கடவுளும் மதமும்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு கடவுளை விட, கடவுளின் பெயரால் செய்யப்பட்ட மூடநம்பிக்கைகளும், பார்ப்பன ஆதிக்கமுமே என்பது எவருக்கும்தெரியாததல்ல. திராவிட அரசியலின் அடிநாதமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதும்தான்.

ஆனால் சமீப காலமாக ஒரு புது மாதிரியான கடவுள் மறுப்புவாதிகளை பார்க்கிறேன். பெரும்பாலும்பார்ப்பனர்களைக் கொண்ட இந்த வகை கடவுள் மறுப்புவாதிகளை முதலில் வெளியிலிருந்து பார்த்த போது, ஒருவேளை இவர்களெல்லாம்நாம் எதிர்பார்த்த சமநிலையான புதிய சமூகத்தின் முன்னோர்களோ என நினைக்கத் தோன்றியது. அவர்களிடம் இந்து மதத்தினைப் பற்றி பேசும் வரை.

இவர்களை பொருத்தவரை, இந்து மதம் என்பது வாழும் வழிமுறையாம். கடவுள் மறுப்புக்கும் இந்து மத நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ஆனால் அதே சமயம் கிருத்துவ, இஸ்லாமிய சமயங்களை பின்பற்றுவது முட்டாள்தனமாம். இதைக் கேட்டவுடன் புதிய சமூகத்தின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் தளர்ந்தது எனக்கு.

இவர்களுக்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் படித்த ஆதிக்கவாதிகள் அவ்வளவுதான். இவர்களைப் போன்ற ஆட்களிடமிருந்து உண்மையான பகுத்தறிவாளிகளை இனம் காண்பது சற்றே கடினம்தான்.

கடவுளை ஒழித்தால் சாதிகளை அழித்துவிடலாம் எனத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையை கையிலெடுத்தார் பெரியார். ஆனால் இப்போதோ கடவுளைக் கூட ஒழித்துவிடலாம் ஆனால் சாதியையும் அதன் காரணியாக விளங்கும் மதத்தையும் ஒழிக்க முடியாது போல.

Advertisements
கடவுளும் மதமும்

விளம்பரத் தூதுவரான கடவுள்

சமீபத்தில் இஸ்கான் (Iskcon) சென்றிருந்தபோது தொன்றிய விஷயம் இது. பெங்களூர் இஸ்கான் கோவிலுக்கு செல்வதில் எப்போதும் எனக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லையென்றாலும், புதிதாக பெங்களூருக்கு வரும் அனைத்து நண்பர்களின் லிஸ்டிலும் இந்த இடம் இருப்பதால், தவிர்க்க முடிந்ததில்லை.

இதற்கு முன் பல தடவை போயிருந்தாலும் இந்த முறைதான் 200 ரூபாய் ஸ்பெஷல் தரிசனத்தில் சென்றிருந்தேன். இந்த 200 ரூபாய் டிக்கெட் இருந்தால்தான் உங்களால் கோவிலை சுற்றி வர முடியும். இல்லையென்றால் சற்று தொலைவிலிருந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டியதுதான். அதே போல சிறப்பு பிரசாதம், சிறப்பு பூஜை எல்லாமும் இந்த ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி வருபவர்களுக்கு மட்டுமே.

இங்கு மட்டும் இல்லை. எல்லா பிரபலமான கோவில்களிலும் இதே நிலைதான். கடவுள் கூட காசு இருந்தால்தான் எளிதாக காணக்கிடைக்கிறார் இந்த நாட்டில்.

நான் கோவிலுக்கு செல்வது எப்போதும் சாமி கும்பிடுவதற்கு அல்ல. கோவில்களின் அமைதி நமது மனதுக்கும் அமைதி கொடுக்கும் என்பதால்தான். இந்த அமைதியை பல பிரபலமாகாத கோவில்களிலும், சில சர்ச்களிலும் மட்டுமே அனுபவித்திருக்கிறேன். இங்கேயும் ஏதாவது விசேஷ நாட்களில் போனால் அந்த அமைதி கிடைக்காது.

இஸ்கானுக்கு போய்விட்டு வெளியே வரும்போது கோவிலுக்கு போய்வந்த உணர்வு துளியும் இருந்ததில்லை எனக்கு.  ஏதோ ஷாப்பிங் மாலுக்குள் சென்றுவந்தது போலத்தான் எப்போதும் இருக்கும். கோவிலைவிட்டு வெளியேவரும் வழி முழுக்க கடைகள். சாப்பாட்டு ஐட்டங்கள் பிரசாதம் என்ற பெயரிலும், மற்ற பொருட்கள் கிருஷ்ணன் படத்துடனும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். கிருஷ்ணன் படம்போட்ட டி‍-ஷர்ட் போட்டால் கிருஷ்ணனின் அருள் கிடைத்துவிடுமா? ஏன்யா இப்படி அலும்பு பண்ணறீங்க‌?

என்னைப் பொறுத்தவரை இது ஒரு அற்புதமான வியாபாரத் தந்திரம். நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் விளம்பரத்தில் நடிக்கவைத்து தங்கள் பொருட்களை விற்பவர்களுக்கும், கிருஷ்ணனை நன்றாக தங்கத்தில் அலங்காரப்படுத்திக் காண்பித்துவிட்டு அவன் பெயரால் பொருட்களை விற்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.

இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் ‘இவர்கள் இந்த பணம் மூலம் பல பேருக்கு சாப்பாடு போடறாங்க, அதனால் இப்படி வியாபாரம் செய்வது தப்பில்லை’ என சொன்னான். ப‌ல‌ர‌து க‌ருத்தும் இதுதான்.

‘திருடுபவனும், கொள்ளைக்காரனும் கூட தனக்கென்று ஒரு நியாயமானக் காரணம் வைத்திருப்பான். அதனால் அவன் செய்வது சரியென்றாகிவிடுமா?’ என நான் கேட்டால் உடனே என்னை நாத்திகன் என்று சொல்லுகிறார்கள். இங்கே நாத்திகம் எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியல. தப்ப தப்புன்னு சொன்னால் நாத்திகமா? என்னய்யா இது?

இது இங்கு மட்டும் இல்லை,  இஸ்கானுக்கு கிருஷ்ணன் என்றால்,  திருப்பதியில் வெங்கடாஜலபதி, வாடிகனில் இயேசு,  மெக்காவில் அல்லா. அனைவரும் விளம்பரத் தூதர்களாகவே உபயோகப்படுத்தப் படுகிறார்கள்.

கடவுள் நம்பிக்கையை இவர்கள் வியாபார நோக்கத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள் என்றால் சில சாமியார்கள் வேறு சில விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை.

வாட்டிகனிலும், திருப்பதியிலும், இஸ்கானிலும் கோடிகோடியாய் கொட்டும் பலர் அதில் பாதியை தாங்கள் தினமும் பார்க்கும் ஏழைகளுக்கு கொடுத்திருந்தாலே பல பேர் இவர்களை தெய்வமாக வணங்கியிருப்பார்கள்.

எப்போது மனிதன் அன்பும், அமைதியும்தான் கடவுள் என உணர்கிறானோ அப்போதுவரை இதுபோன்றவர்களின் வேலைகள் நிற்கப் போவதில்லை.

விளம்பரத் தூதுவரான கடவுள்