வானவில் – 24/12/2010

வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த கோளாரும் இல்லை என்பதை நிரூபிக்க, வாக்களித்தவுடன் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை ஒரு ரசீதாக அந்த மெஷின் கொடுக்கும் வகையில் மாற்றங்களை கொண்டுவர தேர்தல் கமிஷன் பரிசீலித்துக்கொண்டு இருப்பதாக நேற்று ஒரு செய்தியில் பார்த்தேன். எனக்குத் தெரிந்து இது சரியான யோசனை இல்லை.

இது போன்ற ரசீது கொடுக்கும் நிலை உருவானால், தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு கேட்பவர்களுக்கு மிக எளிதாகிவிடும் என்பது என் எண்ணம். ‘என் கட்சிக்கு ஓட்டுப்போட்ட இரசீதைக் காண்பித்தால் இவ்வளவு பணம் தர்றேன்’ என ஒவ்வொரு கட்சியும் ஆர‌ம்பித்து விடுவார்கள். அப்புறம், பணபலம் இருப்பவர்கள் மட்டுமே ஜெயிக்கும் நிலை வந்துவிடும்.

என்னதான் நாடு நகரம் என பேசினாலும் நாமும் மனிதர்கள்தானே. ‘என் கட்சிக்கு ஓட்டுப்போட்ட இரசீதுக்கு 5000 ரூபாய்’ என எவனாவது அறிவித்தால் ‘எனக்கு காசெல்லாம் வேணாம், உனக்கு ஓட்டுப் போட மாட்டேன்’ என எதிர்கட்சி வேட்பாளர் மட்டுமே சொல்லுவான்.

‘அப்ப எப்படித்தான் இதை நம்புறது?’ ஒண்ணும் கவலையெல்லாம் பட்டுக்கத் தேவையில்லை. தப்பா ஓட்டு விழுந்தா என்ன ஆகப் போகுது, இவனுக்கு பதிலா அவன் அடிப்பான். நமக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சியைத் தவிர வேற எதுவும் தெரியாதே. இரண்டு கட்சிக்காரனும் கொள்ளை அடிக்கிறவன்தான். எவன் ஜெயிச்சா என்ன?

இல்லையெனில், ரொம்ப நாளா ‘ஜனநாயகத்தில் மக்கள்தான் முழு சக்தி படைத்தவர்கள்’ என கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருப்பதைப் போலவே ‘இதிலயும் எல்லா சரியாத்தான் இருக்கும்’ என நம்பிக்கொண்டு செல்லவேண்டியதுதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெங்காயத்தோட டார்ச்சர் தாங்கலை. முன்னையெல்லாம் இதை உறிச்சாத்தான் கண்ணீர் வரும். இப்ப சில வாரமா வாங்க நினைச்சாலே கண்ணீர் வருது. என்னக் காரணம்ன்னு தெரியல, எப்ப பார்த்தாலும் இந்த வெங்காய விலை மட்டும் திடீருன்னு அதிகமாயிடுது. சில வருஷங்கள் முன்னால் இதே மாதிரி வெங்காய விலை மிகப் பெரும் அரசியலானதாக ஒரு ஞாபகம்.

அப்பவெல்லாம் வீட்டில் இருந்ததால் எந்த பிரச்சினையும் இல்லை. இப்ப வெளியில் தங்கி இருக்கிறப்பதான் கஷ்டம் தெரியுது. இங்க எந்த ஹோட்டலிலும், ஆனியன் தோசையோ, ஆம்லெட்டோ இல்லை. வெங்காய விலை குறையற வரைக்கும் இதெல்லாம் கிடையாதாம். சாம்பாரில் கூட வெங்காயம் போட மாட்டேங்கிறாங்க. 😦

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில சமயங்களில் நாம எழுதற பதிவே நமக்கு பிரச்சினை ஆயிடுது. என் பெயர் படும் பாட்டைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். இதைப் படிச்சதுக்கப்புறம், என் பெயரை ஒழுங்கா கூப்பிட்டுட்டு இருந்தவங்களும் இப்ப அன்பாஸ், அன்பாஸ்கான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. 😐

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில வாரங்களாக வழக்கத்துக்கும் கொஞ்சம் குறைவாகத்தான் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் வேலைப்பளு (!?) காரணமென்றாலும், சும்ம சும்மா வெறும் மொக்கைப் பதிவுகளை எழுதுவதை குறைத்துக்கொள்ளலாம் என்பதும் ஒரு எண்ணம். இது என்னுடைய 52ஆவது பதிவு. இதில் உருப்படியாக எழுதியிருப்பது எனப் பார்த்தால் பாதிதான் தேறும். பதிவெழுத ஆரம்பித்த புதிதில் எல்லோரையும் போல ஒரு ஆர்வத்தில் தோன்றியதெல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது அந்த ஆர்வம் சற்றே குறைந்த நிலையில், இனி எந்தப் பதிவை எழுதும் முன்னும், இது தேறுமா என யோசிக்கத் தொடங்கியதின் விழைவே இது. என்னுடைய கடைசி மூன்று நான்கு பதிவுகளில் சற்றே உருப்படியான விஷய்ங்களை கொஞ்சம் சீரியஸாக‌ எழுதியதற்கு இதுதான் காரணம். யோசித்துப்பார்த்தால் இது ஒரு நல்ல விஷயமாகவே படுகிறது. 🙂

அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.. 🙂

Advertisements
வானவில் – 24/12/2010

வானவில் – 25/11/2010

திருந்தாத ஜென்மங்கள்

எங்க ரூமில் ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு வலிப்பு, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கு. அவனுக்கு இப்ப வீட்டில் கல்யாணத்துக்கு பெண் பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க. அவன்கிட்ட ‘பெண் பாக்கிறப்பவே இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் இருக்குன்னு சொல்லிடு, அப்பதான் பின்னாடி எந்த பிரச்சினையும் இருக்காது’ன்னு சொன்னால், ‘இதையெல்லாம் போய் பொண்ணு வீட்டில் சொல்லுவாங்களா?’ன்னு கேக்கறான். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த மாதிரி ஆளுங்க திருந்த மாட்டாங்களா? இவனை நம்பி கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு யாரோ? அந்த பொண்ணை நினைச்சால்தான் கஷ்டமா இருக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீரா ராடியா

நீரா ராடியா டேப் சம்பந்தப்பட்ட விஷயங்களை படிக்கும்போதுதான் அரசியலில் நாம நினைச்சே பார்க்காத பல விஷயங்கள் நடக்குதுன்னு தெரியுது. அதைப் பற்றி படிக்கும்போது ஏற்படும் ஆச்சரியங்கள், யப்பா. கட்சி, கூட்டணி என இந்த அரசியல்வாதிகள் உண்டாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை தவிடு பொடியாக்குகின்றன இந்த பதிவுகள். இதுபோன்ற அரசியலில் சம்பந்தமே இல்லாத இடைத்தரகர்கள் மூலமாகத்தான் எல்லா விஷயங்களும் நடக்கிறது என்றால், இவர்கள் ஒவ்வொரு தடவையும் நேரில் போய் பார்ப்பதெல்லாம் எதற்காக?  ஒவ்வொரு உரையாடல் பற்றிய விவரங்களை படிக்கும்போதும் தலை சுற்றுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஷஸ் தொடர்

ஒருவழியா இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகியிருக்கும் நிலையில் இது போன்ற மொக்கையான தொடர்களை தவிர்ப்பதே நல்லது.

இந்த விஷயத்தில் எனக்கு ஆஸ்திரேலியாவை ரொம்ப பிடிக்கும். அவங்க ஜெயிக்கிறாங்களோ, இல்லையோ கண்டிப்பா ஜெயிக்க முயற்சி செய்வாங்க. அதனால போட்டிகள் நல்லா விறுவிறுப்பாக இருக்கும். ஆஷஸ் (Ashes) தொடர் இன்னிக்கு ஆரம்பிச்சுடுச்சு. முதல் நாளிலேயே இங்கிலாந்து ஆல் அவுட். டெஸ்டுன்னா இப்படி இருந்தால்தான் பார்க்கிற நமக்கும் ஆர்வம் உண்டாகும். அதை விட்டுட்டு ஒர்ரே அணி மூணு நாளைக்கு ஆடினால் எவன் பார்ப்பான்?

ஆஷஸ் இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடித்த தொடராக இருப்பதற்கு இந்த விறுவிறுப்பே காரணமாகப் படுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நட்பு

எனக்கு எப்பவுமே ஒரு கெட்ட பழக்கம். நான் அதிகமாக யாருக்கும் ஃபோன் பண்ணிப் பேச மாட்டேன். இதனாலயே பல நண்பர்கள், பழைய நண்பர்கள் ஆகிட்டாங்க. இதுக்கு முக்கியமான காரணம், எப்ப கால் பண்ண நினைத்தாலும் ஒருவேளை ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பாங்களோ, நாம தொல்லை பண்ணிடுவமோன்னுதான். பேசி ஒரு வருஷம் ஆன ஃப்ரண்ட் ஒரு பொண்ணுக்கிட்ட போனவாரம் பேசிட்டு இருந்தேன். அப்பதான் புரிஞ்சுது, பல சமயங்களில் நாம நினைக்கிறதெல்லாம் அர்த்தமே இல்லாத விஷய்ங்கள்ன்னு. தொடர்ந்து தொடர்பில் இருந்தால் எல்லோரும் எப்போதும் போல நெருங்கிய நண்பர்களாகவே இருப்பாங்க. மாறணும்ன்னு நினைக்கிறேன். மாறுவனான்னு தெரியல. 🙂

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகம் – The Lost Symbol

டான் ப்ரவுன் (Dan Brown) எனக்கு மிகவும் பிடித்த த்ரில்லர் கதை எழுத்தாளர். இவரோட கதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததே, வரலாற்று சம்பவங்களையும், உண்மையான இடங்களையும், பலர் அறிந்திறாத விஷயங்களையும் கோர்வையாக்கி விறுவிறுப்பான நாவலைக் கொடுப்பதுதான்.

அவரது நாவல் தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol), அமெரிக்காவிலுள்ள மேசன் அமைப்பினரையும், அவர்களின் நம்பிக்கைக‌ளையும் பின்னணியாகக் கொண்ட கதை. கடவுள் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார் (அல்லது மக்கள்தான் கடவுள்) என்னும் கருத்தினை வலியுறுத்தும் இந்நாவல் நிச்சயம் பல ஆச்சரியங்களை நமக்குள் விதைக்கும்.

இதைப் படிக்கும் முன், வெப்பத்தை அளவிட நியூட்டன், வேறு ஒரு அளவியை உபயோகித்தார் என்பதும், அதில் நீர் கொதிக்கும் வெப்பநிலை 33 டிகிரி என்பதும் சத்தியமாக நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. இதுபோன்ற நமக்கு தெரியாத விஷயங்கள் பலவற்றை நமக்கு சொல்லியவாறே ஜெட் வேகத்தில் கதை பறக்கிறது.

த்ரில்லர் என்ற பெயரில் லாஜிக்கே இல்லாத முடிவுகளுடன் உள்ள கதைகளை படிப்பதற்கு, இந்த புத்தகத்தைப் படிக்கலாம். த்ரில்லர் படிச்ச மாதிரியும் ஆச்சு, சில விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்ட மாதிரியும் ஆச்சு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஆசிரியை: ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இதில இருந்து என்ன தெரியுது?

மாணவன்: நாங்க படிக்கறதெல்லாம் வேஸ்ட். இதை விட்டுட்டு நல்ல பொண்ணைத் தேடிப் பிடித்தால் போதும், வாழ்க்கையில் உருப்பட்டுடலாம். 🙂

வானவில் – 25/11/2010

வானவில் – 19/11/2010

ஊழ‌ல்

சமீப காலமா எந்த செய்தித்தாளை எடுத்தாலும் ஊழல், ஊழல்தான் செய்தி. காமன்வெல்த் 70,000 கோடி, அலைக்கற்றை 1,75,000 கோடி, இங்கே கர்நாடகாவில் நில ஊழல் 6000 கோடி, ஆதர்ஷ் அப்பார்ட்மெண்ட் வீடு ஒதுக்கீடு என திரும்பியப் பக்கமெல்லாம் ஊழல் செய்திகளால் நாறிப்போய் கிடக்கிறது இந்தியாவின் மானம், உலக அரங்கில்.  சரி இதெற்கெல்லாம் தீர்வு என்ன? சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலகிவிட்டனர். அவ்வளவுதான். “அப்ப அவங்க அடிச்ச பணம்? அதற்கான நடவடிக்கை?” இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்டீர்கள் என்றால், இந்திய அரசியலைப் பற்றி உஙளுக்கு எதுவும் தெரியவில்லை என அர்த்தம். வாழ்க ஜனநாயகம்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ப்ளான்

“எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்”ன்னு வடிவேல் சொல்லுவாரு. ஆனால் எங்களைப் பொருத்தவரை நாங்க ப்ளான் பண்ணி பண்ணுன எந்த காரியமும் உருப்படியா நடந்ததில்லை, கடைசி நேரத்தில் ஏதாவது ஒண்ணு சொதப்பிடும். மைனா படம் பார்க்க தீபாவளி நாளில் இருந்தே ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் எல்லாம் சொதப்பிடுச்சு. ஆனால் போன சனிக்கிழமை, மதியம் சாப்பிடப் போலாம்ன்னு ஹோட்டலுக்கு போயிட்டிருந்த வழியில், மைனா போலாமென சொல்ல, உடனே ஓசூருக்கு பஸ் ஏறிட்டோம். இது முதல் தடவையில்லை. நிறைய தடவை, எந்த ப்ளானும் இல்லாம செய்யற காரியங்கள்தான் நல்லபடியா முடிஞ்சிருக்கு. எதையும் திட்டமிட்டு செய்யணுங்கிறதெல்லாம் சும்மாவோ?

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Survival Organization

சர்வைவல் அமைப்பு (Survival International). இதைப்பற்றி எனக்கு தெரியவந்தது, இவர்கள் ஒரிசா பழங்குடியனரான டோங்க்ரியா கோந்த் (Dongria Kondh) மக்களுக்கு ஆதரவாக வேதாந்தாவின் பாக்ஸைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோதுதான். இவர்களது தளத்துக்கு சென்று பார்த்தபோதுதான் டதெரிந்தது, இவர்கள் உலகின் அனைத்து மூலையிலும் உள்ள பழங்குடியனரின் வாழ்வுரிமைக்காக போராடி வருகிறார்கள் என்று.

இவர்களின் செயல்களில் நாமும் பல வகைகளில் உதவ முடியும். அதற்கான வழிகளை அறிய அவர்களது தளத்திற்கு செல்லுங்கள். (http://www.survivalinternational.org/actnow) உங்களால் எந்த வகையில் உதவ முடியும் என நினைக்கிறீர்களோ அந்தவகையில் உத‌வுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இவர்களின் செயல்களைப்பற்றி தெரிவியுங்கள்.

அது மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் பழங்குடியினரின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இந்த தளத்தில் (http://www.survivalinternational.org/tribes) நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பமீலா

இந்த ஆங்கில செய்தி சேனல்களின் அலும்புக்கு அளவே இல்லாமல் போயிட்டு இருக்கு. ஒபாமா வந்தபோது, ஏதோ கடவுளே வந்துட்ட மாதிரி அவரோட அல்லா நடவடிக்கைகளையும் ஒண்ணுவிடாமல் ஒளிபரப்பினார்கள். என்ன சாப்பாட்டை ரசிச்சு சாப்பிட்டாருங்கிறதில இருந்து. சரி அவர்தான் அமெரிக்க அதிபர்ன்னு விட்டுத்தொலைக்கலாம்ன்னா, இப்ப பமீலா வந்ததை அதுக்கு மேல பெரிய விஷயமா பேசுறாங்க. பமீலா சேலை கட்டுனா செய்தி, வீட்டைக் கூட்டினா செய்தி, சன் பாத் எடுத்தா செய்தின்னு, இவங்களோட எல்லா வெப்சைட்டிலும், முதல் பக்கத்திலேயே பமீலாவின் படம்தான் வரவேற்கிறது. டிவி நடிகையான பமீலா, ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கிறதுக்காக வந்திருக்காங்க. இதுக்கு எதுக்கு இவ்வளவு அலம்பல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

பொண்ணு: நாம கல்யாணம் பண்ணிக்கிட்டவுடனே சிகரெட் பிடிக்கறத விட்டுடணும்.
பையன்: சரி. 😐
பொண்ணு: தண்ணியடிக்கறதையும்தான்.
பையன்: சரி. 😦
பொண்ணு: நைட் கிளப்புக்கும் போறதையும் விட்டுடணும்.
பையன்: சரி… 😳
பொண்ணு:வேற‌ என்ன‌ கெட்ட‌ ப‌ழ‌க்க‌த்தை விட‌லாம்ன்னு நினைக்கிற‌?
பையன்: உன்னை க‌ல்யாண‌ப் ப‌ண்ணிக்க‌லாங்கிற‌ ஐடியாவை.. 👿
பொண்ணு: ?? 😦

வானவில் – 19/11/2010

வானவில் – 12/11/2010

அர்த்தமில்லா விவாதங்கள்

இந்த செய்தி தொலைக்காட்சிகளின் தொல்லை தாங்கல. இவங்களுக்கு எப்பொ பார்த்தாலும் இவங்களுக்கு எப்பவும் ஏதாவது ஒண்ணு பரபரப்பா இருந்துக்கிட்டே இருக்கணும். இவங்களோட இந்த டிஆர்பி சண்டையில நாம தெரிஞ்சிக்கிறது என்னமோ ரொம்ப கம்மிதான். எப்ப என்ன முக்கிய செய்தியா இருந்தாலும் போதும், நாலு பேர் சேர்ந்து பேச அதப்பத்தி ஆரம்பிச்சுடுறாங்க. ஒரு மணி நேரம் சண்டை போட்டுட்டு, விவாதம் பாதில இருக்கிறப்பவே அவ்வளவுதான் நேரம் முடிஞ்சுடிச்சுன்னு எந்த முடிவுமே சொல்லாம முடிச்சிடுறாங்க. கடைசியா என்னதான் முடிவு சொன்னாங்கன்னு யோசிச்சாதான் தெரியும் அவங்க  ஒண்ணுமே சொல்லலைன்னு. 😐

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு சிலர் இருக்காங்க. எப்போ பாத்தாலும் காசு காசுன்னுதான் பேச்சு. ஒருதடவை ஆங்கிலத்தில் பதிவெழுத ஆரம்பிச்சப்ப, உடன் தங்கியிருந்தவனிடம், ‘மச்சி புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிச்சிருக்கேன். எப்படியிருக்குன்னு படிச்சுப்பாத்து சொல்லுடா’ன்னு சொன்னதுக்கு, ‘எதயாவது செஞ்சா காசு வரும்ன்னு சொல்லு செய்யறேன். மத்தபடி வெட்டிவேலையெல்லாம் சொல்லாத’ன்னான். இதோட நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்ல, அதுக்கப்புறம், ‘நீ ஏண்டா தேவையில்லாம டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்க. ப்ளாக் ஹோஸ்ட் எல்லாம் அவனுக்கு சைட் வேல்யூ அதிகம் ஆகணுங்கிறதுக்காக உஙளுக்கெல்லாம் ஃப்ரீயா கொடுக்கிறான். நீங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி எழுதி அவனுக்கு காசு சம்பாரிச்சு கொடுக்கறீங்க’ன்னான். இவனை மாதிரி ஆளுங்ககிட்டயெல்லாம் இதப்பத்தி பேசுனது என் தப்புன்னு அமைதியா இருந்துட்டேன். 😳

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காவிரிப் பிரச்சினை

விவசாயத்துக்கு தண்ணி இல்லை தண்ணியைத் திறந்துவிடுங்கன்னா, ‘எங்க அணை நிரம்ப அரை அடி பாக்கி இருக்கு, நிரம்புனவுடன் வர உபரி நீர் எல்லாம் உங்களுக்குத்தான். ஆனால் அணை நிரம்பாம நீரைத் திறந்துவிட முடியாது’ன்னு கர்நாடக அரசியல்வாதிங்க சொன்னப்ப அழுவறதா சிரிக்கிறதான்னே தெரியல. நீர் பங்கீடுங்கிறது, இருக்கிறத சரியா பகிர்ந்துக்கிறதுன்னுதான் தமிழில் அர்த்தம் வருது. கன்னடத்தில் ஒருவேளை மிச்சம் மீதியக் கொடுக்கிறதுன்னு அர்த்தம் வருதோ என்னவோ. நல்லவேளையா மழை வந்தது. இல்லைன்னா இந்த காவிரிப் பிரச்சினை மறுபடியும் பெரிசாகியிருக்கும். ஜல் புயலுக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின் நவீனத்துவம்

எனக்கு தமிழ் இலக்கியத்தில் அவ்வளவா பரிச்சயம் இல்லை. ஆனாலும் ஓரளவுக்கு ஆர்வம் உண்டு. எனக்கு பல நாளா புரியாத ஒரு விஷயம் இந்த பின் நவீனத்துவம். அப்படீன்னா என்ன? சத்தியமா தெரியலைங்க. ஆரம்பத்தில் படித்த பின் நவீனத்துவக் கதைகள் பாதி எனக்கு புரியல. சரி, பின் நவீனத்துவக் கதைகள்ன்னா நமக்கு புரியாது போலன்னு விட்டுட்டேன். நேத்து ஒரு சிறுகதைப் படிச்சேன். எனக்கு நல்லாத்தான் புரிஞ்சுது. ஆனால் இதையும் பின் நவீனத்துவம்னுதான் எழுத்தாளர் போட்டு இருந்தார். பின் ந‌வீனம்/இருத்தலிய நவீனம் இதைப்பத்தியெல்லாம் நல்லாத் தெரிஞ்சவங்க, என்னை மாதிரிப் பசங்களுக்கு புரியற மாதிரி விளக்கம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். நிறைய பேர் பின் நவீனக்கதைகள் அருமையா இருக்குன்னு எழுதறாங்க. புரிஞ்சா நாமும் படிக்கலாமேன்னுதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குழப்பம்

நண்பன் ஒருவன் இந்த தீபாவளிக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து பட்டாசு வாங்கியிருந்தான். அவங்கிட்ட, ‘தேவையில்லாமல் இதில் இவ்வளவு காசு செலவு செய்யறதுக்கு பதிலா, யாராவது ஏழைக் குழந்தைக்கு படிப்புக்கு காசு கொடுத்திருந்தா ஒரு நல்ல காரியம் செஞ்ச மாதிரியாவது இருந்திருக்குமில்ல’ன்னு கேட்டதுக்கு, அவன் ‘நாம எல்லாம் பட்டாசு வாங்கிறதாலதான் நிற‌ய ஏழைகளுக்கு வேலை கிடைக்குது. நாம வாங்கிறதை நிறுத்திட்டா அவங்கதான் கஷ்டப்படுவாங்க’ன்னு சொன்னான். இதில எது சரி? :s

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஒரு பையன் பெண்ணுக்கு அனுப்பிய SMS :
ஒரே ஒரு நாள் உன்னோடு
வாழும் ரோஜாவைக் காதலிக்கும்
நீ, வாழ்நாள் முழுக்க உன்னோடு
வாழ விரும்பும் என்னை வெறுப்பது ஏன்?

பெண்ணின் பதில் SMS:
ஹே.. சூப்பர் டயலாக் 🙂

வானவில் – 12/11/2010

வானவில் – 28/10/2010

 KSRTC

அரசு போக்குவரத்து நிறுவனங்களிலேயே தனியாருக்கு இணையான வசதிகளுடன், சிறப்பான சேவைகளைக் கொடுத்துவருவது என்றால் அது கர்நாடகாவின் KSRTC  தான். ஆன்லைன் புக்கிங், பலதரப்பட்ட வண்டிகள் என, இதற்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் பெரிதாக வித்தியாசம் காணமுடியாது. டிக்கெட் கட்டணத்தைத் தவிற. இவ்வளவு சிறப்பான சேவைகளுடன், தனியாரைவிட குறைவான கட்டணம் என்பதால் இங்கே பெங்களூரில், பஸ் பயணம் செய்யும் அனைவரின் முதல் தேர்வு KSRTC தான்.

தமிழ்நாட்டின் SETC இன்னும் ஆன்லைன் முன்பதிவுகளையே ஆரம்பிக்கவில்லை. பஸ் கட்டணத்தைப் பொருத்தவரை இதுதான் இந்தியாவிலேயே மலிவான ஒன்று என்றாலும்,  வசதிகளைப் பொருத்தமட்டில் இதனால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடமுடியவில்லை என்பதே உண்மை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அருந்ததி ராயும், காஷ்மீர் பிரச்சினையும்

அருந்ததி ராய், காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை எனக் கூறியதை வைத்து மிகப் பெரிய அரசியலே நடக்கிறது இங்கு. எந்த டிவியை பார்த்தாலும், அவரைக் கைது செய்ய வேண்டுமா, கூடாதா என்பதுதான் விவாதத்துக்கான விஷயம். அரசின் கொள்கைக்கு எதிராக ஒருவர் பேசிவிட்டால் உடனே அவர்களைக் கைது செய்து விடவேண்டுமா? அப்படி செய்தால், ஜனநாயக அரசுக்கும், சர்வாதிகார அரசுக்கும் என்ன வித்தியாசம்? அடிப்படை உரிமைகள் என்பது எழுத்தளவில் மட்டுமே இருக்கவேண்டுமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரக்த சரித்ரா (த‌மிழில் ரத்த சரித்திரம்)

ரக்த சரித்ரா முதல் பாகம் ஹிந்தி, தெலுங்கில் வெளியாகிவிட்டது. தமிழில் சூர்யாவை ஹீரோவாக சித்தரிக்கும் இரண்டாம் பாகம் மட்டும்தானாம். அது எப்படி முதல் பாகம் பார்க்காமல், இரண்டாம் பாகம் பார்ப்பது?  என்னதான் முதல் பாகத்தின் காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகவோ, இல்லை படம் ஆரம்பிக்கும்போது விவரணமாகவோ (Narration) சொன்னாலும், ஒரு முழுப் படத்தில் உணரவைக்கும் விஷயத்தை சில நிமிடங்களில் உணரவைக்க முடியுமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிருக்கும். உடனே உலகத்தில் அவங்களுக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லைங்கற மாதிரி சொல்லிக்குவாங்க. என‌க்கு எல்லாமே அரைகுறை என்பதால் பெரும்பாலான விஷயங்களில் இவர்களிடம் விவாதத்துக்கு செல்வதில்லை. ஆனால் சில சமயங்களில் நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களையே தவறு எனக்கூறி விவாதம் புரியும்போதுதான் செமக் கோபம் வருது. அதுவும் இவங்க பேசற தோணியே இவன் சொல்லறதெல்லாம் எப்படி ஒத்துக்கிறதுங்கிற மாதிரிதான்.  உலகத்தில் எல்லாம் தெரிஞ்சவனும் எவனும் இல்ல, எதுவும் தெரியாதவனும் எவனும் இல்ல. எல்லோர்க்கிட்டயும் நாம கத்துக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. இதை புரிஞ்சிக்கிற யாரும் இப்படி பெருமை பேசிட்டு இருக்க மாட்டாங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SMS

ஒரு காமெடி கவிதை
அருகம்புல் போல் என் காதல்
வளர்ந்து கொண்டிருக்கும்போது
அவள் அப்பன் எருமை மாடு
போல மேய்ந்துவிட்டான். 😀

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வானவில் – 28/10/2010

வானவில் – 21/10/2010

எந்திரன்

இந்தப் படத்தைப் பத்தி நல்லதாகவோ கெட்டதாகவோ ஏதாவது ஒரு செய்தி வந்துக்கிட்டேதான் இருக்கு. ஒரு பக்கம் படம் 300 கோடிக்கு மேல வசூல் பண்ணி பல சாதனைகளை முறியடிச்சிருக்குன்னு ஒரு செய்தி. இன்னொரு பக்கம் வேறு எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு தியேட்டர் முதலாளிகள் மிரட்டப்படறாங்கன்னு ஒரு செய்தி. படம் இவ்வளவு வசூல் பண்ணினால் எதுக்காக தியேட்டரை விட்டுத் தூக்கப் போறாங்க?  எந்த பெரிய படமும் வந்த மாதிரியும் தெரியல‌. ஒண்ணுமே புரியல.. 🙄

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அஜித்‍-கலைஞர்-அம்மா

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு கூடின கூட்டம் உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்காததுதான். அங்க பேசின ஜெயலலிதா இரண்டு நடிகர்களை திமுக மிரட்டினதாகவும் அவங்க இந்த அம்மாக்கிட்ட வந்து புகார் சொன்னதாகவும் சொல்லியிருக்காங்க. அதில் ஒருத்தர் அஜித்‍ என எல்லோருக்கும் தெரியும்படியே இந்த அம்மா பேசினாங்க. பாவம் அஜித் இன்னொரு முறை கலைஞர் வீட்டுக்குப் போய் மன்னிப்பு கேக்கணும். இன்னொரு நடிகர் விஜய்ன்னு சொல்லறாங்க. உண்மையான்னு தெரியல. விஜயை காசு வாங்காம நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினாங்களா? எந்த படத்துக்கா இருக்கும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-0 ன்னு இந்தியா ஜெயிக்கும்ன்னு பெங்களூர் போட்டியோட நாலாவது நாள் சொல்லியிருந்தாக் கூட நான் உட்பட பல பேர் நம்பியிருக்க மாட்டோம். இந்தியா ஆஸ்திரேலியா போட்டிகள்ல‌ எப்பவுமே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்த முறை மொகாலில நடந்த போட்டி நிச்சயமா சமீப காலங்களில் நடந்த போட்டிகளிலேயே சிறந்த ஒன்று. அதுவும் இந்தியா ஜெயிச்சதால சம்திங் ஸ்பெஷ‌ல். ஒருநாள் தொடரும் அருமையாக ஆரம்பிச்சிருக்கு. முதல் போட்டி ஜெயிச்சாச்சு. இதையும் 2-0 என ஜெயித்தால் சூப்பரா இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

டென் ஆக்சன்+

நம் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்களை ஒப்பிடும் போது கால்பந்து ரசிகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆனாலும் போன உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முந்தைய போட்டிகளைவிட அதிக மக்கள் பார்த்தனர் என டிஆர்பி ரேட்டிங்க் சொன்னது.  இதன் காரணமாகவே கால்பந்துக்குனே புதுசா டென் ஆக்சன்+ அப்படின்னு ஒரு புது சேனலை ஆரம்பித்திருக்கிறது டென் ஸ்போர்ட்ஸ். இது பழைய ஜீ ஸ்போர்ட்ஸ்‍-இன் புது பெயர்தான் என சொன்னாலும் முழுக்க முழுக்க கால்பந்துக்கு என ஒரு சேனல் இந்தியாவில் இருப்பது பலருக்கு ஆச்சர்யமானதுதான். ஆனால் இதன் விளம்பரத்தில் எந்த எந்த நாட்டோட லீக் போட்டிகள் எல்லாம் போடறதா காமிக்கிறாங்க, இந்தியாவின் ஐ‍-லீக் மட்டும் மிஸ்ஸிங். ஐ-லீக் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையும் இவங்கக்கிட்டதான் இருக்கு. இவங்க பார்த்து சரியான முறையில் விளம்பரப் படுத்துனா ஐ-லீக்கும் பிரபலம் ஆகும். நம்ம வீரர்களுக்கும் நல்லது நடக்கும். செய்வாங்களா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வானவில்

நானும் இந்த மாதிரி கதம்ப பதிவுக்கான பேரு தேடித்தேடி அலுத்துப்போய் ஒருவழியா வானவில்லுன்னு பேரு வச்சிட்டேன். என்ன பண்ணறது எந்த பேரை யோசிச்சாலும் யாரோ ஒருத்தர் முன்னமே வச்சிருக்காங்க. கடைசியா வந்தால் இதுதான் பிரச்சினை. எதிர்கால சந்ததியனரை மனசில வச்சு சில பெயருங்களை விட்டு வைங்கப்பா. எங்களை மாதிரி புது பசங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறோம் பார்த்தீங்களா!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வானவில் – 21/10/2010

வானவில் – 29/09/2010

சில நிகழ்வுகளை  பகிர்ந்துகொள்ள நினைத்தாலும், அவற்றில்  ஒரு முழுப் பதிவாக போடும் அளவுக்கு விஷயங்கள் இல்லை என்பதால் அப்படியே விட்டுவிடுவதுண்டு. இவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன என கேபிள் சங்கர் அவர்களின் கொத்து பரோட்டா-வைப் பார்த்த போது தோன்றியதால் இந்த முயற்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Dan Brown புத்தகங்களைப் படிச்சதிலிருந்து பழங்காலச் சர்ச்-களைப் பார்க்கணும்ன்னு ஒரு ஆசை. நான் போன ஒண்ணு ரெண்டு சர்ச்ல எல்லாம் ஒரே நீளமான வழிபாட்டு அறை (Prayer Hall)  இருக்கும்,  அங்கே ஏசு சிலுவையில் அறையப்பட்ட சிலை ஒண்ணு இருக்கும்.  ஆனால் இவரோட புத்தகங்கள்ல Chapel  அது இதுன்னு எழுதி இருப்பாரு. சரி இதெல்லாம் என்னன்னு ஏதாவாது ஒரு பழைய சர்ச் போய் தான் தெரிஞ்சிக்கணும்ன்னு முடிவு பண்ணி, பெங்களூரில் உள்ள பெரிய சர்ச்-ஆன St.Patrick’s Church -க்கு போனோம். உண்மையிலேயே அருமையான இடம். 1889 -ல் கட்டியிருக்காங்க. Chapel ன்னா என்ன,  எப்படி இருக்கும்ன்னு இங்க பாத்து தெரிஞ்சிக்கிட்டோம்.  வழிபாட்டு அறை (Adoration Hall) அப்படின்னு ஒரு தனி கட்டிடம் இருக்கு. உள்ள போய் நீங்க அருமையா, அமைதியா தியானம் பண்ணலாம்.  நாங்க சர்ச் உள்ள போய் அங்கே சுவத்துல இருந்த சிலைகள், கல்வெட்டுகளை எல்லாம் வரிசையைப் படிச்சுக்கிட்டு வந்துட்டிருந்தோம்.  ஒருத்தர் மட்டும் எங்கள முறைச்சு பார்த்துக் கிட்டே இருந்தார். நாங்க பண்ணதுல ஏதாவது தப்பான்னும்  தெரியல. யாரையும் தெரியாதுங்கறதால யாரையும் கேக்கவும் முடியல.  அவர் முறைச்சிட்டு போகட்டும், நாம நம்ம வேலைய பாப்போம்ன்னு சுத்திப் பாத்துட்டு வந்துட்டோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரில்  உள்ள விஸ்வேஸ்வரய்யா  தொழிற்நுட்ப  அருங்காட்சியகத்துக்கு  (Vishveshvarayya  Technological  Museum)  போயிருந்தோம். பள்ளிக் குழந்தைகளைக்  கூட்டிப்போக  அருமையான இடம். நாம் தினசரி வாழ்வில் சந்திக்கக் கூடிய பல விஷயங்களை அறிவியல் ரீதியாக  விளக்கியிருந்தார்கள்.  அதுவும் ஒவ்வொரு விஷயத்தையும் செயல்முறை மாதிரிகளை (Prototype) வைத்து விளக்கியிருந்தது மிகவும் உபயோகமான ஒன்று. பள்ளிக் குழந்தைகளை உள்ளே கொண்டு விட்டால், எந்த செலவுமில்லாமல் ஒரு 3, 4 மணி நேரம் பொழுதைக் கழிப்பார்கள். நாலு விஷயங்களை அவர்களுக்கு கத்துக் கொடுத்தாற்போலவும் இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மியூசியத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்த போது, கண்டீர்வா மைதானத்தில் ஏதோ தமிழ் பாட்டு சத்தம் கேட்டதுன்னு உள்ளே போனோம்.  உள்ள போனால், கேந்திரிய  வித்யாலயா  பள்ளிகளின் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவாம். குழந்தைகள்  ஆடும்போது  அவர்கள் செய்யும்  தவறுகளும் ரசிக்கும் படியாகத்தான் இருக்குது.    ஒரே ஒரு ஒருத்தலான விஷயம் என்னன்னா, மரியாதைக்கு கூட யார் என்னன்னு யாரும்  கேக்கல.  இப்படி இருந்தால், அவ்வளவு குழந்தைகள் கூடி இருந்த மைதானத்துக்கு யார் வேணா வந்து என்ன வேணால் செய்திருக்கலாம்.  இவங்க எல்லாம் எப்போதான் திருந்துவாங்களோ.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு வழியா நேத்து எந்திரன் டிக்கெட் புக் பண்ணிட்டேன். பாக்கறவன், பேசறவன் எல்லாம் படம் புக் பண்ணிட்டயான்னுதான் கேக்கறான். நேத்துதான் இங்க முன்பதிவு ஆரம்பிச்சுது. ஆரம்பிச்ச சில மணிகளிலேயே முதல் மூணு நாளைக்கு டிக்கெட் இல்லைன்னாங்க. அதுவும் புக்கிங் ஆரம்பிச்சு 1  மணி நேரத்தில் Inox சர்வர்  காலி.  மத்த  மாநில  பசங்க எல்லாம் அப்படி என்ன இந்த படத்தில இருக்குன்னு இவ்வளோ அலைஞ்சு புக் பண்ணறீங்க? ன்னு கேக்கறப்போ  ‘ரஜினி’ -ங்கறத தவிர நம்ம பசங்க வேற எதையும் சொல்லல.  

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேற்று முன்தினம் ரஜினி, நேற்று ஷங்கர், இன்னிக்கு ரஹ்மான்.. சன் டிவில புது டிரைலர்   பாக்கும்போதே  அடுத்த சிறப்பு நிகழ்ச்சி ரெடின்னு தெரியுது.  இன்னும் ஒண்ணு, ரெண்டு வாரத்தில, திரைப்படம் உருவான விதம்ன்னு ஒரு 8 மணி நேர நிகழ்ச்சிக்கு தயாராகுங்கள். இந்த ஒரு படத்தை வச்சு இன்னும் என்ன என்ன பண்ணுவாங்களோ தெரியல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவுக்கு முதலில் ‘சில குறிப்புகள் எனத்தான் பெயர் வைத்திருந்தேன். இதன் தொடர்பாக அடுத்த பதிவு எழுதும்போதுதான் ‘வானவில்’ என்ற பெயர் தோன்றியது. அதனால் இந்தப் பதிவுக்கும் பெயரை மாத்திட்டேன். 🙂

வானவில் – 29/09/2010