உலகத் திரைப்படங்கள் 6 – The Color Purple

கலர் பர்ப்பிள் (The Color Purple), 1900ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆஃப்ரிக்க, அமெரிக்கப் பெண்கள் அனுபவித்த வறுமை, இனவெறி, பாலியல் கஷ்டங்களைத் தாண்டி வெற்றிபெரும் ஒரு பெண்ணின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் வரையில், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Stephen Spielberg) ‍-க்கு, வேற்று கிரக வாசிகளையும், கொடூரமான விலங்குகளையும் விட்டால் வேறு எதைப் பற்றியும் படமெடுக்கத் தெரியாது எனத்தான் நினைத்திருந்தேன். இந்தத் திரைப்படம், ஸ்பீல்பெர்கின் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. இவ்வளவு உணர்வுப் பூர்வமான படத்தை எடுக்க முடிந்த ஸ்பீல்பெர்க் ஏன் இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்க முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.

படத்தின் கதாநாயகி செலியாக (Celie) வரும் வூப்பி கோல்டுபெர்க் (Whoopi Goldberg) -இன் அற்புதமான நடிப்பே இதன் முதுகெலும்பு. கணவனுக்கு பயந்து நடுங்கும் போதும், இறுதியில் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி விலகும்போதும், கணவனின் தோழியான‌ ஜாஸ் இசைப்பாடகியுடன் நட்பு கொள்ளுமிடத்திலும், தங்கையை பல நாட்கள் கழித்து காணுமிடத்திலும், என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை பதிவு செய்திருப்பார் இவர். இந்தப் படத்திற்காக இவர் சிறந்த நடிப்புக்கான கோல்டென் க்ளோப் (Golden Globe) விருதினைப் பெற்றார்.

இது போன்ற படங்களில் வில்லன் நடிகரின் நடிப்பு கதை நாயகர்களை விட முக்கியமானது. அதை உணர்ந்து மிகச் சிறப்பாக செய்திருப்பார் செலியின் கணவன் ஆல்பர்ட் ஜான்ச‌னாக வரும் டேனி க்ளோவர் (Danny Glower). கதையின்படி இளம், நடுத்தர, முதுமை என மூன்று நிலைகளிலும் இவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்தது.

இவர்கள் மட்டுமில்லாமல், முதலில் செலியின் கணவனின் தோழியாக வீட்டுக்குள் வந்து கொஞ்சம், கொஞ்சமாக செலியின் நெருங்கியத் தோழியாகி, செலியின் திறமைகளை அவளுக்கு எடுத்துச்சொல்லி, அவளும் தனியாக வாழும் தைரியத்தை அளிக்கும் கதாபாத்திரமான ஷக் ஆவ்ரி என்னும் ஜாஸ் பாடகராக வரும் மார்கரெட் ஆவ்ரியும் (Margaret Avery), ஆல்பர்ட் ஜான்சனின் முதல் மகனுக்கு மனைவியாக, மிகவும் தைரியமான பெண்ணாக வந்து, பின்னர் வெள்ளையர்களின் அடக்குமுறையால் அடங்கிப் போய், இறுதியில் அவர்களையே எதிர்க்கும் தைரியம் கொள்ளும் ஷோஃபியா கதாப்பாத்திரத்தில் வரும் ஓபரா வின்ஃப்ரே (Oprah Winfrey), செலியின் தங்கை நெட்டீயாக (Nettie) வரும் பெண் என அனைவரது நடிப்புமே மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்தப் படத்தில்.

வழக்கமான ஸ்பீல்பெர்க் படங்களிலிருந்து முற்றிலும் மாறி, ஒரு காட்சி கூட கிராஃபிக்ஸோ, இல்லை வேறு தந்திரங்களோ இல்லாமல், முழுக்க முழுக்க கதையையும், கதாப்பாத்திரங்களின் நடிப்பையும் நம்பி எடுக்கப் பட்ட படம். இதில் ஸ்பீல்பெர்க் வெற்றிபெற்றிருக்கிறார்.

கலர் பர்ப்பிள் (Color Puple)  நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

Advertisements
உலகத் திரைப்படங்கள் 6 – The Color Purple

நந்தலாலா – எளிமையின் அழகியல்

சலசலக்கும் நீரோடையின் பின்னணியுடன் அமைதியாக டைட்டில் போடுவதிலேயே புரியவைத்து விடுகிறார்கள் இது வழக்கமான படமல்ல என்று.

வேறுவேறு சூழ்நிலைகளால் அம்மாவை பிரிந்து வாழும் இருவர் தங்கள் தாயைத்தேடி ஒரே பாதையில் பயணிக்கும்  பயணமும், அவர்கள் இடையில் சந்திக்கும் மனிதர்களும் தான் நந்தலாலா. எனக்குத் தெரிந்து இதற்குமுன் ஒரு பயணப் படம் இவ்வளவு அழுத்தமான உணர்வினைப் பதிய வைத்ததாக நினைவில்லை.

தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் மிஷ்கின். பல இடங்களில் வசனமே இல்லாமல் வெறும் காட்சிப்படுத்துதலில் மட்டுமே அனைத்தையும் நமக்கு புரிய வைத்திருக்கிறார். இதுதான் தன்னுடைய மாஸ்டர் பீஸ் என அவர் பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருந்தது பொய்யில்லை என்பது படத்தைப் பார்க்கும்போது புரிகிறது.

கேமராமேன் மகேஷ் முத்துசாமி. இதுபோன்ற பயணப் படங்களுக்கு ஒளிப்பதிவு மிகமிக அவசியம். அந்த பசுமையான வயல் பரப்புகளிடையே நீண்டு செல்லும் சாலைகளில் பயணிக்கும் பாஸ்கர் (மிஷ்கின்), அகியுடன் (அஸ்வத்) சேர்த்து நம்மையும் பயணிக்க வைக்கிறது இவரது ஒளிப்பதிவு. பல இடங்களில் அவர்களது காலைமட்டுமே காட்டி காட்சியை புரியவைக்கும் உத்தியும், கேமராவை நிலையாக ஒரே இடத்தில் வைத்து எடுத்திருக்கும் காட்சிகளும் அருமை. சிறுவன் அகி அவன் அம்மா எங்கே எனக் கேட்கும்போது, மிஷ்கினின் கையின் நிழலை மட்டும் காட்டுவது அருமை.

படத்தின் நிஜ ஹீரோ இசைஞானி இளையராஜாதான். பெரும்பாலான காட்சிகள் வசனமில்லாமல் பயணிக்கும்போது, இவரின் இசை நம்மை படத்துடன் கட்டிப்போட்டு விடுகிறது. இவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்துக்கு படத்தின் இயல்பு மாறாமல் இவ்வளவு சிறப்பாக இசையமைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. பாடல்கள் சரியான இடத்தில் பின்னணி இசைக்குரிய நேர்த்தியுடனெ அமைந்திருப்பது இன்னொரு ப்ளஸ். அதுவும் ‘தாலாட்டுக் கேட்க நானும்’  பாடல் வருமிடமும், இளையராஜாவின் குரலும் நம்மை கலங்க வைக்கின்றன.‌

அது என்னவோ தெரியவில்லை. ஒருபடத்தின் கதை மனதைத் தொடும் வகையில் அமைந்துவிட்டால் படத்தில் பணியாற்றும் அனைவருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துவிடுகிறார்கள். அதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

படத்தில் நடித்திருக்கும் அனைவரது நடிப்புமே அருமை. சிறுவன் அகியாக வரும் அஸ்வத் மற்றும் மனனிலை பிறழ்ந்த பாஸ்கர் மணியாக வரும் மிஷ்கின். திரைக்கதை முழுக்க இவர்களின் கால்களில்தான் பயணிக்கிறது. இருவருமே அருமை. மிகச்சிறப்பான நடிப்பு. மிஷ்கின் தான் நடித்த கதாப்பாத்திரத்துக்கு பல நடிகர்களைக் கேட்டாராம். எதற்காக தனது நேரத்தை வீணடித்தார் எனத்தெரியவில்லை. இவரைவிட சிறப்பாக அந்தப் பாத்திரத்தை வேறு ஒருவரால் செய்ய முடிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

படத்தில் சின்னச்சின்னதாக நிறைய பாத்திரங்கள். அனைத்தும் 5 முதல் 15 நிமிடங்கள்தான். கண்தெரியாதப் பாட்டி, அகியிடம் அவ்வப்போது காசு பெறும் வேலைக்காரி, போலீஸ்காரர், இளநீர் கடைக்காரர், சைக்கிளில் இருந்து கீழே விழும் பள்ளி மாணவி,  தன்னுடைய நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் கால் ஊனமானவர், அதே நிலையில் இருக்கும் அந்த டாக்டர், மாட்டுவண்டியில் மிஷ்கினையும், சிறுவனையும் கூட்டி செல்பவர், லாரி டிரைவர், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் தடிமனான இருவர், சிறுவன் அகியின் அம்மா, விபச்சாரியாக வரும் ஸ்னிக்தா, அம்மா 40கிமீ வேகத்துக்கு மேல் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்கன்னு சொல்லிட்டு காரில் ஹனிமூன் செல்லும் தம்பதியர், அந்த காருக்கு பீரபிஷேகம் செய்யும் இளைஞர் பட்டாளம், ஸ்னிக்தாவை தூக்கிப்போக நினைக்கும் வயதான கிழவன், பாஸ்கர் மணியின் குடும்பம், லாரியில் கடந்துபோகும் நாசர் என ஏகப்பட்டக் கதாப்பாத்திரங்கள். இவ்வளவையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்றாலே தெரிந்திருக்கும் எந்த அளவுக்கு அந்த சிறிய நேரத்தில் ஒவ்வொரு கதாப் பாத்திரமும் நம் மனதை ஈர்க்கின்றன‌ என்று. ஸ்னிக்தா மட்டும் கொஞ்சம் அதிக நேரம் வருகிறார். நல்ல அளவான நடிப்பு.

தமிழ் சினிமாவில் தான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என மேடைக்கு மேடை பேசும் கமல்ஹாஸன் மிஷ்கின் போன்ற படைப்பாளிகளின் படங்களை நிராகரித்துவிட்டு ரவிக்குமாரின் கமர்ஷியல் படங்களில் நடிப்பது சற்றே வருத்தமாகத்தான் இருக்கிறது. கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய பெர் இருக்கிறாங்க சார். இதுபோன்ற படங்களில் நடிப்பதுதான் உண்மையிலேயே தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுபோகும் முயற்சி. கமல் போன்றவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

நம்ம ஆளுங்களுக்கு, காதல், ரவுடி இதைத்தவிற வேறு எதுவும் எடுக்கத் தெரியாது என்றக் குற்றச்சாட்டுக்கு பதிலாக வந்திருக்கிறது இந்தப் படம்.  படத்தில் குறையே இல்லையா? இவ்வளவு நிறைகள் இருக்கும்போது, ஒரு சில சிறுகுறைகளை கண்டுக்காமல் விட்டுவிடலாம்.

ஆனால் படத்தின் விளம்பரம் போதுமான அளவுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஓசூரில் தியேட்டருக்கு வழியை சொன்னவர், என்னப் படம் எனக் கேட்டபோது, நாங்கள் ‘நந்தலாலா’ என சொன்னோம். உடனே அவர் ‘ஓ.. தெலுங்குப்படமா?’ எனக்கேட்டுவிட்டு போய்விட்டார். இது போன்ற நல்லப் படங்களுக்கு விமர்சனங்கள் மட்டுமல்ல, விளம்பரங்களும் தேவை.

Pics: indiaglitz.com

நந்தலாலா – எளிமையின் அழகியல்

உலகத் திரைப்படங்கள் 5 – Viva Cuba

குழந்தைகளை முக்கிய கதாப்பாத்திரங்களாகக் கொண்டு எடுக்கப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்ற படங்களில் ஒன்று Viva Cuba. பெற்றோர்களின் இட மாற்றத்தினால் தங்கள் நண்பர்களையும், தெரிந்தவர்களையும் பிரியும் குழந்தைகளின் கவலைகளையும், அதைத் தடுக்க அவர்கள் செய்யும் முயற்சிகளும்தான் படத்தின் மையக்கரு.

மாலு (Malu), ஜோகிடோ (Jogito)  இருவரும் நெருங்கிய நண்பர்கள். மாலுவின் தாய் தன கணவனைப் பிரிந்து தனியே வாழும் ஒரு பெண். மேலும் அவர் கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு, கியூபாவில் நடக்கும் கம்யூனிச ஆட்சியை வெறுப்பவள். இதனாலேயே அவர்களது பக்கத்து வீட்டில் இருக்கும் ஜோகிடோவின் தாய்க்கு இவரைப் பிடிப்பதில்லை. இருவருமே தங்கள் குழந்தைகள் ஒன்றாக விளையாடுவது பிடிக்காமல் தடுக்கப் பார்க்கின்றனர். ஆனாலும் குழந்தைகளின் நட்பு மேலும் உறுதிப் படுகிறதே தவிர குறைவதில்லை.

இந்நிலையில், கியூபாவை விட்டு வெளியேற மாலுவின் தாய் முடிவெடுப்பதை அறிகின்றனர் நண்பர்கள் இருவரும். இதைத் தொடர்ந்து, நாட்டின் வேறு ஒரு பகுதியில் இருக்கும் அவள் தந்தையை அனுமதிக் கடிதத்தில் கையெழுத்திடாமல் செய்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்பதால், அவள் தந்தையைத் தேடி இருவரும் யாருக்கும் தெரியாமல் கிளம்புகின்றனர். இருவரும் மாலுவின் தந்தையை கண்டுபிடித்தார்களா, இவர்களைக் காணாமல் தேடிய ஜோகிடோவின் குடும்பத்தினரும், மாலுவின் தாயாரும் இவர்களை கண்டுபிடித்தனரா, என்பது மீதிக்கதை.

படத்தின் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒளிப்பதிவுதான். அவர்கள் இருவரின் பயணத்தினூடாக, கியூபாவின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை அற்புதமாகப் படம் பிடித்திருப்பார். அதே போல படத்தின் திரைக்கதை. குழந்தைகளின் கோபம், சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார் இயக்குனர். பலக் காட்சிகளை வசனமில்லாமல் காட்சிகள் மூலம் விளக்கும் திறமை இவருக்கும் நிறைய இருக்கிறது.

மேலும் கியூபாவின் வாழ்க்கை முறையும், பள்ளிகளில் நடக்கும் பழக்க வழக்கங்களையும் உலகினரிடையே பெருமையாகக் காட்டும்படி படம் எடுக்கப்பட்டிருக்கும். படத்தின் கதையே நாட்டை விட்டு போக விரும்பாத ஒரு சிறுமியைப் பற்றியதுதான் என்பதால் நாட்டின் அழகினைக் காட்டும் காட்சிகள் அதற்கானக் காரணத்தை விளக்குவதாக அமைந்திருக்கின்றன.

கதையின் முக்கியப் பாத்திரங்களான  இருவரும்  மிக  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இருவருக்கும் இடையில் சண்டை மூளும்போதும், பேய் இருக்கிறதென்று மாலு பயப்படும்போது, தான்  பயப்படாமல் இருப்பதாக ஜோகிடோ  நடிக்கும் இடத்திலும், இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். 

படம் நிச்சயமாக ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். கண்ணுக்கு குளுமையானக் காட்சியமைப்புகளுடனும்,  கதையோடு  ஒன்றிய இயல்பான நகைச்சுவைக் காட்சிகளிலும் நிச்சயம் இரண்டு மணிநேரம் செலவிடலாம். இந்த படம் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதினை கேன்ஸ் திரைப்படவிழாவில் பெற்றது.

உலகத் திரைப்படங்கள் 5 – Viva Cuba

உலகத் திரைப்படங்கள் 4 – Children Of Heaven

குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் மிகச் சிறப்பான திரைப்படம் Children Of Heaven. உலக சினிமாவிற்கு   பல நல்ல படைப்புகளை அளித்த இரானில் இருந்து வெளிவந்த மற்றுமொரு அற்புதமான திரைப்படம் இது. குழந்தைகளின்   இன்ப, துன்பங்களையும், அவர்களின் உலகத்தையும் மிக அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பார் மஜீத் மஜிதி (Majid Majidi).

இத்திரைப்படத்தின் கதை மிக எளிமையானது. அலி, ஜாரா என்ற இரு அண்ணன், தங்கையின் உலகில் நடக்கும் நிகழ்வுகள். சாராவின் அறுந்து போன காலணியை (Shoe)  வரும் வழியில் தொலைத்துவிடுகிறான் அலி.

அவன் குடும்பம் வறுமையின் பிடியில் இருக்கிறது. வீட்டு வாடகை ஐந்து மாதமாகக் கொடுக்க முடியாததால் வீட்டுக்காரர் வந்து திட்டி செல்வதைப் பார்க்கும் அவன், காலணி தொலைந்த விஷயத்தை பெற்றோர்களிடம் இருந்து மறைத்து விடுகிறான்.

ஜாராவிடம் இதைச் சொல்ல அவர்கள் இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் சமாளிக்க முடிவு செய்கிறார்கள். இதன்படி காலையில் பள்ளிக்கு செல்லும் ஜாரா, அலியின் காலணிகளை அணிந்து செல்கிறாள். அலிக்கு மதியம்தான் பள்ளி என்பதால் வழியில், அவளிடம் தன் காலணிகளைப் பெற்றுக் கொண்டு அவன் பள்ளிக்கு செல்கிறான்.  ஆனால் இத்திட்டத்தின் படி, அவளை வழியில் பார்த்து காலனிகளி மாற்றிக் கொண்டு செல்ல நேரம் ஆவதால், தினமும் பள்ளி ஆசிரியர்களிடம் திட்டு வாங்குகிறான் அலி.

இந்நிலையில், சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி பற்றிய அறிவிப்பு வருகிறது. முதலில் அதில் ஆர்வமில்லாமல் இருக்கும் அலி, அந்தப் போட்டியில்  மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு காலணிகள் பரிசளிக்கப்படும் எனத் தெரிந்ததும் அதில் கலந்துகொள்ள ஆசிரியரை அணுகுகிறான். போட்டியில் பதிவு செய்யும் கடைசி நாள் முடிந்திருந்தும், இவனது வேகமான ஓட்டத்தைப் பார்த்து அவனைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கிறார் ஆசிரியர். அவன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாமிடம் பெற்றானா, அவர்களின் கவலை தீர்ந்ததா என்பதை படத்தில் பாருங்கள்.

படத்தில் மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயம், அந்த இரு குழந்தைகளின் நடிப்பும், அவர்களை வைத்து அற்புதமாக இயக்கிய  இயக்குனரும் தான்.  அலியாக நடித்திருக்கும் சிறுவன்தான் படத்தின் ஆணிவேர். படத்தின் கதை முழுக்க அவனைச் சுற்றியே நடக்கிறது. அந்த சிறுவன் தனது மிகச் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தியிருப்பான்.  குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சிகளான மாரத்தான் பந்தயக் காட்சிகளில் நம்மை லயித்துப் போகச் செய்வது இவனின் நடிப்பே. ஜாராவாக நடித்திருக்கும் சிறுமியும் தனது பங்கை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருப்பாள். குறிப்பாக அவள் அலியிடம் இந்த காலணி மாற்றத்தினால் அடையும் துன்பங்களைப் பற்றி விளக்குமிடமும், தன் காலணி மற்றொரு பெண்ணிடம் இருப்பது தெரிந்தும் அவளின் தந்தை கண் தெரியாதவர் என்று தெரிந்து காலணிகளைப் பற்றி கேட்க முடியாமல் நிற்கும் இடத்திலும் அவளின் நடிப்பு பிரகாசிக்கும்.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது நம்மையும்  குழந்தைகளின் மன நிலைக்கு அழைத்துச்செல்வது  நிச்சயம் இயக்குனரின் திறமைதான். அதுவும் குறிப்பாக, மாரத்தான் பந்தயத்தின் ஒரு சமயத்தில் அந்த சிறுவன் முதலிடம் வரும்போது, இவன் மூன்றாமிடம் வந்தால்தானே காலணி கிடைக்கும் என நம்மையும் பதைபதைக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. நிச்சயமாக எல்லா மொழிகளுக்கும் ஏற்ற மிகச் சிறப்பான ஒரு படம் இது. இப்போது தமிழில் வித்தியாசமாக பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யாராவது இதை தமிழில் எடுத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அதிலும் தனியாக இன்னொரு காதல் கதையை செருகாமல், முழுக்க முழுக்க குழந்தைகள்  படமாகவே  எடுத்தால் மட்டுமே, இதன் எளிமையின் அழகியலை  சரியாக காட்ட முடியும் என்று தோன்றுகிறது.

உலகத் திரைப்படங்கள் 4 – Children Of Heaven

உலகத் திரைப்படங்கள் 3 – Spring, Summer, Fall, Winter… and Spring

‘வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி. பெரும்பாலும் ஒரே சம்பவங்கள்தான் திரும்ப திரும்ப நடைபெறுகின்றன. எனவே முன்னோர்களின் அனுபவங்கள் நிச்சயம் நமக்கு உதவும்’ எனும் கருத்தை அடிப்படையாக கொண்ட கொரிய மொழித் திரைப்படம் இந்த ‘Spring, Summer, Fall, Winter… and Spring ‘.

இப்படம் ஐந்து பகுதிகளைக்கொண்டது. ஒவ்வொரு பகுதியும் படத்தின் பெயரில் உள்ள ஒவ்வொரு கால நிலைகளில் அமைக்கப் பட்டிருக்கும். மேலும் ஒவ்வொரு பகுதியும், ஒரு புத்த தோவியின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

வசந்த காலத்தில் படம் ஆரம்பிக்கிறது. அழகான கண்ணுக்கு குளுமையான ஒரு மலையடிவார புத்த மடத்தில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே ஒரு துறவியும் ஒரு சிறுவனும் வாழ்கிறார்கள். சிறுவன் ஒரு மீனின் வாலில் சிறு கல்லைக்கட்டி விட்டு அது நீந்த கஷ்டப்படுவதைப் பார்த்து சிரிக்கின்றான். பிறகு இதையே ஒரு பாம்பு மற்றும் தவளைக்கும் செய்கிறான். இதைக்கண்ட துறவி, ‘இவற்றில் ஒன்று இறந்தாலும் நீ அந்த கல்லை நெஞ்சில் சுமப்பாய்’ எனக் கூற, இவன் கல்லை எடுக்க செல்லும்போது அனைத்தும் இறந்துகிடப்பதைப் பார்த்து அழுகிறான். இத்துடன் முதல் பகுதி முடிகிறது.

பிறகு படம், கோடைக் காலத்தில் தொடர்கிறது. இப்போது அச்சிறுவன் இளம் வயதில் இருக்கின்றான். அப்போது ஒரு பெண்ணும் அவள் தாயும் அந்த மடத்திற்கு வருகின்றனர். அந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவளை அங்கேயே வைத்து குணப்படுத்தும்படியும் கேட்க, துறவி ஒப்புக்கொள்கிறார். இந்நிலையில், அந்த பெண்ணும் இவனும் ஒரே வயதில் இருப்பதால், சிறிது சிறிதாக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படுகிறது. அவர்கள் நெருக்கம் அதிகரித்து, உடலுறவு வரை சென்றுவிடுகிறது. இது நடந்தபின், அவர்கள் தொடர்து உல்லாசமாக இருக்க, ஒரு நாள் துறவிக்கு இது தெரியவருகிறது. இதனால் அவர் அந்த பெண்ணை மடத்தை விட்டு அனுப்பிவிடுகிறார். ஆனால் அவளின் பிரிவை தாங்கமுடியாத கதாநாயகனும் மடத்தை விட்டு அவளைத்தேடி சென்றுவிடுகிறான். இத்துடன் இரண்டாம் பகுதி முடிவுறுகிறது.

இலையுதிர்காலத்தில் நடக்கும் மூன்றாம் பகுதியில், தனியாக அந்த மடத்தில் வாழும் துறவி, தனது சிஷ்யன் ‘மனைவியைக் கொன்றதற்காக தேடப்படுகிறான்’ என்பதை அறிகிறார். அவன் மடத்துக்கே திரும்பவர, அங்கே இருக்கும் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறான். இது நடந்தவுடன், தனது முடிவு நெருங்கியதை அறிந்த துறவி, நடு குளத்தில், ஒரு படகில் உட்கார்ந்து தீயிட்டு உயிரை விடுகிறார்.

நான்காம் பகுதியில், குளிரில் உறைந்து போன குளத்தின் நடுவில் இருக்கும் அந்த மடத்திற்கு தண்டனை முடிந்து, நடுத்தர வயதினனாக திரும்பி வருகிறான் கதாநாயகன். குருவின் நிலை தெரிந்துகொள்ளும் அவன், தொடர்ந்து தயாநதில் ஈடுபடுகிறான். இந்நிலையில் ஒரு பெண் அங்கே தன குழந்தையை விட்டுவிட்டு போகும் வழியில், குளத்தின் ஒரு பகுதியில் விழுந்து இறந்துவிட, அந்த குழந்தையை வளர்க்க தொடங்குகிறான்.

மீண்டும் வசந்த காலம் வருகிறது. இப்போது கதாநாயகன் சற்றே முதிர்ந்த வயதில் இருக்கிறான். அவன் வளர்க்கும் சிறுவன் தற்போது ஒரு மீனின் வாலில் கல்லைக்கட்டி விளையாடுகிறான். இத்துடன் படம் நிறைவடைகிறது.

படத்தின் மிகச்சிறப்பான ஒரு விஷயம், மலைச்சாரலில் இருக்கும் குளத்தின் நடுவே மிதந்தபடி இருக்கும் அந்த சிறிய மடம். அந்த ரம்மியமான சூழ்நிலையை நான்கு வெவ்வேறு கால நிலைகளிலும் மிக அற்புதமாக படமாக்கி இருப்பார்கள். அந்த குடிலை அமைத்த கலை இயக்குனரும், அதை அணைத்து கால நிலைகளிலும் மனதை கொள்ளை கொள்ளும்படி காண்பித்த ஒளிப்பதிவாளர் இருவரும் மிகவும் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்கள்.

படத்தில் சிறப்பாக சொல்லப்படவேண்டிய மற்றுமொரு விஷயம், அதன் இசை. காலநிலைக்கு ஏற்றார்போல் மென்மையான இசையும் இடையே வரும் ஒரு மெல்லிய கீதமும் நிச்சயம் மனதை கவரும். சிறப்பான திரைக்கதைக்காகவும், அற்புதமான செட் மற்றும் ஒளிப்பதிவிற்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.

எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் மிக அற்புதமாக வாழ்க்கையின் தத்துவத்தை அற்புதமாக விளக்கி இருப்பார் படத்தின் இயக்குனர் Kim Ki-duk. கதாநாயகனுக்கும் அவன் காதலிக்கும் இடையே சில நெருக்கமானக் காட்சிகள் குடும்பத்துடன் பார்க்கமுடியாதவை என்றாலும், அவை,  இவன் காமம் எனும் மாயவலைக்குள் விழுந்ததைக் காட்டும் கவித்துவமானக் காட்சிகளாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

அது என்னவோ தெரியவில்லை, இதுபோன்ற படங்களில் நடிக்கும் அனைவரும் தங்களின் மிகச் சிறப்பான பங்கை வெளியிடுகின்றனர். இப்படமும் அப்படியே. இதில் பெரும்பாலானக் காட்சிகள், துறவியையும் அவன் சீடனையும் சுற்றி வருபவையாக அமைக்கப்பட்டிருக்கும். வயதான துறவியாக இப்படத்தின் இயக்குனரே நடித்திருக்கிறார். இருவருமே மிக அற்புதமாக நடித்திருந்தனர்.

படத்தில் மொத்த கதாப்பாத்திரங்களே மூன்றுதான். இவர்கள் தவிர ஒரே காட்சியில் வருபர்களையும் எண்ணினாலும் பத்துக்கு மேல் போகாது. மேலும் கதை நடைபெறும் இடம், அந்தக் குடிலும் அதைச் சுற்றி உள்ள மலையும்தான். இவற்றைக் கொண்டு இவ்வளவு நேர்த்தியாக ஒரு கதையை அனைவருக்கும் புரியும் வகையில், ஒரு கருத்தோடு சொன்ன இயக்குனர் நிச்சயம் திறமைசாலிதான்.

உலகத் திரைப்படங்கள் 3 – Spring, Summer, Fall, Winter… and Spring

உலகத் திரைப்படங்கள் 2 – The White Balloon

உலகின் சிறந்த திரைப்படங்கள் பலவற்றை கொடுத்த பெருமை இரானிய திரைப்படங்களுக்கு உண்டு.  ஈரானில்  திரைப்படங்களுக்கான  கட்டுப்பாடுகள்  மிக அதிகம் எனக்  கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே  குழந்தைகளின்  உலகத்தை  படம் பிடிப்பது அவர்களுக்கு மிகவும் எளிதான  விஷயமாக இருக்கும்  என்று  நினைக்கிறேன்.   குழந்தைகளை  முக்கிய  கதாபாத்திரங்களாகக்  கொண்டு  வந்த  பல சிறந்த திரைப்படங்கள்  ஈரானில்  இருந்துதான் வெளிவந்திருக்கின்றன.

இவற்றில் முக்கியமான  ஒரு  படம்  இந்த  ‘The White Balloon’.  குழந்தைகளின்  உலகை  இவ்வளவு  அற்புதமாக  திரையில்  காண்பித்தவர்கள்  மிகக்  குறைவானவர்களே.  ஈரானிய புத்தாண்டு தினத்தன்று தனக்கு பிடித்த தங்க மீனை வாங்க செல்லும் சிறுமி ரசியா, வழியில் சந்திக்கும் மனிதர்களும்,  பிறகு தனது பணத்தை மூடப்பட்ட ஒரு கடையின் கீழ் தளத்தில் தவறவிட்டு, அதை எடுக்க  அவள் அண்ணனுடன் சேர்ந்து செய்யும் முயற்சிகளும்தான் இப்படத்தின் கதை. 

இப்படத்தின் மிகச் சிறப்பான விஷயமே அந்த குழந்தைகளின் நடிப்பும், அவர்கள் உலகின் அழகை படமாக்கிய விதமும்தான். படத்தின் கேமரா கோணம் கூட குழந்தைகளின் நிலையிலேயே இருக்கும். குழந்தைகளின் நிலையிலிருந்து உலகை நமக்கு காண்பித்து நம்மை அவர்களின் மனநிலையில் பயணிக்க செய்கிறார் இயக்குனர் (Jafar Panahi). அவர்களின் பயம், மகிழ்ச்சி, சமுதாயத்தை பற்றி அவர்களுக்கு அறிவுருத்தப்பட்டிருக்கும்  விதம் என அனைத்தையும்   அவர்கள் மூலமாகவே நமக்கு விளக்குகிறார் இயக்குனர்.  

 ரசியாவாக நடித்திருக்கும் அந்த பெண் நிச்சயம் பாராட்டுக்கு உரியவள்.  அவ்வளவு சிறிய வயதிலேயே, அற்புதமாக,  இயல்பான நடிப்பு திறனை   வெளிப்படுத்தி இருப்பாள்  அந்த சிறுமி. மீனை வாங்க பணம் வாங்கிகொண்டு வரும் அவள், முன்பு அவள் தாயால் பார்க்ககூடாதென கூறப்பட்ட பாம்பு விதையை வேடிக்கை பார்க்கும் போதும் அங்கே பணத்தை தொலைத்தவுடன்  அவள் அழுவதும், நிச்சயமாக வெறும் நடிப்பு போல் தோன்றுவதில்லை. அவ்வளவு இயல்பாக நடித்திருப்பாள் அந்த சிறுமி.

அந்த கடையில் பணத்தை தொலைத்துவிட்டு அவள் அண்ணனிடம் வந்து சொல்லும்போதும், யாரென்று தெரியாத ஒரு ராணுவ வீரனுடன் பேசியதற்காக அவள் அண்ணனிடம் திட்டு வாங்கும் இடத்திலும் அவளின் நடிப்பு அவ்வளவு அற்புதம். படம் முழுக்க இந்த சிறுமியின் பார்வையில் நகர்வதால் இவளின் நடிப்புதான் படத்தின் முதுகெலும்பு. அதை நன்கு உணர்ந்து மிக சிறப்பான ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்திருப்பார் இயக்குனர்.

அந்த சிறுமி மட்டுமல்ல, அவளின் அண்ணன், அம்மா, வழியில் பார்க்கும் வயது முதிர்ந்த பெண், தையல் கடைக்காரர், கடைசியில் வெள்ளை பலூனை தூக்கி வரும் சிறுவன் அனைவரது நடிப்புமே தங்கள் கதாப்பாதிரங்களுக்கு தகுந்தார்ப்போல்  அமைந்திருக்கும் இப்படத்தில்.

டம் முழுக்க ரசியாவின் பார்வையில் சென்றாலும், கடைசியில்  பலூன்  விற்கும்  சிறுவனுடன் படம் முடியும். பலூன் கட்டியிருக்கும் குச்சி வழியாக  பணத்தை எடுத்தவுடன் அவன் முகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியும், பணத்தை எடுத்தவுடன்,  இவனை கண்டுகொள்ளாமல்  ரசியாவும் அவள் அண்ணனும் சென்றவுடன்,  அவன் முகத்தில் உருவாகும் ஏமாற்றமும் மிகச்சிறப்பாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும்.

பலூன் விற்கும் சிறுவன் அந்த குச்சியில் கட்டியிருக்கும் ஒரே வெள்ளை பலூனுடன் பணத்தை  எடுத்த அதே இடத்தில் நின்று  கொண்டிருக்க,   இவர்கள் இருவரும் தங்க மீனை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இவனை துளியும் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்வார்கள்.  இதன் மூலம் இயக்குனர் சொல்லவரும் கருத்து என்ன என்பதை படம் பார்க்கும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள். ஏன் என்றால் இயக்குனர் நான் என்ன புரிந்துகொண்டேன் என இங்கு சொன்னால் படம் பார்க்கும்போது   உங்களுடைய சிந்தனையில் என் கருத்தின் தாக்கம் இருக்கலாம்

இந்தப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கக்கேமரா விருதினை பெற்றது.  இதற்கெல்லாம் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை எனும்போதுதான் அந்த விருதின் தரத்தின் மேல் எனக்கு  நம்பிக்கை குறைகிறது. மேலும் ஆஸ்கர் விருதின்  மூலம் ஒரு படம் சிறந்ததா என்பதை தீர்மானிப்பது  தவறு  என்றும்  எனக்குப்படுகிறது.  இவ்வளவு சிறப்பான படங்களுக்கே ஆஸ்கார் விருது மறுக்கப்பட்டிருக்கும் போது, நம் படங்களுக்கு மறுத்ததெல்லாம் ஒன்றுமே  இல்லை.

உலகத் திரைப்படங்கள் 2 – The White Balloon

உலகத் திரைப்படங்கள் 1 – A Tale Of Two Sisters

சில திரைப்படங்களை பார்த்த பின்பு  ‘நல்ல பொழுதுபோக்கு’ என்று தோன்றும். சில படங்களை பார்க்கும் போது ‘ஏன் இந்த படத்தை பார்க்க முடிவு செய்தோம்’ என நம் மேல்  நமக்கே  கோபம்  வரும்.  மிகச்சில  திரைப்படங்களை மட்டுமே பார்த்து முடித்தவுடன்,  ‘நண்பர்களிடம் இந்த படத்தை பார்க்கச் சொல்ல வேண்டும்’ என தோன்றும்.  அப்படி தோன்றிய சில திரைப்படங்களை இந்த தொடரின் மூலமாக பகிரலாம் என நினைக்கிறேன். 

முதலாவதாக ‘A Tale of Two Sisters’ என்ற கொரிய மொழி திரைப்படம். ஒரு  படத்திற்கு  திரைக்கதை   எவ்வளவு  முக்கியம்  என்பதை  இப்படம்  மூலம் எளிதாக  தெரிந்து  கொள்ளலாம். இயக்குனர்/திரைக்கதாசிரியர் (Kim Ji-woon)  ‘தான் சொல்லும் வரை யாரும் படத்தின் முடிவை யூகிக்கக்கூடாது’ என்பதில் மிக கவனமாக  இருக்கிறார்.  உண்மையில் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 ‘திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் (Visual Medium), எனவே  இங்கு  காட்சியமைப்புகளால்  சொல்ல முடியாத  விஷயங்களை  மட்டுமே   வசனங்கள் மூலமாக சொல்ல வேண்டும்’ என்பதில் இந்த படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய நம்பிக்கை  இருக்க வேண்டும். நிச்சயமாக  தனது   திறமையில் மிகுந்த நம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே கதையின் மிக முக்கியமான திருப்பங்களைக்  கூட வசனம் ஏதும் இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகளாலேயே சொல்ல முடியும். அது இவருக்கு எளிதாக வரப்பெற்றிருக்கிறது. படத்தின் திரைக்கதையும், நடிகர்களும் அதற்கு பெரிதும் உதவியாய் உள்ளன.

படத்தின் அனைத்து நடிகர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து மிக சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.  படத்தின் வெற்றிக்கு இவர்களும் முக்கிய  காரணம்.  அதிலும் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெறும் நான்கே கதாபாத்திரங்கள் தான்.  எனவே இவர்கள் நால்வரில் ஒருவர் சொதப்பினாலும் படம் சிறப்பாக வராது. அனைவரும் இதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.

பொதுவாகவே ஒரு திரைப்படம் பார்க்கும் முன்பு அதன் கதையை தெரிந்து கொள்வதில் எனக்கு என்றுமே ஆர்வம் இருந்ததில்லை. சில திரைப்படங்களின்  கதைகளை முன்பே தெரிந்து கொண்டபடியால், படம் பார்க்கும் போது சில சுவாரசியங்கள் இல்லாமல் போய்விட்டன. அதனால் இந்த திரைப்படத்தின் கதையை நான் இங்கு சொல்லி இனி பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் இல்லாமல் செய்ய விரும்பவில்லை.

இந்த படம் திகில் பட (Horror Film) வரிசையில் சேர்க்கப்பட்டாலும், பெரும்பாலான திகில் படங்களை போல கதை/திரைக்கதையில் பெரிதாக ஒன்றும் இல்லாமல், வெறும் காட்சி மற்றும் இசைக்கோர்வையால் பார்ப்பவர்களை திகிலூட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல இது.

 படம் முழுக்க பல சின்ன சின்ன விஷயங்கள் எதற்காக வைக்கப்பட்டது என்பதே  தெரியாமல் இருக்கும். ஆனால் படத்தை இரண்டாவது முறை பார்க்கும் போதுதான் இயக்குனரின் திறமை தெளிவாக புரியும்.  அந்த காட்சிகள் அனைத்தும் எதனால் உள்ளது என்பது படத்தை முழுதாக பார்த்த பின்பு புரியும்.

 UTV World Movies சேனலில் அடிக்கடி இந்த படத்தை ஒளிபரப்புகிறார்கள். நேரம் கிடைக்கும்போது இந்த படத்தை பாருங்கள். படம் முடிந்தபின் நிச்சயம் என்னை திட்டமாட்டீர்கள் :-).

உலகத் திரைப்படங்கள் 1 – A Tale Of Two Sisters