வழக்கு எண் 18/9

இப்படம்குறித்த எக்கச்சக்க நல்லவிதமான விமர்சனங்களால் படத்தை பார்க்கலாமென்றால், இந்த வாரம் வரை பெங்களூரில் படம் ரிலீஸாகவில்லை. சரி இதுக்கு மேலயும்காத்திருக்க வேண்டாமென்று, ஓசூரில் போய் படத்தைப் பார்க்கப்போனபோது, படம்எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என சிறிய சந்தேகத்துடன்தான் போனேன். ஆனால், படம் முடிந்து வெளியே வந்தபோது, ‘நல்லவேளை இந்த படத்தை மிஸ் பண்ணல’ என எண்ணும் அளவிற்க்கு ஒரு தரமான படத்தை அளித்திருந்தார், பாலாஜி சக்திவேல்.

ஒரு மிக எளிதாக, நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் கதாப்பாத்திரங்களையும், நாளிதழ்களில் படிக்கும் செய்திகளையும் கொண்டே உலகத்தரமான படங்களைக் கொடுக்க முடியும் என்பதை Children of Heaven, White balloon போன்ற இரானியப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதை தமிழிலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையும், மேல்த்தட்டு மக்களின் வாழ்க்கையும் இணையும் மிகச்சிறிய கோட்டை அழகாகப் பிடித்து, அனைவருக்கும் பிடித்த ஒரு படத்தைக் கொடுத்ததற்காக நிச்சயம் இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

படத்தில் வரும் எல்லா நடிகர்களுமே புதுமுகங்களாக இருப்பது, கதையுடன் ஒன்றிப்போக மிகவும் உதவுகிறது. மேலும், அனைவரது அபாரமான நடிப்பு இதற்கு மேலும் மெருகூட்டுகிறது.

அது எப்படி சில படங்களுக்கு எல்லாமே அமைகிறது எனத் தெரியவில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என அனைத்தும் சரியாக அமைந்திருந்தது இப்படத்தில். ஒரு குறை சொல்ல வேண்டுமானால், பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இனிமேல் ‘இளம்பெண் மீது ஆசிட் வீச்சு, இளைஞர் கைது’ என வரும் செய்திகளை படிக்கும் போதெல்லாம், வேலுவும், ஜோதியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. உண்மையிலேயே அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு உலகத்தரமான படைப்பு இத்திரைப்படம்.

படத்தின் இறுதிக்காட்சியில் இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் ஊற்றுவது படத்தில் பார்க்கும்போது நன்றாக இருந்தாலும், சற்றே நடைமுறை வாழ்க்கைக்கு முரணாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. என்னைப் பொருத்தவரை, வேலுவை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது அந்த வண்டியின் பின்னே ஜோதி ஓடிவரும் காட்சிதான் முடிவாக அமைந்திருக்க வேண்டும். இருந்தாலும், படம் முடிந்து வெளியே வரும்போது சற்று ரிலாக்ஸாக வர அந்தக் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் உதவுகின்றன.

தமிழ் சினிமாவின் தரத்தைப் பற்றிக் கேட்பவர்களிடம் பார்க்க சொல்லக்கூடிய மிகச்சிலப் படங்களில் ஒன்று இந்த வழக்கு எண் 18/9.

Advertisements
வழக்கு எண் 18/9

அழகர்சாமியின் குதிரை

ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்,ஒரு வில்லன், ஒரு காமெடியன், காதல், சண்டை இவைகள் இல்லாமல் தமிழ் படங்கள் வருவது எப்போதாவது நடக்கும் அபூர்வமான நிகழ்வுகள், நந்தலாலா போல.

அழகர்சாமியின் குதிரையில் இவை எதுவுமே இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் இவை எதையும் முக்கியமாக வைத்து கதை புனையப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு. படத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். கதை யார் தோள்மீதும் பயணப்படவில்லை. மாறாக, அனைவரையும் தன் மிதேற்றி பயணப்பட வைக்கிறது, நம்மையும் சேர்த்து.

இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே சுசீந்திரனை பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் ஹீரோ என சொல்ல முடியாது. எந்த நட்சத்திரமும் இதில் நடிக்க மாட்டார். அப்படியிருந்தும் புது முகங்களையும், அப்புக்குட்டி போன்றோரையும் வைத்துக்கொண்டு பல நட்சத்திரங்களால் தர முடியாத தரமான படைப்பொன்றை கொடுத்திருக்கிறார்.

படம் முழுக்க மெல்லியதான ஒரு நகைச்சுவையுடன் கதை நகர்கிறது. காமடிக்காக சேர்க்கப்பட்ட சூரி பெரிதாக எடுபடவில்லையெனினும், மற்றவர்கள் அனைவரும் இவரின் வேலையை நிறைவு செய்துவிடுகின்றனர்.

கோவிலுக்கு வரி வசூல் செய்யுமிடம், உள்ளூர் கோடங்கி மற்றும் மலையாள மந்திரவாதிகள் குறி சொல்லுமிடங்கள், குதிரையை காணோமென போலீஸில் புகார் கொடுக்க செல்லுமிடங்கள் என அனைத்தும் இயல்பான நகைச்சுவைக் காட்சிகள். முக்கியமாக இனிமேல் இந்த ஊரில் மழையே பெய்யாது என ஊர்த்தலைவர் சாபம் கொடுத்தவுடனே அடை மழை பெய்யுமிடம் குபீர் சிரிப்பு.

அப்புக்குட்டியின் சொந்த ஊராக காண்பிக்கப்படும் அந்த மலைக்கிராமமும், அதன் வளைந்து நெளிந்த மலைப்பாதைகளும் கொள்ளை அழகு. குதிக்குது குதிரைக்குட்டி பாடலில் அந்த கிராமத்தின் அழகை படம்பிடிப்பதில் மிகவும் சிரத்தை எடுத்திருக்கின்றனர்.

இது இளையராஜாவுக்கான கதை. இவரைத்தவிர பொருத்தமாக யாராவது இந்தப்படத்துக்கு இசையமைக்க முடியுமா என தெரியவில்லை.  மூன்றே பாடல்கள். மூன்றும் மூன்றுவிதம். அனைத்தும் அருமை. பின்னணியிசையிலும் கலக்கியிருக்கிறார் ராஜா.

ஒரு சிறுகதைக்குள், சாதி பிரச்சினை, மூட நம்பிக்கைகள், மென்மையான காதல், கிராமத்தினரின் வறுமை, வாழ்க்கை முறை என அனைத்தையும் கொண்டுவந்த பாஸ்கர் சக்தி திறமையானவர்தான். இதுபோன்ற படங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இது போல பல நல்ல தமிழ் இலக்கியப் படைப்புகளை வெண்திரையில் கொண்டுவர உதவும்.

அழகர்சாமியின் குதிரை – ஆற்றில் இறங்கும் மரக்குதிரையல்ல, துள்ளி ஓடும் நிஜக்குதிரை.

அழகர்சாமியின் குதிரை

கோ – ஒரு பார்வை

முதலில் உலகக் கோப்பை, அதற்கு பிறகு தேர்தல் என பல காரணங்களால் தள்ளிவைக்கப் பட்ட பெரிய படங்களில் ‘கோ’ வும் ஒன்று. இந்த கோடை விடுமுறைக்கு வரப்போகும் நல்ல படங்களுக்கான ஆரம்பம் என்றால் நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

சினிமாவில் பத்திரிக்கை, ஹீரோ பத்திரிக்கையாளன், வில்லன்கள் அரசியல்வாதிகள் என நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றனதான். எனவே கதை ஒன்றும் புதிதில்லை. ஆனால் சொன்ன விதம் புதிது.

முதல் காட்சியில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞராக வரும் ஜீவா பறந்து பறந்து படமெடுப்பதைப் பார்த்தவுடனே இன்னொரு ஹீரோயிசப் படமோ என பயந்து போனேன். நல்லவேளையா கேவி ஆனந்த் அந்த மாதிரி எதுவும் சொதப்பவில்லை.

ஹீரோ ஜீவா. பஞ்ச் டயலாக், பாய்ந்து பாய்ந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இல்லாத ஒரு கமர்சியல் படத்தில் நடித்ததற்காக முதலில் அவரைப் பாராட்ட வேண்டும். மற்றபடி சவாலான ரோல் எல்லாம் இல்லை. கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்.

ஹீரோயின்கள் கார்த்திகா, பியா. கதையைப் பொருத்தவரை கார்த்திகாவுக்குத்தான் முக்கியமான ரோல் என்றாலும் சொதப்பலான நடிப்புதான். சில காட்சிகளில் முகத்தில் எந்தவிதமான பாவனைகளுமில்லாமல் நிற்கும் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார். பியாவைப் பொருத்தவரை பரவாயில்லை. அரசியல், பத்திரிக்கை என பரபரப்பாக செல்லும் படத்தின் மென்மையான சிலக் காட்சிகள் இவர் வருமிடங்கள் மட்டுமே.

பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ் போன்றவர்கள் சிஎம், எதிர்கட்சித் தலைவர் என்ற கேரக்டர்களின் முக்கியத்துவத்துக்காக மட்டுமே நடித்திருக்கின்றனர் என நினைக்கிறேன். படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையுமில்லை. அஜ்மலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம். நிறைவாக செய்திருக்கிறார்.

தமிழ் பத்திரிக்கை அலுவலகம் இவ்வளவு மாடர்னாக இருக்குமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லவேண்டும். இன்றைய அரசியலின் அவல நிலையை படம்பிடித்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது ஆச்சரியம்தான். படத்தை வாங்கி, தேர்தல் முடியும் வரை கிடப்பில் போட்டதுகூட ராஜதந்திரமோ?

இறுதியில் வரும் திருப்பங்கள் என்னதான் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டினாலும், சொல்லவந்த விஷயத்தை சரியாக சொல்லமுடியாமல் ஆக்கிவிடுகிறது. இளைஞர்கள் கையில் நாடு செல்லவேண்டுமென சொல்ல நினைத்திருந்தால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதில் ஒருத்தன் தவறானவன் அது இது என இழுத்திருப்பது எதற்காக எனத் தெரியவில்லை.

ஹாரிஸ் வருசத்துக்கு ஒரு மெலடி போட்டுடறார். இந்த வருஷத்துக்கு ‘என்னவோ ஏதோ’. அயன் படத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் வரும் நெஞ்சே நெஞ்சே பாடல் போல இதிலும் தேவையில்லாத இடத்தில் ஒரு பாடல் வருகிறது. என்னதான் பாடல்கள் ஹிட்டானாலும், கட்டாயம் எல்லா பாட்டையும் படத்தில் வைக்கவேண்டுமா என்ன?

‘கோ’ பொழுதுபோக்கிற்கான ஒரு படம். வேறு ஒரு நல்ல படம் வரும்வரை தாராளமாக கோ‍ பார்க்கலாம்.

கோ – ஒரு பார்வை

என்னக் கொடுமை சார் இது?

கொஞ்ச நாளைக்கு முன்னால் நம்ம ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச ‘நாயகன்’ படம் கலைஞர் டிவியில பார்த்தேன். (மொக்கைப் படத்த பார்த்துட்டு வந்து அதைப் பத்தி பதிவு வேற‌யா?) படம் எதிர்பார்த்ததைவிட நல்லாவே இருந்தது. எந்த ஹாலிவுட் படத்தோட காப்பின்னு தெரியல. Cellular ஹாலிவுட் படத்தின் காப்பிதான். (பின்னூட்டத்தில் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.)

படத்தில சங்கீதாவை வில்லன் கும்பல் கடத்திட்டு போயிடுவாங்க. அங்க இருக்கிற ஒரு உடைந்த ஃபோனை வைத்து கால் செய்யும் போது அது ரமணாவின் செல்போனுக்கு செல்ல, அவரிடம் நிலைமையை சொல்லி உதவி கேட்பதாக படம் போகும். நல்லா விறுவிறுப்பா, இடையிடையே இருக்கும் நம்ம ரித்தீஷின் ஹீரோயிஸத்தை தவிர படம் நல்லா பார்க்கிற மாதிரிதான் இருந்தது.

ஆனா விஷயம் அது இல்லை. போன வாரம் கே டிவியில் எஸ்.வீ.சேகர் பையன் அஷ்வின் நடிச்ச ‘வேகம்’ படம் போட்டு இருந்தாங்க (உன்னை யார்றா இந்த மாதிரி படமெல்லாம் பாக்க சொல்லறது?). நான் உடனே சேனலை மாத்த போனேன். ஆனா இதில் குஷ்பூ அதே மாதிரி உடைஞ்ச ஃபோனை வச்சிக்கிட்டு ஹீரோக்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. என்னடா அதே ஐடியாவை காப்பி அடிச்சிருக்காங்க போலன்னு நினைச்சு படத்தை பார்த்தால், படம் முழுக்க காட்சிக்கு காட்சி அப்படியே நாயகன் படமும் இதுவும் ஒண்ணேதான்.

ரமணாவுக்கு பதிலா அஷ்வின், சங்கீதா கேரக்டரில் குஷ்பூ, ரித்தீஷ் கேரக்டரில நம்ம பிரபு, நாயகன் சென்னையில நடக்கிற கதைன்னா, வேகம் சிங்கப்பூரில நடக்கிற கதை. இவ்வளவுதான் வித்தியாசம். நாயகன் படத்தில் காமடிக்காக, மயில்சாமியோட வண்டிகளை ஒவ்வொருதடவையும் ரமணா தூக்கிட்டு போவார். வேகம் படத்தில் எஸ்.வீ.சேகர் வண்டியை ஹீரோ தூக்கிட்டு போவார்.

வேகம்தான் முதலில் வந்துச்சுன்னு நினைக்கிறேன். அந்த படத்தை யாருமே பாக்காமதான் ஃப்ளாப் ஆச்சு அதனால தைரியமா(?) அந்தப் படத்தை அப்படியே எடுக்கலாம்ன்னு நாயகன் டைரக்டர் நினைச்சாரா, இல்லை ஏற்கனவே காப்பி அடிச்சது தெரியாம, மறுபடியும் அதே ஹாலிவுட் படத்தை இன்னொரு தடவை காப்பி அடிச்சிட்டாரான்னு தெரியல.

அது எப்படீங்க ஒரு சீன் கூட மாறாம காமெடியில இருந்து எல்லாத்தையும் அப்படியே வச்சு ஒரு ரெண்டு வருஷ கேப்பில ரெண்டு படம் எடுத்திருக்காங்க. படத்து கதையை கேட்டவங்க கூடவா சொல்லியிருக்க மாட்டாங்க, இந்த படத்தை ஏற்கனவே ஒருத்தர் தமிழில் காப்பி அடிச்சாச்சுன்னு?  இவங்க மாதிரி ஆளுங்கக்கிட்ட இருந்து தமிழ் சினிமாவை யாரு காப்பாத்தறது?

Pictures: sulekha.com, oneindia.in

என்னக் கொடுமை சார் இது?

ஈசன் – நின்று கொல்வான் (படம் பார்க்கிறவர்களை)

சுப்பிரமணியபுரம் கொடுத்த நம்பிக்கையில், ரொம்ப தைரியமாக இந்தப் படத்துக்கு சென்றேன். என்னைப் போல நம்பிக்கையுடன் பல பேர். நேற்றைய மாலைக் காட்சி ஹவுஸ்ஃபுல்.

ரெட் வைனை கிளாஸில் ஊற்றித் தெரிப்பதை ஸ்லோ மோஷனில் வைத்து படத்தலைப்பு மற்றும் பணியாற்றியவர்களின் பெயரைப் போடும்போது, ‘அட!’ என சொல்லத் தோன்றியதென்னவோ உண்மைதான்.

படத்தின் ஆரம்பமே, பப்பில் இருந்து ஒரு பெண்ணை துரத்தி செல்வதில் ஆரம்பிக்க சசிக்குமார் மதுரை படம் மட்டும் எடுப்பவரல்ல எனத் தோன்ற வைத்துவிட்டார் என நினைத்தேன். முதல் பாதி முழுக்க, அதிகார வர்க்க அரசியல் வர்க்க மோதல்கள், பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நடக்கும் அதிகார மோதல்கள் என விறுவிறுப்பாகத்தான் போகிறது.

அதுவும் பெங்களூர் தொழிலதிபர் ஹெக்டேவுக்கும், நம்ம ஊர் அரசியல்வாதி தெய்வநாயகத்துக்கும் நடக்கும் தொலைப்பேசி உரையாடல்கள் நச். அதுவும் இந்த இடங்களில் வரும் வசனங்கள் எல்லாம், இது அரசியல்‍ மற்றும் பணத்திற்கிடையேயான அதிகார மோதல்கள் சம்பந்தப் பட்டப் படமாக செல்லப் போகிறது என்று நினைக்க வைக்கின்றன.

ஆனால் சென்னையின் இரவு வாழ்க்கை என காட்சிக்கு காட்சி வெரும் பப்பும், டிஸ்கோதேவுமாக காண்பித்திருக்க வேண்டாம்.

இதற்கிடையே அரசியல்வாதியின் மகனான வைபவை கடத்தி சென்று ஒருவன் தலையில் கியரால் அடிக்க, ‘யாருடா நீ?’ என வைபவ் கேட்கும் போது ஈசன் என டைட்டிலைப் போட்டு இடைவேளை விடுகிறார்கள். இரண்டாவது பாதியின் மேல் ஆர்வம் அதிகமாக உட்கார்ந்திருந்தோம்.

இரண்டாவது பாதியில் விசாரணைகள் எல்லாம் சற்றே ஆர்வமாக சென்று ஈசன் என்ற 11ம் வகுப்பு மாணவனிடம் முடியும்போது நிமிர்ந்து உட்கார வைப்பவர்கள், ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்தவுடனே படுக்க வைத்து விடுகிறார்கள். வாய்பேச முடியாத அக்கா, ஃபேஷன் டிசைனிங் படிப்புக்காக சென்னையில் ஒரு கல்லூரியில் இடம் எனும்போதே கதை தெரிந்துவிடுகிறது. இது ஒரு அதர பழசான பழிவாங்கும் கதை என்று.

இரண்டாவது பாதிக்கும் முதல் பாதிக்கும் சம்பந்தமே இல்லை. படம் எடுக்க எடுக்க கதையை மாற்றியிருப்பாரோ? திரைக்கதையில் ஏகப்பட்ட குழப்பங்கள், தேவையில்லாத காட்சிகள். கோவில் திருவிழாவும், அபினயாவின் அப்பா இரத்தம் குடிக்கும் காட்சியும் எதற்கு என இதுவரை எனக்கு புரியவில்லை.

பாவம் சமுத்திரகனி, போலீஸ் கேரக்டர் என்றவுடன் உடல் இளைத்து அசிஸ்டண்ட் கமிஷனர் என நம்பும்படியாக உழைத்திருக்கிறார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு வேலையுமில்லை. படத்தில் எந்த கேரக்டருக்குமே சொல்லிக் கொள்ளும்படியான கதாப்பாத்திரம் இல்லை. எல்லோருமே கொஞ்சம் கொஞ்சம்தான் வருகிறார்கள்.

ஜேம்ஸ் வசந்தின் இசையில் அந்த குத்துப் பாடல் மட்டும் சற்று நாட்களுக்கு டிவியிலும் ரேடியோவிலும் ஒலிக்கும். முதல் பப் பாடல் பரவாயில்லை. பிண்ணனியிசை ம்ஹூம். சஸ்பென்ஸ் என்ப‌தற்காக சும்ம உஸ் புஸ்ஸுன்னு எதாவாது சத்தம் இருந்துக்கிட்டே இருக்கணுமா?

சா பட ஸ்டைலில், ஒரு சில காட்சிகளின் எடிட்டிங் நல்ல முயற்சி.

அதர பழசான ஒரு கதையில், முதல் பாதி முழுக்க சம்பந்தமில்லாத காட்சிகளை வைத்துவிட்டு, கிளைமாக்ஸில் அதி வன்முறையை செருகினால் படம் ஹிட்டாயிடுமா?

ஜப்பான் படத்தை தமிழுக்கு தகுந்த மாதிரி மாத்தி எடுத்தாவே திட்டறவங்கக் கிட்ட, தமிழிலயே பல தடவை எடுத்த ஒரு கதையை எடுத்து வெற்றியடைஞ்சடலாம்ன்னு எப்படி சசிக்குமார் யோசிச்சாருன்னு தெரியல.

‘ஈசன், நின்று கொல்வான்’னு படத்தில் வசனங்கள் வரும்போது எங்களை உக்கார வச்சு கொல்லறீங்களேடான்னு தியேட்டரில் ஒருத்தர் கத்தியபோது மொத்த தியேட்டரும் சின்ன சிரிப்பின் மூலமாக அதை ஆமோதித்தது

ஈசன் – சாரி சசி. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

ஈசன் – நின்று கொல்வான் (படம் பார்க்கிறவர்களை)

நடிகர்களும் அரசியலும்

சமீபத்திய செய்திகளிலும், வலையுலகிலும் பெரிதும் பேசப்படும் செய்திகளில் ஒன்று, விஜய் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதும், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க முடிவு செய்திருப்பதும்தான்.

எனக்குத் தெரிந்து தமிழகத்தைப் போல, நடிப்புத் தொழிலின் அடுத்த நிலையே அரசியலும், ஆட்சியும்தான் என்பதை வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நமது நிருபர்களும், ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தவுடனே அந்த நடிகனிடம் ‘அடுத்து அரசியல்தானா?’ எனக் கேட்டுக் கேட்டு அந்த ஆசை இல்லாதவர்களுக்குக் கூட அதை உண்டுபண்ணிவிடுகிறார்கள்.

எந்த அரசியல் கட்சியின் சாயலும் இல்லாத நடிகர்கள் மிகமிக குறைவு. நகைச்சுவை நடிகர், வில்லன் நடிகர் என எந்த பேதமும் இல்லாமல் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துகொண்டு பதவிகளை பெறுவதில்தான் அனைத்து பெரும்பாலான நடிகர்கள் குறியாக இருக்கின்றனர். ஒரு நடிகனோ நடிகையோ கட்சிக்குள் வந்தவுடன் அவர்களுக்கு பதவி, பொறுப்பு எனக் கொடுக்கும் அரசியல் கட்சிகள் (திராவிடக் கட்சிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்) தங்கள் கட்சியில் பல ஆண்டு காலம் உழைத்த தொண்டர்களை கண்டுகொள்வதே இல்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் அரசியல் வெற்றிதான் இதுபோன்ற  நிகழ்வுகளுக்கு காரணம் என்றாலும், அது நடந்து ஒரு தலைமுறையே மாறிவிட்டது என்பதை ஏன் இந்த நடைகர்கள் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.

இதற்கு முழுமையாக நடிகர்களை மட்டுமே காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது. நான் கேள்விப்பட்டவரை நடிகர்களை பெரும்பாலும் அரசியலுக்குள் இழுத்துவிட முயற்சிப்பவர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான். ஒரு நடிகனின் இரண்டு மூன்று படங்கள் வெற்றியடைந்துவிட்டால் போதும், உடனே ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கிவிடுகின்றன. அப்போதிருந்தே, இதன் நிர்வாகிகள் அந்த நடிகனின் அரசியல் பிரவேசத்தையும் அதன் மூலம் தனக்கு கிடைக்கும் கட்சிப் பதவியையும் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறான்.

சில நடிகர்கள், தங்களது ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்னும் இது போல பரபரப்பான விஷயங்களைப் பரப்பி அதன் மூலம் தனது படத்திற்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தவும் செய்கிறார்கள்.

பல நடிகர்களுக்கு அரசியல் என்பதோ கொள்கை என்பதோ எதற்கு என்பது கூடத் தெரிவதில்லை. தேமுதிக என தனது கட்சியின் பெயரையே ஜோதிடரை வைத்து தீர்மானித்த விஜயகாந்துக்கு ‘திராவிடர் கழகம்’ என்ற பெரியார் அமைப்பின் பெயரை வைக்க என்ன தகுதியிருக்கிறது எனத் தெரியவில்லை.

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எந்த நடிகரும் மக்கள் பிரச்சினையை சொல்லை கட்சி ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. எம்ஜிஆர் தனக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதற்காக கட்சி ஆரம்பித்தார், விஜயகாந்த் தனது ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும், தனது எதிர்காலத்துக்காகவும் கட்சி ஆரம்பித்தார், இப்போது விஜய், தனது படங்களை தியேட்டர்காரர்கள் வெளியிட மறுத்ததால் அரசியலுக்கு வருகிறார்.

இவரது படங்கள் வெளியிடப்படாதது என்ன மக்கள் பிரச்சினையா? இதைக் காரணமாகச் சொல்லி கட்சி ஆரம்பிப்பவர், எதைக் கட்சிக் கொள்கையாக வைப்பார்? அனைவருக்கும் சம தியேட்டர் உரிமையையா?

நடிகர்கள் என்பவர்கள் திரையில் மட்டுமே வழிகாட்டிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் என்பதை பெரும்பாலோனோர் புரிந்து கொண்டுவிட்டனர். ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்து நடிகர்களின் அரசியல் ஆசையை கிளரிவிடும் சிலரும் இதை புரிந்துகொண்டால், திரப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு விஷயம் என்பதையும், தாங்கல் கலைஞர்கள், கடவுள்கள் அல்ல என்பதையும் நடிகர்கள் புரிந்துகொள்வார்கள். அது நடக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்த நடிகர்களின் சமீபத்திய அரசியல் தோல்விகள் புரியவைக்கின்றன.

நடிகர்களும் அரசியலும்

உலகத் திரைப்படங்கள் 6 – The Color Purple

கலர் பர்ப்பிள் (The Color Purple), 1900ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆஃப்ரிக்க, அமெரிக்கப் பெண்கள் அனுபவித்த வறுமை, இனவெறி, பாலியல் கஷ்டங்களைத் தாண்டி வெற்றிபெரும் ஒரு பெண்ணின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் வரையில், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Stephen Spielberg) ‍-க்கு, வேற்று கிரக வாசிகளையும், கொடூரமான விலங்குகளையும் விட்டால் வேறு எதைப் பற்றியும் படமெடுக்கத் தெரியாது எனத்தான் நினைத்திருந்தேன். இந்தத் திரைப்படம், ஸ்பீல்பெர்கின் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. இவ்வளவு உணர்வுப் பூர்வமான படத்தை எடுக்க முடிந்த ஸ்பீல்பெர்க் ஏன் இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்க முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.

படத்தின் கதாநாயகி செலியாக (Celie) வரும் வூப்பி கோல்டுபெர்க் (Whoopi Goldberg) -இன் அற்புதமான நடிப்பே இதன் முதுகெலும்பு. கணவனுக்கு பயந்து நடுங்கும் போதும், இறுதியில் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி விலகும்போதும், கணவனின் தோழியான‌ ஜாஸ் இசைப்பாடகியுடன் நட்பு கொள்ளுமிடத்திலும், தங்கையை பல நாட்கள் கழித்து காணுமிடத்திலும், என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை பதிவு செய்திருப்பார் இவர். இந்தப் படத்திற்காக இவர் சிறந்த நடிப்புக்கான கோல்டென் க்ளோப் (Golden Globe) விருதினைப் பெற்றார்.

இது போன்ற படங்களில் வில்லன் நடிகரின் நடிப்பு கதை நாயகர்களை விட முக்கியமானது. அதை உணர்ந்து மிகச் சிறப்பாக செய்திருப்பார் செலியின் கணவன் ஆல்பர்ட் ஜான்ச‌னாக வரும் டேனி க்ளோவர் (Danny Glower). கதையின்படி இளம், நடுத்தர, முதுமை என மூன்று நிலைகளிலும் இவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்தது.

இவர்கள் மட்டுமில்லாமல், முதலில் செலியின் கணவனின் தோழியாக வீட்டுக்குள் வந்து கொஞ்சம், கொஞ்சமாக செலியின் நெருங்கியத் தோழியாகி, செலியின் திறமைகளை அவளுக்கு எடுத்துச்சொல்லி, அவளும் தனியாக வாழும் தைரியத்தை அளிக்கும் கதாபாத்திரமான ஷக் ஆவ்ரி என்னும் ஜாஸ் பாடகராக வரும் மார்கரெட் ஆவ்ரியும் (Margaret Avery), ஆல்பர்ட் ஜான்சனின் முதல் மகனுக்கு மனைவியாக, மிகவும் தைரியமான பெண்ணாக வந்து, பின்னர் வெள்ளையர்களின் அடக்குமுறையால் அடங்கிப் போய், இறுதியில் அவர்களையே எதிர்க்கும் தைரியம் கொள்ளும் ஷோஃபியா கதாப்பாத்திரத்தில் வரும் ஓபரா வின்ஃப்ரே (Oprah Winfrey), செலியின் தங்கை நெட்டீயாக (Nettie) வரும் பெண் என அனைவரது நடிப்புமே மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்தப் படத்தில்.

வழக்கமான ஸ்பீல்பெர்க் படங்களிலிருந்து முற்றிலும் மாறி, ஒரு காட்சி கூட கிராஃபிக்ஸோ, இல்லை வேறு தந்திரங்களோ இல்லாமல், முழுக்க முழுக்க கதையையும், கதாப்பாத்திரங்களின் நடிப்பையும் நம்பி எடுக்கப் பட்ட படம். இதில் ஸ்பீல்பெர்க் வெற்றிபெற்றிருக்கிறார்.

கலர் பர்ப்பிள் (Color Puple)  நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

உலகத் திரைப்படங்கள் 6 – The Color Purple