்தை நிலைநிறுத்தும் கோவில் சடங்கு

சாதி, மதங்களின் அரசியல்

சாதிப்பற்று பற்றியும், மதப்பற்று  பற்றியும் பல ஆயிரக்கணக்கானோர்  பல மொழிகளில் தங்களதுக் கருத்துக்களைப் பதித்திருப்பது தெரிந்தாலும், இதைப்பற்றி எனது கருத்துகளில் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  சாதி மதங்களைப் பற்றி எழுதும் போதும் பேசும்போதும் எனக்கு தெரிந்தவரை பெரும்பாலானவர்கள்  வெளிப்படையாக தங்களின் சாதிப்பற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆனால்,  நிறைய பேருக்கு நிச்சயம் சாதி, மதப் பற்றுகள் தங்களின் முன்னோர்களிடமிருந்து சிறிதும் குறையாமல் இருந்து கொண்டுதானிருக்கிறது. இப்போதைய உலகில் முழுவதுமாக சாதி, மதங்களை மறுக்கின்ற மனிதர்களோ, அமைப்புகளோ மிக மிகக் குறைவு.

 இதைப் பற்றி நடுநிலையானக்  கருத்தைக் கொண்டிருப்பவர்கள் கூட, தன் சாதிக்காரனா, இல்லை அடுத்த சாதிக்காரனா என வரும்போது, இருவருமே தனக்கு நெருங்கியவர்கள் இல்லாத பட்சத்தில், தன் சாதிக்காரனுக்கு ஆதரவான நிலை எடுப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.  என் வீட்டில், எந்தக் கூட்டணியில் இருந்தாலும்,  பாமக எங்கள் தொகுதியில் போட்டியிட்டால்,  எங்கள்  குடும்பத்தில் அனைவரும் பாமகவிற்குத் தான் வாக்களிப்பார்கள்.

நான் கேட்டால், பெரும்பாலும் சரியான காரணம் எதுவும் அவர்களால் சொல்லமுடிந்ததில்லை, ‘நமக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்த கட்சி’ என்பதைத் தான் என் தந்தை அடிக்கடி சொல்லுவார். சரி, அவர்களாவது போன தலைமுறை என்று விட்டுவிடலாம் . என் பெரியப்பாவின் மகன்களும்,  தங்கள் சாதியினர் என வரும்போது காட்டும் அக்கறைதான் என்னை கவலை கொள்ள செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், நான் ஏதாவது சொல்லப் போனால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘நீ பெருசா படிச்சிட்டங்கறதுனால, சொந்தக் காரங்க எல்லாம் இல்லைன்னு ஆகாது. சொந்தத்துக்கு அப்புறம்தான் எல்லாம்’. நேற்று வரை யாரென்றே தெரியாமல் இருந்தவன், நமது சாதி என்றவுடன் எப்படி மாமா, மச்சான், பங்காளி ஆகிறார்கள் என்பது எனக்கு இன்றுவரை விளங்காத ஒன்று.

 இது படிக்காமல் கிராமத்தில் இருப்பவர்களிடம் மட்டும் இருந்திருந்தால், மக்களுக்கு படிப்பறிவு வரும்போது இதெல்லாம் மறைந்துவிடுமென  விட்டுவிடலாம்.   ஆனால், படித்துவிட்டு தகவல் தொழிற்நுட்பத் துறையில் வேலை செய்யும் நண்பர்கள் சிலரே சாதிகளையும் மதத்தையும் முக்கிய விஷயமாகப் பேசும்போதுதான்,  சாதி, மதம் என்பவை எப்பொழுதுமே அழிக்க முடியாத விஷயமாக மாறிவிடுமோ என்ற பயம் வருகிறது.

புதிதாகக் கல்லூரியில் முதுகலை கணினி பிரிவில் சேர்ந்திருந்த நண்பனிடம், கல்லூரி எல்லாம்  எப்படியிருக்கிறது என்ற கேள்விக்கு அவன் அளித்த பதிலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை.  ‘எங்க சாதிக்கார பசங்க நாலுபேரு இருக்காங்க. அவனுங்க கூட சேர்ந்தாச்சு. அவனுங்களும், கிளாசில இருக்க எங்க சாதிப் பொண்ணுங்க யாருன்னும் சொல்லிட்டாங்க. அவங்கள மட்டும் சைட் அடிச்சுட்டு போயிட்டு இருக்க வேண்டியதுதான்’. இதுதான் அவன் அளித்த பதில். நிச்சயமாக முதுகலைப் படிக்கும் மாணவனிடம் இந்த அளவுக்கு சாதிப் பற்றை நான் எதிர்பார்க்கவில்லை.

ஒருமுறை நண்பர்கள் சில விஷயங்களை விவாதித்து கொண்டிருந்தோம். அதில் நான், ‘நம்மையே ஒருவன்  தீட்டு என்று கோவில் கருவறைக்குள்  அனுமதிக்க மாட்டேன் என்கிறான். நாம் இன்னும் சிலரை, நம்மைவிட தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்குகிறோம்’  எனக்கூறியபோது நண்பன் ஒருவன், “தாழ்த்தப்பட்டோர்களுக்கான அமைப்புகள் எதுவும் இல்லை என்றால், நாட்டில் சாதிப் பிரச்சனைகள் எதுவும் வராது. நம்மில் யாரும் கருவறைக்குள் நுழையவிடவில்லை என்று சண்டையிடுவதில்லை,  நம்மைப் போல் ஏன் அவர்கள் இருக்கமாட்டேன் என்கிறார்கள்”  என்றான்.

அதற்கு  நான், “நாம் முதுகெலும்பில்லாமல் இருக்கிறோம் என்பதற்காக, அனைவரையும் அவ்வாறு இருக்கச்சொல்ல முடியாது” எனக் கூறினேன். சூடாகப் போன இந்த விவாதத்தில், கடைசி வரை அவன் இந்த போராட்டங்களின் அவசியத்தை புரிந்து கொள்ளவே இல்லை. இவர்களைப் போன்று சமுதாயத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் களைய நடக்கும் போராட்டங்கள் வீண் வேலை எனக் கருதுபவர்களும் நிறைய உண்டு.

 இது இந்து மதத்தில் மட்டுமில்லை. கிருத்துவ மதத்திலும் உள்ளது.  என்னுடன் பேசிக் கொண்டிருந்த  ரோமன்  கதோலிக்  பிரிவை சேர்ந்த ஒரு  பெண், மற்ற பிரிவினரின் நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் பெரிதாக சாடினாள். CSI பிரிவை சேர்ந்த இன்னொரு பெண்ணோ RC இன் குறைகளை மட்டுமே பேசினாள். முஸ்லிம் மதத்திலும் சாதி வாரியான வேறுபாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

தங்களுக்குள்ளேயே இவ்வளவு பிரிவுகளைக் கொண்டிருக்கும் இவர்களுக்கு (அனைத்து மதத்தினரும்தான்),  மற்ற மதத்தினர்  என்று வரும்போது மட்டும், நாமெல்லாம் ஒரு மதத்தினர்  என்ற  உணர்வு எங்கிருந்து வருகிறதோ  தெரியவில்லை.  இவர்களுக்கு நாமெல்லாம் ஒரே மனிதர்கள்  என்னும் உணர்வு எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை.  

முஸ்லீம்களை எனக்குப் பிடிக்காது எனச் சொல்கின்ற பலரை நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய  ஆச்சர்யமெல்லாம் ஒரு சாதி அல்லது மதத்தை வைத்து எப்படி ஒரு தனி மனிதனின் சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும் பலர் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான்.

இது கிராமத்தில் இருக்கும் சென்ற தலைமுறைக்காரர்களில்  இருந்து, ஐடி துறையில் இருக்கும் நவீன இளைஞர்கள் வரை தொடர்கிறது. தங்களைப் பகுத்தறிவாளர்கள் எனச் சொல்பவர்களும் இதில் அடக்கம். பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், ஒரு மனிதன் பார்ப்பனன் என்பதற்காகவே அவனை வெறுக்கிறார்கள் என்பதும் உண்மை.  ‘பிறப்பால் சாதி, மதப் பிரிவினைகள் இருக்கக்கூடாது’ என்னும் கருத்தை வலியுறுத்தும்  இவர்களும்  பிறப்பை வைத்து தானே ‘இவன் பார்ப்பனன்’ என முடிவு செய்து வெறுத்து ஒதுக்குகிறார்கள். இதன் நியாயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை.

இது போன்ற நிலைப்பாடுகளால் இதை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் அதிகம்.  இந்து மதப்பற்றாலர்களை இழுக்க ஒரு கூட்டமும், சிறுபான்மையினரை இழுக்க ஒரு கூட்டமும் என இந்திய அளவிலும் அனைத்து கட்சிகளும் சாதியையும், மதத்தையும் வைத்தே பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. மொத்தத்தில் சாதி, மதங்களை ஆதரித்தோ, எதிர்த்தோ அரசியல் செய்வதற்கு நிச்சயம் இவர்களுக்கு இவை தேவைப்படுகிறது.  பகுத்தறிவாளர்கள் சொல்லும்படி, பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் முன்னேறினாலும், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என இவர்கள் வைத்திருக்கும் இரு பிரிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சாதி மதங்கள் இல்லாத உலகு என்பது  கற்பனையாகவே  போய்விடுமோ என எண்ணத் தோன்றுகிறது.  முழுமையாக சாதி, மதங்களை ஒழிக்க அதைப்பற்றியே துளியும் பேசாமலிருப்பது அவசியமாகிறது. ஆனால் அதை செய்யும் எந்த அரசியல் அமைப்பையும் எனக்கு யாரும் இதுவரை அறிமுகப் படுத்தவில்லை.

சாதி, மதங்களின் அரசியல்