கோ – ஒரு பார்வை

முதலில் உலகக் கோப்பை, அதற்கு பிறகு தேர்தல் என பல காரணங்களால் தள்ளிவைக்கப் பட்ட பெரிய படங்களில் ‘கோ’ வும் ஒன்று. இந்த கோடை விடுமுறைக்கு வரப்போகும் நல்ல படங்களுக்கான ஆரம்பம் என்றால் நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

சினிமாவில் பத்திரிக்கை, ஹீரோ பத்திரிக்கையாளன், வில்லன்கள் அரசியல்வாதிகள் என நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றனதான். எனவே கதை ஒன்றும் புதிதில்லை. ஆனால் சொன்ன விதம் புதிது.

முதல் காட்சியில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞராக வரும் ஜீவா பறந்து பறந்து படமெடுப்பதைப் பார்த்தவுடனே இன்னொரு ஹீரோயிசப் படமோ என பயந்து போனேன். நல்லவேளையா கேவி ஆனந்த் அந்த மாதிரி எதுவும் சொதப்பவில்லை.

ஹீரோ ஜீவா. பஞ்ச் டயலாக், பாய்ந்து பாய்ந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இல்லாத ஒரு கமர்சியல் படத்தில் நடித்ததற்காக முதலில் அவரைப் பாராட்ட வேண்டும். மற்றபடி சவாலான ரோல் எல்லாம் இல்லை. கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்.

ஹீரோயின்கள் கார்த்திகா, பியா. கதையைப் பொருத்தவரை கார்த்திகாவுக்குத்தான் முக்கியமான ரோல் என்றாலும் சொதப்பலான நடிப்புதான். சில காட்சிகளில் முகத்தில் எந்தவிதமான பாவனைகளுமில்லாமல் நிற்கும் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். பியாவைப் பொருத்தவரை பரவாயில்லை. அரசியல், பத்திரிக்கை என பரபரப்பாக செல்லும் படத்தின் மென்மையான சிலக் காட்சிகள் இவர் வருமிடங்கள் மட்டுமே.

பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ் போன்றவர்கள் சிஎம், எதிர்கட்சித் தலைவர் என்ற கேரக்டர்களின் முக்கியத்துவத்துக்காக மட்டுமே நடித்திருக்கின்றனர் என நினைக்கிறேன். படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையுமில்லை. அஜ்மலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம். நிறைவாக செய்திருக்கிறார்.

தமிழ் பத்திரிக்கை அலுவலகம் இவ்வளவு மாடர்னாக இருக்குமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லவேண்டும். இன்றைய அரசியலின் அவல நிலையை படம்பிடித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது ஆச்சரியம்தான். படத்தை வாங்கி, தேர்தல் முடியும் வரை கிடப்பில் போட்டதுகூட ராஜதந்திரமோ?

இறுதியில் வரும் திருப்பங்கள் என்னதான் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டினாலும், சொல்லவந்த விஷயத்தை சரியாக சொல்லமுடியாமல் ஆக்கிவிடுகிறது. இளைஞர்கள் கையில் நாடு செல்லவேண்டுமென சொல்ல நினைத்திருந்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதில் ஒருத்தன் தவறானவன் அது இது என இழுத்திருப்பது எதற்காக எனத் தெரியவில்லை.

ஹாரிஸ் வருசத்துக்கு ஒரு மெலடி போட்டுடறார். இந்த வருஷத்துக்கு ‘என்னவோ ஏதோ’. அயன் படத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் வரும் நெஞ்சே நெஞ்சே பாடல் போல இதிலும் தேவையில்லாத இடத்தில் ஒரு பாடல் வருகிறது. என்னதான் பாடல்கள் ஹிட்டானாலும், கட்டாயம் எல்லா பாட்டையும் படத்தில் வைக்கவேண்டுமா என்ன?

‘கோ’ பொழுதுபோக்கிற்கான ஒரு படம். வேறு ஒரு நல்ல படம் வரும்வரை தாராளமாக கோ‍ பார்க்கலாம்.

Advertisements
கோ – ஒரு பார்வை

எனதருமை வாக்காளப் பெருமக்களே!!

தேர்தல் ஜுரம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல பரவும் நிலையில் இந்த கோஷங்களை இனி நிறையக் கேட்கப் போகிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தலைப் பற்றிய எனது கருத்துக்களை பகிர ஒரு பதிவு.

ஒருபக்கம் திமுக. குடும்ப அரசியலில் மூழ்கிப்போன இவர்களின் குடும்ப ஆதிக்கம் இந்த முறை மிகத்தெளிவாக தெரிந்தது. சினிமா மூலம், சாதாரண மக்களுக்கும் இவர்களது ஆதிக்கம் தெளிவாகத் தெரிய இவர்களே காரணமாகிவிட்டனர். மேலும் இந்த காலேஜை கனிமொழி வாங்கிட்டாங்க, இந்த காலேஜை ஸ்டாலின் வாங்கிட்டார் என ஏகப்பட்ட வதந்திகள்(?) தமிழகமெங்கும். இதுமட்டுமில்லாமல் 2G ஊழல்வேறு. 2G ஊழல் கிராம மக்களுக்குப் புரியாது என திமுக நினைப்பதாக சமீபத்தில் ஒரு செய்திதாளில் படித்தேன். ‘ஏன் சார், 1,75,0000 கோடி ஊழல் எனச் சொன்னால் நம்ம மக்களுக்குப் புரியாதா என்ன? எப்படி நடந்துச்சுன்னு எல்லாம் யாரும் யோசிக்க மாட்டாங்க.’ இதெல்லாம் போக காங்கிரஸ். எனக்கு தெரிந்தவரை இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகும் காங்கிரஸின் பேச்சுக்கெல்லாம் திமுக தலையாட்டுவதற்கு 2G ஊழலைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குள்ள சந்தேகமெல்லாம், 63 தொகுதியில் போட்டியிட காங்கிரஸிடம் தலைவருங்க இருக்காங்களா?

அதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக என பலகட்சி கூட்டணி. சீமான் ஆதரவு என அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசம் எனப்பலரும் எண்ணும் வகையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் ஜெயலலிதாவின் வழக்கமான நடவடிக்கைகள் அனைத்து சாதகங்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.  திமுகவின் ஊழல்களைப் பிரதானப்படுத்தி பிரச்சாரம் பண்ண அதிமுக ஒண்ணும் யோக்கியமானக் கட்சியில்லை. ‘இரண்டு பேருமே கொள்ளையடிக்கறவங்கதான். திமுக வந்தாலாவது கொஞ்சமாவது செய்வாங்க, இந்த அம்மா எதுவும் செய்யாது.’ என சொல்லுபவர்கள் நிறய பேரைப் பார்த்திருக்கிறேன். தேமுதிகவுக்கு கிடைத்த 8% வாக்குகளும், திமுக, அதிமுக இரண்டையும் பிடிக்காதவர்கள் போட்டதே தவிர, விஜயகாந்தை பிடித்தவர்கள் போட்ட வாக்குகள் இல்லை என்பதை ஏன் பலபேர் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்களென்று தெரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஜெயலலிதா காட்டிய அக்கறை தேர்தலுக்கானது என்பதை காங்கிரஸுடன் கூட்டுசேர முயன்றதிலேயே புரிந்துகொள்ள முடிந்தது

என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே உருப்படியில்லை. இரண்டுமே ஊழல் நிறைந்த கட்சிகள்தான். இரண்டும் தமிழர்களுக்காக எதுவும் செய்ததில்லை. இரண்டுக் கட்சிகளையும் பார்த்துப் பார்த்து சலிச்சுபோச்சு. மூன்றாவது அணி வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டவங்களில் நானும் ஒருவன். கடைசியா வைகோவாவது தனியா நிப்பாருன்னு நம்பினேன். மதிமுக தனித்து நின்று சீமான், நெடுமாறன் உள்ளிட்டவர்கள் ஆதரித்தால் ஓரளவு வாக்குகளைப் பெறுவார் என நினைத்தேன். அது நடக்காமல் போய்விட்டது.  ‘இரண்டு திருடர்களில், எவன் உன் வீட்டை கொள்ளையடிப்பது எனத் தேர்ந்தெடுக்க சொல்லும் தேர்தல்தான் இது‘ என்பது என் கருத்து.

இப்படி ஒரு நிலையில் கட்டாயம் வாக்களித்தே ஆகவேண்டுமா என்ன?  மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் கூட வாக்களிக்கவில்லையென்றால் அந்த வாக்குப்பதிவே செல்லாது என சட்டம் இருக்கின்றது. எனவே, யாருமே வாக்களிக்காமல் புறக்கணித்தால் இந்தக் கட்சிகளுக்கு மக்களின் மனநிலையை புரியவைக்க முடியும். ஆனால் நம் மக்கள் செய்வார்களா? சந்தேகம்தான்.

49(O) இருக்கிறதே என சொல்லுபவர்களுக்கு ஒரு விஷயம். உங்க எலெக்ஷன் பூத்துக்கு போய் எல்லாக் கட்சிக்காரங்க முன்னாடியும் போய், எனக்கு 49(O) ஃபார்ம் கொடுங்கன்னு கேட்டுப் பாருங்க. எப்படியும் ஒரு கட்சிக்காரன் ஜெயிக்கத்தான் போறான். அவன் மூலமாக வரும் தொல்லைகளுக்கு பயந்துதான் பலரும் 49(O) போட நினைத்து வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். 49(O) வையும், வாக்கு இயந்திரத்தில் ஒரு பட்டனாக வைத்துப் பார்க்கட்டும். அப்புறம் தெரியும் இந்தக் கட்சிகளைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் உண்மையான எண்ணங்கள்.

எனதருமை வாக்காளப் பெருமக்களே!!

பேருந்தில் பார்த்த ஒரு பெண்

அபூர்வமாக வாய்க்கும் பகல் பயணம் அது. வேலை காரணமாக பெரும்பாலும் இரவுப் பயணமே செய்யும் காலச்சூழலில், ஒரு முறை பகலில் பயணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. பகல் பயணத்தின் போது பேருந்துகள் பெரும்பாலும் சிறு நகரங்களுக்கும் செல்லும் என்பதால் நிறைய புது இடங்கள் தெரியவரும். இரவு அளிக்கும் இருட்டென்னும் ஆடையின்றி நிர்வாணமான இயற்கை, தன் அழகை அனைவரும் கண்டுகழிக்க அனுமதிக்கும் பகலில் பயணம் செய்வது உண்மையிலேயே நல்ல நிகழ்வுதான். பல விந்தை மனிதர்களையும் காணமுடிகிறதே.

பயணம் என்பதே ஒரு இனிமையான அனுபவம்தான். அது பேருந்தாக இருந்தாலும் சரி, ரயிலாக இருந்தாலும் சரி. விமானத்தில் இன்னும் பயணம் செய்ததில்லை என்பதால் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும், பேருந்து பயணத்திலும், புகைவண்டி பயணத்திலும் சந்திக்கும் விதவிதமான மனிதர்களையும், காணும் பல அற்புத காட்சிகளையும் விமானத்தில் செல்லும்போது நிச்சயம் காண‌முடியாது.

பெரும்பாலும் சொந்த ஊருக்கு பேருந்து பயணமே. முன்பதிவு செய்து செல்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் மேற்சொன்னவைதான். முன்பதிவு செய்து பிரயாணிக்கும்போது ஏறுமிடம், இறங்குமிடம் தவிர வேறு தெரிவதில்லை. அந்த மாதிரி பயணத்தில் பார்த்த ஒரு விந்தையான பெண்ணை பற்றிய பதிவுதான் இது.

அழகிய பெண் அவள். உலக அழகியையெல்லாம் உதாரணமாகக் கொள்ளத் தேவையில்லை. பார்த்தவுடன் இன்னொருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு இலட்சணமான பெண். பெங்களூரிலிருந்து சேலம் செல்கிற பேருந்தில் கிருஷ்ணகிரியில் ஏறினாள். இவளுடன் சேலம் வரை ஒரே பேருந்தில் பிரயாணிக்கிறோம் என்ற எண்ணமே மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணம் கலையாக இருந்தாள்.

அவளுடைய தந்தைக்கும் தன் மகளைப் பற்றிய என் போன்றவர்களின் எண்ணங்கள் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். நடக்கவே சிரம‌ப்பட்ட போதிலும் பேருந்தில் ஏறி, அவள் எங்கு அமரவேண்டும், எங்கு அமர்ந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பது வரை பார்த்து பார்த்து ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, கீழிறங்கினார். கீழிறங்கியும் சென்ற பாடில்லை. அவள் அமர்ந்திருந்த இருக்கையின் சாளரத்தின் அருகே நின்றவாரு மகளுக்கு அறிவரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். தந்தைக்கே உரிய அக்கறையுடன் அவர் சொல்லிக் கொண்டிருந்த‌ அறிவுரைகளைக் கேட்டபோது, அந்தப் பெண் இப்போதுதான் முதல்முறையாக தனியாக செல்கிறாள் எனத் தோன்றியது.

ஒரு வழியாக பேருந்து கிளம்பி கிருஷ்ண‌கிரி எல்லையைத் தாண்டியவுடன், அந்தப் பெண் படபடவென பின்னால் வந்தாள். நான் ஒரு வேளை எதையாவது மறந்துவிட்டாளோ என்னவோ என பார்த்தபோது, எனக்கு சற்று முன்னால் இருந்த பையனுடன் உட்கார்ந்துகொண்டு, சேலம் வரும் வரை ஒரே கொஞ்சலும், கெஞ்சலுமாக பேருந்தில் அனைவருக்கும் தெரியும்படி, விளையாடிக் கொண்டு வந்தனர்.

என்னைப் போல, அவள் ஏறிய போதும், அவள் அப்பாவிடம் பேசிய போதும் கவனித்த இன்னும் சிலரும், நகர எல்லையைத் தாண்டியவுடன் அவளின் அடக்கமும், பணிவும் எங்கே போனது எனத் தெரியாமல் என்னைப் போலவே திகைத்திருந்திருந்தனர். பாவம் அவளின் தந்தை. இவளின் நடிப்புத் தெரியாமல், இவள் செல்லுமிடத்திற்கு சென்றுவிட்ட செய்திவரும் வரை தவித்துக்கொண்டு இருந்திருப்பார்.

புகைப்படத்திற்கு நன்றி : Flickr.com மற்றும் புகைப்படக் கலைஞர்

பேருந்தில் பார்த்த ஒரு பெண்

வலை விரிப்பவர்களுக்காக வலையுலகின் ஒரு போராட்டம் #TNFISHERMAN

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவனுக்கு பிரச்சினையா, உடனே ஓடுகிறார் நம் வெளியுறவு அமைச்சர். இனி எந்த மாணவனுக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என உறுதியாக எச்சரிக்கை விடுப்பதோடு அதை நடைமுறைப் படுத்த தேவையான அனைத்தையும் செய்கிறார். இந்திய மீடியாவில் ஒரு மாதத்திற்கு இதுதான் செய்தி. எங்கெங்கும் போராட்டம், இந்தியாவே கிளர்ச்சியடைவதாய் காட்டப்படும் செய்திகள்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பலகலைக்கழகத்தில் படிக்க சென்றிருந்த மாணவர்களை வேறு கல்லூரியில் சேரும்வரை எந்த தவறுகளிலும் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் வகையில் ஒரு கருவியை மாட்டியது அவர்கள் அரசு. உடனே இந்தியர்களுக்கே அவமானம், இந்தியாவுக்கே அவமானம். இந்தியர்கள் கொதித்தெழுகிறார்கள் என செய்தி ஒளிபரப்பும் மீடியாக்கள், இந்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுத்தவுடன்தான் அமைதியாகின்றன.

பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு பிரச்சினை எனும்போதும், ஃபிரான்ஸில் அவர்கள் நாட்டுக் குடிமகனாக வாழும் சீக்கியர்கள் டர்பன் அணியக்கூடாது என தடை அறிவிப்பு யோசனை வந்த போதிலும், நமது பிரதமர் உடனே குரல் கொடுக்கிறார்.

ஆனால் இங்கே இந்தியாவில் வாழும் ஏழை இந்தியக் குடிமகனான மீனவனை நமது நட்பு நாடு, நல்லுறவு நாடு என சொல்லப்படும் இலங்கை கடற்படையினர் கொன்று குவிக்கின்றனர், கேட்பதற்கு இந்த அரசுக்கு திராணியில்லை. தமிழினத் தலைவர் என சொல்லிக்கொல்லும் நமது முதல்வரோ, ஒரு கடிதம் அனுப்பிவிட்டு, இழப்பீட்டுத் தொகை அதிகரித்து வழங்கிவிட்டால் பிரச்சினை முடிந்ததாக இருந்து கொள்கிறார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் கட்சிக்கார ராசாவை காப்பாற்றவும், தேர்தல் சீட்டுப் பிரிப்பு சம்பந்தமாகவும் எத்தனை முறை வேண்டுமானால் டெல்லி செல்லமுடியும் இவரால். ஆனால் தமிழர் பிரச்சினையில், கடிதமோ தந்தியோ போதும். அதில் கூட இவர் கெஞ்சிதான் கேட்டுக்கொள்வார். அடித்துக் கேட்டால், இவர் கட்சிக்காரர்கள் அடித்ததையெல்லாம் காப்பாற்றமுடியாதே என்ற பயம் காரணம் என நினைக்கிறேன்.

எதிர்க்கட்சி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டுதானிருந்தன. அவர் ஆட்சியிலிருந்தால், இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணமே பிரபாகரனும், விடுதலை புலிகளும்தான் என இப்போதும் கூறுவார்.

தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை இந்திய அரசாங்கமும், சிங்கள கப்பற்படையினரும் தாண்டிவிட்டனர். இனியும் இந்த அரசாங்கம் எதுவும் செய்யும் என நம்பி பயனில்லை என உணர்ந்த நாம், அரசுக்கும் இதை உணர வைக்க வேண்டியது அவசியம்.

வட இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் சிறு பிரச்சினை என்றாலும் அதை நாள் முழுக்க ஒளிபரப்பி அரசின் கவனத்தை ஈர்க்க வைக்கும் இந்திய ஊடகங்கள் எதுவும் மீனவர் பிரச்சினையை பல நேரங்களில் ஒரு நிமிட செய்தியாகக் கூட சொல்லவில்லை.

எனவே இந்த பிரச்சினையின் தீவிரத்தை இனியும் உணரவைக்காமல் இருப்பது தவறென உணர்ந்த நண்பர்கள் சிலரின் முயற்சிதான் இந்த டிவிட்டர் மற்றும் வலையுலக பிரச்சாரம். #TNFISHERMAN என்ற குறிசொல்லுடன் உங்களின் கருத்துக்களை டிவிட்டரில் சொல்லுங்கள். இந்த முயற்சிக்கு ஏற்கனவே சற்று பலன் கிடைத்திருக்கிறது. வட இந்திய ஊடகங்கள் பலவற்றில் இந்த பிரச்சினை பற்றிய செய்தியை காணமுடிகிறது இப்போது. இதுவரை இதை செய்யாதவர்கள் உடனடியாக உங்கள் எதிர்ப்புக‌ளை #TNFISHERMAN குறிச்சொல்லுடன் டிவிட்டரில் பதியுங்கள்.

ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டாலும், ஊரே திரண்டு போராடும் அவர்களின் கோபத்தில் ஒரு பகுதியாவது நமக்கு இருக்க வேண்டும். அவர்களைப்போல உடனடியாக வன்முறையில் இறங்கத் தேவையில்லை. முதலில் அறவழியில் பிரச்சினையின் முக்கியத்துவத்தை அரசுக்கும், மற்றவர்களுக்கும் உணர்த்தும் முயற்சிதான் இது. உங்களால் ஆனதை செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு: http://www.savetnfisherman.org/

                                                        http://savetnfisherman.blogspot.com/

வலை விரிப்பவர்களுக்காக வலையுலகின் ஒரு போராட்டம் #TNFISHERMAN

என்னக் கொடுமை சார் இது?

கொஞ்ச நாளைக்கு முன்னால் நம்ம ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச ‘நாயகன்’ படம் கலைஞர் டிவியில பார்த்தேன். (மொக்கைப் படத்த பார்த்துட்டு வந்து அதைப் பத்தி பதிவு வேற‌யா?) படம் எதிர்பார்த்ததைவிட நல்லாவே இருந்தது. எந்த ஹாலிவுட் படத்தோட காப்பின்னு தெரியல. Cellular ஹாலிவுட் படத்தின் காப்பிதான். (பின்னூட்டத்தில் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.)

படத்தில சங்கீதாவை வில்லன் கும்பல் கடத்திட்டு போயிடுவாங்க. அங்க இருக்கிற ஒரு உடைந்த ஃபோனை வைத்து கால் செய்யும் போது அது ரமணாவின் செல்போனுக்கு செல்ல, அவரிடம் நிலைமையை சொல்லி உதவி கேட்பதாக படம் போகும். நல்லா விறுவிறுப்பா, இடையிடையே இருக்கும் நம்ம ரித்தீஷின் ஹீரோயிஸத்தை தவிர படம் நல்லா பார்க்கிற மாதிரிதான் இருந்தது.

ஆனா விஷயம் அது இல்லை. போன வாரம் கே டிவியில் எஸ்.வீ.சேகர் பையன் அஷ்வின் நடிச்ச ‘வேகம்’ படம் போட்டு இருந்தாங்க (உன்னை யார்றா இந்த மாதிரி படமெல்லாம் பாக்க சொல்லறது?). நான் உடனே சேனலை மாத்த போனேன். ஆனா இதில் குஷ்பூ அதே மாதிரி உடைஞ்ச ஃபோனை வச்சிக்கிட்டு ஹீரோக்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. என்னடா அதே ஐடியாவை காப்பி அடிச்சிருக்காங்க போலன்னு நினைச்சு படத்தை பார்த்தால், படம் முழுக்க காட்சிக்கு காட்சி அப்படியே நாயகன் படமும் இதுவும் ஒண்ணேதான்.

ரமணாவுக்கு பதிலா அஷ்வின், சங்கீதா கேரக்டரில் குஷ்பூ, ரித்தீஷ் கேரக்டரில நம்ம பிரபு, நாயகன் சென்னையில நடக்கிற கதைன்னா, வேகம் சிங்கப்பூரில நடக்கிற கதை. இவ்வளவுதான் வித்தியாசம். நாயகன் படத்தில் காமடிக்காக, மயில்சாமியோட வண்டிகளை ஒவ்வொருதடவையும் ரமணா தூக்கிட்டு போவார். வேகம் படத்தில் எஸ்.வீ.சேகர் வண்டியை ஹீரோ தூக்கிட்டு போவார்.

வேகம்தான் முதலில் வந்துச்சுன்னு நினைக்கிறேன். அந்த படத்தை யாருமே பாக்காமதான் ஃப்ளாப் ஆச்சு அதனால தைரியமா(?) அந்தப் படத்தை அப்படியே எடுக்கலாம்ன்னு நாயகன் டைரக்டர் நினைச்சாரா, இல்லை ஏற்கனவே காப்பி அடிச்சது தெரியாம, மறுபடியும் அதே ஹாலிவுட் படத்தை இன்னொரு தடவை காப்பி அடிச்சிட்டாரான்னு தெரியல.

அது எப்படீங்க ஒரு சீன் கூட மாறாம காமெடியில இருந்து எல்லாத்தையும் அப்படியே வச்சு ஒரு ரெண்டு வருஷ கேப்பில ரெண்டு படம் எடுத்திருக்காங்க. படத்து கதையை கேட்டவங்க கூடவா சொல்லியிருக்க மாட்டாங்க, இந்த படத்தை ஏற்கனவே ஒருத்தர் தமிழில் காப்பி அடிச்சாச்சுன்னு?  இவங்க மாதிரி ஆளுங்கக்கிட்ட இருந்து தமிழ் சினிமாவை யாரு காப்பாத்தறது?

Pictures: sulekha.com, oneindia.in

என்னக் கொடுமை சார் இது?

எதற்காக பந்த்?

புத்தாண்டு யாருக்கு எப்படியோ என் வலைப்பதிவுக்கு சரியானதாக இல்லை. இந்த ஆண்டின் முதல் இடுகையே இதுதான்.

கடந்த சனிக்கிழமை, இங்கே பெங்களூரில் வேலை நிறுத்தம். ஆளுங்கட்சியின் பந்த் என்பதால் அரசு பேருந்துகளும் ஓடவில்லை. நான் கேள்விப்பட்டவரை வேலைநிறுத்தம் என்பது அரசு அல்லது அதிகார வர்க்கத்தினரின் செயலை எதிர்த்து பொது மக்கள் நடத்தும் ஒரு போராட்டம். ஆனால் இப்போதெல்லாம் அரசே இந்த போராட்டத்தை நடத்துவது கேலிக்கூத்து.

அதுவும் ஏதாவது நியாமான காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை. எடியூரப்பாவின் ஊழலை விசாரிக்க ஆளுனர் அனுமதி கொடுத்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

போராட்டத்தின் போது ஒரு பாஜக நிர்வாகி சொல்லுகிறார், ‘இப்படியே போனால், நாளை ஒரு சாதாரண ஆள் கூட முதலமைச்சர் மீது வழக்கு போட முடியும். இது நடக்க கூடாது’.

முதலமைச்சர் என்றால் அவர் இப்படிப்பட்ட விசாரணைக்கெல்லாம் அப்பாற்பட்டவரா? அந்த சாதாரண மனிதனின் ஓட்டுக்கள்தானே இவரை முதல்வர் ஆக்கியது.

இந்திய அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாத செயல்களை, பாஜக இந்த விவகாரம் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றில் அமைச்சர்கள் மேல் விசாரணை கோரும் இவர்கள், இங்கே விசாரணை என்றால் மட்டும், பந்த் என்ற பெயரில் வன்முறையை அரங்கேற்றுகின்றனர்.

இந்த இலட்சணத்தில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் இவர்கள்தான் வெற்றியடைந்துள்ளனர். இது போன்ற கட்சிகளின் உண்மை முகத்தை எப்போதுதான் மக்கள் புரிந்துகொள்ள போகின்றனரோ, தெரியவில்லை.

கன்னட நண்பர் ஒருவர் சொன்னார், ‘இவர்களை புரிந்துகொண்டு மட்டும் என்ன ஆகப் போகிறது. இவர்களுக்கு மாற்று என இருப்பவர்கள் இவர்களை விட மோசமானவர்களாகத்தானே இருக்கிறார்கள்’ என்று. உண்மைதான். காங்கிரஸும், மஜதவும் பாஜகவிற்கு துளியும் சளைத்தவர்கள் இல்லை. வாழ்க ஜனநாயகம்.

எதற்காக பந்த்?

நான் கவிதை எழுதப் போறேன்

‘நான் கவிதை எழுதப் போறேன்.’

‘எதுக்கு உனக்கு இந்த வெட்டி வேலை. உனக்கு எது வருமோ அதைப் செய்ய‌வேண்டியதுதான?’

‘எவ்வளவு நாளைக்குத்தான் மொக்கை மொக்கையா எழுதறது. என் பதிவை படிக்கிற சிலரும் இனிமேல் வரமாட்டாங்க. அதனால், கவிதை எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். கவிதை எழுதறவங்க பதிவையெல்லாம் பார்த்திருக்கேன். ஒரு நாலுவரி நச்சுன்னு எழுதிட்டு, தினம் ஒரு பதிவு போட்டுடறாங்க. நம்மள மாதிரி மொக்கை போடறவங்கதான் புதுசு புதுசா யோசிக்க வேண்டியிருக்கு’

‘சரி.. எங்க ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்’

‘நீ காற்று, நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்’

‘டேய் பரதேசி நாயே, இது சினிமா பாட்டுடா. இப்படியெல்லாம் காப்பியடிச்ச, அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்து அடிச்சுட்டு போவாங்க‌’

‘அய்யய்யோ, அப்ப கவிதை வரணும்ன்னா என்ன பண்ணனும்’

‘காதலிக்கணும்ன்னு பல பேரு சொல்லறாங்க‌’

‘சரி, அப்ப நான் காதலிக்க போறேன்’

‘காதலிக்க போறீயா? உன் முகத்தை என்னிக்காவது கண்ணாடியில பார்த்திருக்கியா. அப்படியே முகம் ஒரு பிரச்சினை இல்லைன்னாலும், பார்க்கிற பொண்ணையெல்லாம் கேவலமா ஓட்டிட்டு இருந்தா எந்த பொண்ணு உன்னை லவ்வும்’

‘அதுவும் சரிதான், ஓகே இனிமேல் சிறுகதை எழுதப்போறேன்.’

‘சிறுகதையா. இப்ப கதை எழுதறதெல்லாம் சாதாரண விஷயமில்லை. யாருக்கும் புரியாத மாதிரி எழுதினால்தான் எழுத்தாளர்னே ஒத்துக்கிறாங்க. எதேதோ பின் நவீனம், முன் நவீனம்ன்னு எல்லாம் பேசறாங்க. உனக்கு ஒழுங்கா தமிழில் தப்பில்லாம டைப் அடிக்கவே வராது. இதுல இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நீ கதை எழுத ஆரம்பிக்கறதுக்குள்ள, புதுசா எதாவது நவீனம் வந்துடும். எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை?’

‘அப்ப இருக்கறதிலயே ஜாலியான வேலை. சினிமா பார்த்து விமர்சனம் எழுதப் போறேன்’

‘என்னது ஜாலியான வேலையா. விமர்சனம் எழுதறவங்களைப் போயி கேட்டு பாரு. அடிச்சு பிடிச்சு மொக்கை படம்னாலும் மொத நாளே பார்த்து விமர்சனம் எழுதினால்தான் மரியாதை. அதுவும் தமிழ் படங்களை விமர்சனம் பண்ணறதுக்கு முன்னாடி அந்த படம் எந்த உலக மொழிப் படத்திலிருந்து காப்பி அடிச்சிருந்தாலும், அந்த படத்தையும் பார்த்துட்டு இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லணும். படத்தில் ஒவ்வொரு சீன்லயும் கேமரா ஆங்கிள் எப்படி இருந்துச்சு, எடிட்டிங் எப்படின்னு டைரக்டரை விட தெளிவா பார்த்துட்டு விமர்சனம் எழுதணும்.’

‘அய்யய்யோ இது இவ்வளவு கஷ்டமா? அப்ப இனிமேல் மொக்கை போடப் போறேன். ஆனால் இனிமேலும் இதைப் படிப்பாங்களா?’

‘இவ்வளவு நாளூம் அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்க. அதையும் மீறி நீ எதையாவது உருப்படியா எழுதித் தொலைக்க மாட்டியான்னு நம்பி இவ்வளவு பேரு படிக்கலையா. அதே மாதிரி இதையும் படிப்பாங்க. கவலைப்படாத. ஹலோ படிப்பீங்க தான‌?’

நான் கவிதை எழுதப் போறேன்