கொலைக்களம்

நான் இதுவரை செய்தவைகளிலேயே முக்கியமான வேலை. இந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் நான் கேட்டதை செய்துகொடுக்கிறேன்னு அண்ணன் சொல்லிட்டாரு. அதனால் மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் வச்சிக்கிட்டிருக்கிறேன். முக்கால் பகுதி ஏற்கனவே முடிஞ்சுது. இதையும் வெற்றிகரமாக முடிச்சுட்டால் அண்ணனோட அன்புக்கு பாத்திரமானவன் ஆயிடுவேன்.

இந்த வேலைய மொதல்ல சொன்னப்ப எப்படியும் அண்ணன் கூட இருக்கிற ஆளுங்களுக்கு எடுபிடியாத்தான் இருக்க சொல்லுவாருன்னு நினைச்சேன். ஆனா, ‘ஆதி, இந்த வேலையை நீதான் செய்யப் போற, எவன்லாம் தேவையோ கூப்பிட்டுக்கோ’ன்னு சொன்னப்போ எனக்கே ஆச்சரியம் தாங்கல.

என்ன வேலைன்னுதான கேக்கறீங்க.. பெருசா ஒண்ணுமில்ல. அண்ணனோட வழிக்கு வராம தனியா ராஜ்ஜியம் நடத்திக்கிட்டுருக்கிற ஒரு  மூணு பேரைப் போடணும். மூணும் பெரிய கை. எல்லாருக்கும் அந்த ஏரியா அரசியல்வாதிகளோட சப்போர்ட் இருக்கு. இவங்களுக்கும் அண்ணனுக்கும் கொஞ்ச நாளா ஒத்துவரல. இப்ப ஆட்சியில இருக்கிறவங்ககிட்ட அண்ணனுக்கு பெருசா சப்போர்ட் இல்லாததால இவனுங்களுக்கும் பயம் போயிடிச்சு. இப்படியே விட்டா சரியா வராதுன்னுதான் இவங்களை போடறதுன்னு முடிவு எடுத்தாரு அண்ணன்.

நான் ஆதி. எங்கப்பா வாத்தியாரா இருந்தாரு. இங்க இல்லை. சேலத்துல. நான் வீட்டுக்கு ஒரே பையன். நல்லா படிச்சு எப்படியாவது ஒரு அரசாங்க வேலையில சேர்ந்திடணுங்கிறதுதான் இலட்சியமா இருந்துச்சு. நான் பன்னெண்டாவது படிச்சுட்டு இருக்கிறப்ப சொத்து தகராறுல என் அப்பாவோட தம்பியே, அவரையும், அம்மாவையும் கொன்னுட்டான். தலை சிதைஞ்சு இரத்த வெள்ளமாக் கிடந்தவங்களைப் பாத்ததும் வந்த ஆத்திரத்தில நேரா அவங்க வீட்டுக்குப் போயி எல்லாரையும் வெட்டி சாச்சேன். அவங்க 10 வயசு பையனைக் கூட விடல.

ஆயுள் தண்டனையில ஜெயிலுக்கு போயி, 10 வருஷத்தில் வெளிய வந்தேன். ஜெயில்ல இருந்தப்ப பழக்கமானவங்கதான், வெளீய வந்தவுடனே அண்ணங்கிட்ட சேர்த்திவிட்டாங்க. என்ன பண்ணப்போறோம்ன்னே தெரியாம வெளிய வந்தவனுக்கு, நல்ல சோறு போட்டு, செலவுக்கு பணமும் கொடுத்து பாத்துக்கிட்ட இவருக்குத்தான் இனி வாழ்நாள் முழுக்க வேலை செய்யறதுன்னு முடிவாச்சு. அப்பப்ப சும்மா போயி மிரட்டிட்டு வரதுல ஆரம்பிச்சு, கை, கால் எடுக்கிறதுன்னு போயி, சில கொலைங்களையும் சாதாரணமா பண்ணிட்டு வந்தப்பதான் என் மேல அண்ணனுக்கு நம்பிக்கை வந்தது.

‘ஆதி மாதிரி தொழில சுத்தமா செய்யறவன் நாலு பேர் இருந்தாப் போதுண்டா, நாமதான் ராஜா’ன்னு அண்ணன் என்னைப் பத்தி பெருமையா பேசிட்டு இருந்ததா கந்தசாமி சொன்னான். அதனாலதான் இந்த வேலைய எனக்கு தந்திருக்காருன்னு அவன் சொன்னப்ப ரொம்பப் பெருமையா இருந்துச்சு.

மொத ரெண்டு கொலையும் சப்பையா முடிஞ்சுது. ஒருத்தனை கோயில் கூட்டத்தில, கூட்டமோட கூட்டமா போயி கழுத்தில கத்தியை வச்சிட்டு போயிட்டேன். அவன யாரோ அறுத்துட்டாங்கன்னு தெரிஞ்சுப் கூட்டம் பதட்டமானப்போ நான், காரில போயிட்டு இருந்தேன்.

ரெண்டாவது ஆளக் கொல்லறது இன்னமும் ஈசியா இருந்துச்சு. தன் கழுத்துக்கு மேலக் கத்தி தொங்கறது தெரியாம ஜாலியா இருக்க வைப்பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். நான் ஜன்னல் வழியா உள்ள வந்ததுகூட தெரியாம, அவகிட்ட‌ மயங்கிகிடந்தவனை முடிச்சுட்டு, அவள மிரட்டி கொஞ்ச நேரம் ஜாலியா இருந்துட்டு, அவளையும் முடிச்சுட்டு வந்துட்டேன்.

ஒரு வாரத்துக்குள்ள மூணுபேர் செத்துப்போனதால, போலீஸ் அண்ணனையும், அவரோட முக்கியமான ஆளுங்களையும் கவனிக்கத் தொடங்கினாங்க. என்னைப் பெருசா யாரும் கண்டுக்கல. கொஞ்சம் தணியற வரைக்கும் வீட்டுக்கு வரவேணாம்ன்னு சொல்லிட்டாரு. இப்பொதான் எனக்கு புரிஞ்சுது ‘ஏன் பெரிய ஆளுங்களையெல்லாம் விட்டுட்டு என்னை செலக்ட் செஞ்சாருன்னுட்டு’. அண்ணனோட அறிவை நெனைச்சு பெருமைப்பட்டேன்.

ஆனால் ஏற்கனவே ரெண்டு பேர் செத்துப் போயிருந்ததால இவன் ரொம்ப பாதுகாப்பா இருந்தான். ரெண்டு, மூணுதடவை போட்ட ப்ளானெல்லாம் சொதப்பினதால அண்ணன் வேறக் கோவத்துல இருந்தாரு. இந்த தடவை எப்படியாவது போட்டுடணும்ன்னு முடிவு பண்ணிட்டு போயிட்டு இருந்தேன். கூட்டமாப் போனால் உஷாராயிடுவான்னுட்டு, யாரையும் உதவிக்கு வச்சுக்கல‌.

ப்ளான் இதுதான். ஏற்கனவே போடப்போனப்ப குறுக்க வந்து இவனக் காப்பாத்தினவனைப் பார்க்க வர்றான். ஆஸ்பத்திரியிலயே வச்சு போடறதுன்னு முடிவு பண்ணி, எல்லாத்தையும் அண்ணனுக்கும் சொல்லியாச்சு. இது தப்பாப் போகாதுன்னு அண்ணனுக்கும் நம்பிக்கை இருந்துது.

நல்லவேளையா போனதடவை முகத்த காண்பிக்காதது நல்லதாப் போச்சு. அவங்க ஆளுங்க‌ யாருக்கும் என்னை அடையாளம் தெரியல. நேத்தே வந்து எங்க நின்னு எப்படிப் பண்ணறதுன்னு எல்லாத்தையும் யோசிச்சு வச்சாச்சு. பொது இடத்தில அவனுங்க ஆளுங்க இவ்வளவு பேரு இருக்கிறப்ப கொஞ்சம் ரிஸ்க்தான். இருந்தாலும் அண்ணனுக்காக இதைப் பண்றதுல தப்பு இல்லை.

இந்நேரம் கந்தசாமி வெளிய வந்து நின்னிருப்பான். எப்படியாவது வடக்கு கேட்டைத் தாண்டிட்டாப் போதும், ரெடியா இருக்கிற காரில ஏறி பறந்துட வேண்டியதுதான்.

ப்ளான் படி, சட்டைக்குள்ள மறைச்சு வச்சிருந்த அரிவாளோட, அவன் வரப் பாதையில இருந்த சேரில் உக்கார்ந்துட்டு இருக்கேன். எல்லாரையும் தள்ளிவிட்டுட்டு அவன் ஆளுங்க வர்றாங்க. ஓரமா உக்காந்துட்டு இருந்தாப் போட முடியாது. எந்திருச்சு நடக்கிறேன். இதுதான் சரியான சந்தர்ப்பம், அரிவாளை எடுத்து ஒரே வீச்சு. தலை தனியாப் போய் விழுது. என்னை நினைச்சா எனக்கே பெருமையா இருக்கு.

சே, இதைப்ப் பார்க்க அண்ணன் இங்க இல்லாமப் போயிட்டாரே.. பரவாயில்லை, நைட்டு டிவியில பாத்து சந்தோசப்படுவாரு. நான் வெளிய வந்துட்டேன். அவங்க ஆளுங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சு துர‌த்த ஆரம்பிக்கற‌துக்குள்ள நான் பத்தடி தூரம் ஓடியிருந்தேன். எதிரில வந்த எத்தனை பேரை வெட்டினேன்னு தெரியாது. யாரை வெட்டினேன்னும் தெரியாது. என்னோட நோக்கமெல்லாம் வெளிய போயி வண்டியில ஏறிடணும்.

வெளிய வந்துட்டேன். அண்ணன் வண்டி எதுவுமே இல்லையே. இப்ப என்னப் பண்ண. கழுத்தில பயங்கரமா ஒரு வலி. ரவியோட ஆளுங்க‌ வந்துட்டாங்க. ஏன் கந்தசாமி வரல. சரியான வெட்டுன்னு நினைக்கிறேன். ஏற்கனவே கையெல்லாம் இரத்தமா இருந்ததால என் இரத்தம் எதுன்னு தெரியல. நெனைவு மங்குது. எப்படியோ அண்ணன் சொன்ன வேலைய முடிச்சுட்டேன், அந்த சந்தோசம் போதும். இங்க வராததுன்னால கந்தசாமியை எப்படியும் அண்ணன் முடிச்சுடுவாரு. நாய், பயந்துட்டு எங்கயாவது ஒழிஞ்சுக்கிச்சுன்னு நெனைக்கிறேன். ஆஆ, ரெண்டாவது வெட்டு வயித்துல. பொட்டப்பசங்களா, ஒரே வெட்டுல ஆளை முடிக்க முடியல, நீங்க எல்லாம் என்னடா ரௌடிங்க. ஆஆ..

அங்கே ‘அண்ணன்’ வீட்டில். கந்தசாமி சொல்லிக் கொண்டிருந்தான், ‘அண்ணே ஆதிய முடிச்சுட்டானுங்க. ரொம்ப முன்னாடியெ வெளிய வந்துட்டானாம், நாமப் போயிருந்தா ஈசியாக் காப்பத்தியிருக்கலாம்’.

‘டேய், ஒருத்தனுக்காகவெல்லாம் அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாதுடா. இதுல எப்படியும் செய்யறவன் உயிர் போகும்ன்னு சொல்லித்தான உங்கள எல்லாம் விட்டுட்டு அவன பண்ண சொன்னேன். நாம போயிருந்தா தேவையில்லாம போலிசுக்கு தண்டம் அழுவனும். பத்து பேரை ஆஸ்பத்திரியில போடு இருக்காண்டா. ஒண்ணும் பண்ண முடியாது, ஃப்ரீயா வுடு.’

Advertisements
கொலைக்களம்

கன்னடத்துப் பைங்கிளி

அதிகாலை 7 மணிக்கு  அடிச்ச அலாரத்தை அணைச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கப் போக மறுபடியும் அவள் முகம் தோன்றி மறைந்தது. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நண்பனை எழுப்பி ‘மச்சி, இது உண்மையிலேயே லவ் தாண்டா. காலங்கார்த்தால அவள் முகம் எனக்கு நினைவுக்கு வருதுன்னா கண்டிப்பா இது ட்ரூ லவ் தான?’ எனக் கேட்ட என்னை கொடூரமாக முறைச்சிட்டு திரும்பி படுத்துக்கொண்டான் அவன். ‘காலைல இருந்து ஒரு மூணுதடவை எழுப்பிக் கேட்டதுக்கே இவ்வளவுக் கோபப்படறான்!!’ என ஆச்சர்யப்பட்டவாரே எழுந்து குளிக்க சென்றேன்.  

7 மணிய அதிகாலைன்னு சொன்னப்பவே தெரிஞ்சிருக்கும் , நான் சாப்ட்வேர் கம்பனில  வேலை செய்யற ஆளுன்னு. என் கனவில வந்தப் பொண்ணும் என் ஆபீஸ்ல தான் வேலை செய்யறா. ஒரு மாசத்துக்கு முன்னதான் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.  முதல் தடவைப் பார்த்தப்பவே என் மனசில ஏற்கனவே இருந்த இன்னொரு பெண்ணை தூக்கி எரிந்து அந்த இடத்தில் இவள் அமர்ந்தாள். அந்த பெண்ணை நினைச்சு பாவமா இருந்தாலும், அவளும்  இன்னொருத்திய தூக்கி எறிஞ்சிட்டு மனசில இடம் பிடிச்சவதானேன்னு மனசத் தேத்திக்கிட்டேன்.

இதப் படிச்ச உடனே ஏதோ மத்தப் பொண்ணுங்களை நான் ஏமாத்திட்டதா நினைச்சுடாதீங்க.  நான் இந்தக் கதையின் ஹீரோ, வில்லன் இல்லை.  நான் சொன்ன பொண்ணுங்க எல்லாம் என் மனசில மட்டும்தான் இருந்தாங்க. அவங்க என் மனசில இருந்தாங்கன்னு கூட அவங்களுக்கு தெரியாது. :-(.

இந்தப் பொண்ணும் அப்படித்தான் போயிடும்ன்னு நெனைச்சேன். ஆனால் நானே எதிர்பாராமல் ஒரு நாள் எங்களுக்குள் அறிமுகம் நடந்தது. ஒரு நாள் வெள்ளிக் கிழமை சாயங்காலம், ‘ஐயா ரெண்டு நாள் லீவு’ன்னு ஸ்கூல் பையன் கணக்கா கிளம்பிக்கிட்டு இருந்த என்னை வரச் சொல்லி என் மேனேஜர் கூப்பிடும்போதே நெனைச்சேன். ‘தொலஞ்சுதுடா இந்த வார லீவுன்னு’. அதே போல உள்ள போனதில இருந்து மத்தவங்க எல்லாம் ஏன் சனிக்கிழமை வரமுடியாதுன்னு காரணப் பட்டியல் வாசிச்சதோட எனக்கும் கொஞ்சம் ஐஸ் வைக்க, வேறு வழியில்லாமல் நாளைக்கு  வந்து  தொலைக்கிறேன் என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

சனிக்கிழமை ஏனோ தானோ எனக் கிளம்பி வந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. (நீங்க நேனைச்சதே தாங்கோ!!) அந்தப் பெண்ணும் அன்னைக்கு ஆபீஸ் வந்திருந்தாள். பக்கத்து Cubicle-இல் நம்மவள் இருக்கிறாள் என்ற நினைப்பே நாளை உற்சாகமாகக்  கொண்டு செல்ல, முதல் முறையா என் மேனேஜர்-க்கு நன்றி சொன்னேன்.

மதியம் 1 மணிக்கு பக்கம், ‘ஹாய்’ அப்படின்னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தால் நம்பவே முடியல. என்னவள் அவளாகவே வந்து பேசுகிறாள். என்ன சொல்லறதுன்னே தெரியல. ‘ஹ.. ஹாய்’ ன்னு தட்டு தடுமாறி சொன்னதப் பார்த்து சிரிச்ச அவள்,

‘ஐம் ஜென்னி… ஜெனிபர்…  யுவர்  நேம்?’ 

‘ஐம்  ஆதி… ஆதித்தன்’

‘நம்ம  ரெண்டுபேர்தான்  இந்த ப்ளோரில்  இருக்கோம். தனியா சாப்பிட்டா போர் அடிக்கும். வுட்  யு  ஜாயின்  மீ   பார்  லஞ்ச்?’ எனக் கேட்க உடனடியாக செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு கிளம்பி விட்டேன்.   

ஒன்றாக சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலும் அதற்க்கு பிறகு டீ சாப்பிட என செலவு செய்த அரை மணி நேரத்திலும் ஓரளவுக்கு அவளைப் பற்றி தெரிந்தது. அவள் ஒரு கன்னடப் பெண். பிறந்தது, படித்தது அனைத்தும் பெங்களூரில்தான். எதிர்காலத்திலும்   இங்கயே  செட்டில் ஆவதுதான் அவள் ஆசை என்பதும் தெரிந்தது.  நானும் என் பங்குக்கு பிறந்தது வளர்ந்தது  அனைத்தையும் சொல்லிவிட்டு, ‘எனக்கு பெங்களூர் ரொம்பப் பிடிச்சிருக்கு’ எனப் பச்சைப் பொய்யை சொன்னேன், தினமும் இந்த ஊரை கரித்துக் கொட்டியதெல்லாம் மறந்திருந்தது அப்போது. மேலும் பெங்களூரின் நல்ல விஷயங்கள் அனைத்தும் மனதில் தோன்ற, பெங்களூர் நல்ல ஊர்தான் என என்னை நானே தேத்திக் கொண்டேன்.  

அன்று முதல்தான், கனவில் வர ஆரம்பித்தாள் அவள்.  திங்களன்று அதிகாலை ஊரிலிருந்து திரும்பிய நண்பனிடம்தான் இதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் பொறுமை இழக்க   ஆரம்பித்துவிட்டதால்  வேறு வழியில்லாமல் எழுந்து குளிக்க சென்றேன். என் தேவதையைப் பார்க்கும் ஆவலுடன்  என்றும்  இல்லாத  உற்சாகத்துடன்  ஆபீஸ்-க்கு  கிளம்பினேன்.

அலுவலகம் சென்றவுடன் என் கண்ணில்  முதலில்  பட்டது அவள்தான். நீலக் கலர் சல்வாரில் தேவதையாக  அவள். என்னைப் பார்த்தவுடன் சிரித்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு இன்றும் மதிய உணவு  ஒன்றாக  செல்லலாம்  என  முடிவெடுத்து  விட்டு  என்  இருக்கையில்  அமர்ந்தேன்.  ஒரு  வழியாக  நண்பர்களிடம்  டீம்  லஞ்ச்  என  ஒரு  பொய்யை  சொல்லிவிட்டு  அவளுடன்  சென்றேன்.

நான்  எப்போதுமே  சாப்பிடாத,  கன்னட  சாப்பாடு  கிடைக்கும்  இடத்திற்கு  செல்லலாம் என அவள் கூறிய போது மறுக்கவா முடியும். அங்கே சென்று சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஏதோ சில பேர் நம்மையே பார்ப்பது போல் தோன்ற, திரும்பி பார்த்தால், என் நண்பர்கள்.  அவர்கள் பார்த்த பார்வையிலேயே  தெரிந்தது  இன்னிக்கு நான் செத்தேன் என்று.  சாப்பாடு முடிந்து உள்ள போனவுடனே நண்பன் அழைத்தான். அவனிடம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனோ ‘எவ்வளோ நாள் அங்க சாப்பிடலாம்ன்னு கூப்பிட்டிருப்போம்? ஒரு நாள் வந்திருப்பியாடா? அங்க சாப்பிட்டா வாந்தி வரும்ன்னு   சொன்ன? இப்போ மட்டும் என்ன ஆச்சு?’ எனக் கேட்க, வழிவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  

ஒரு வழியாக நண்பர்களுக்கு விஷயம் தெரிய சமாதானம் ஆனார்கள். கன்னட உணவு பிடிக்க ஆரம்பித்தது. நேரில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் தொலைப்பேசியில் பேச ஆரம்பித்தோம். மாசம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ்  பண்ணிட்டு இருந்த நான் 1000 ரூபாய்க்கு செய்ய ஆரம்பித்தேன். அதற்க்கும் மேல செல்ல தாங்காது என்று போஸ்ட்பெய்ட்  வாங்கி CUG  போட்டு பேச ஆரம்பித்தேன்.

50 ரூபாய்க்கு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நான் PVR, Inox என மல்டிபிளக்ஸ்களில் ஆன்லைனில் புக் செய்து படத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்.  10 ருபாய் கூல்ட்ரிங்க்ஸ் 15 ருபாய் என்பதால் சாதாரண தியேட்டர்களிலேயே எதுவும் வாங்கி சாப்பிடாத நான் 100 ருபாய் கொடுத்து பாப்கார்ன் வாங்க ஆரம்பித்தேன். அம்மா எவ்வளவு திட்டினாலும் புத்தாண்டு அன்று கூட கோவிலுக்கு செல்லாத நான் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில்  சர்ச்-க்கு சென்று ஆமென்  சொல்ல  ஆரம்பித்தேன். நாங்கள்  காதலை  சொல்லவில்லையே  தவிர  அதைத்தான்  செய்து  கொண்டிருந்தோம். இரண்டு  பேருக்கும்  இது  தெரிந்தே  இருந்தது.

இதெல்லாம்  எந்தப்  பிரச்சினையும்  இல்லாம  நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. ஜென்னிக்கு  அவங்க  வீட்டில  வரன்  தேட  ஆரம்பிக்கிற  வரைக்கும்.  அவளுக்கு  வரன்  தேட  ஆரம்பிச்சதும்   எங்களுடைய  காதலை  வீட்டில்  சொல்லிவிட்டாள். அவள்  தந்த  என்னைப்  பார்க்க  வேண்டும்  என  சொல்ல  எனக்கு  போன்  செய்த  அவள் ‘ஆதி, எங்க  அப்பா  உன்னை  பார்க்கணும்ன்னு  சொல்லறார்’ எனச் சொன்ன  போது  எனக்கு  ஒன்றும்  புரியவில்லை. பிறகுதான் ‘நம்ம  காதலைப்  பற்றி  பேசணுமாம்’ எனக் கூறினாள்.

அவர்கள்  வரவேற்ற  விதத்திலேயே  தெரிந்தது  பெரிதும்  பிரச்சினை  எதுவும்  இல்லை  என்று. உள்ளே சென்றதும்  அவள்  தந்தை ‘பண்ணி  பண்ணி’  என  வரவேற்க, நான்  ஏதோ  திட்டுகிறார்  என நினைத்தேன். நல்ல  வேளையாக  அங்கே  ஜென்னி  இருந்ததால்  இந்த  பண்ணி  பிரச்சினையில்  இருந்து தப்பிக்க முடிந்தது. இல்லையென்றால்  அங்கேயே  சண்டை  போட்டுட்டு  வெளியே  வந்திருப்பேன்.

கன்னடத்தில  ‘நனகே கன்னடா கொத்தில்லா’  தவிர  வேற  எதையும்  தெரிஞ்சுக்காதது  எவ்வளவு  தவறு என அங்கே புரிந்தது. அவர் தொடர்ந்து கன்னடத்தில் பேசிக்கொண்டே போக,  சிரித்துக்கொண்டும்  ‘ம்ம்’  சொல்லிக்கொண்டும்  சமாளித்தபடி,   நான் பரிதாபமாக  ஜென்னியை  பார்த்தேன். என்  நிலையைப்  புரிந்துகொண்ட  அவள் தன்   தந்தையிடம் ‘டாடி,  அவரிகே  கன்னடா  பரத்தில்லா’ எனச் சொன்னாள்.  என்னைக் காப்பாற்ற சொன்ன இந்த வார்த்தையே மிகப் பெரிய சிக்கலில் தள்ளிவிட்டது. அவர் தந்தை உடனடியாக, எப்போது நான் கன்னடம் கற்றுக் கொள்கிறேனோ அப்போதுதான் எங்கள் காதலை ஏற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டார். ‘உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு’ எனக் கூறியபடி வெளியே வந்தேன்.

எங்கள் வீட்டில் பேசச் சொல்லி ஜென்னி சொன்னதால் என் தந்தையிடம் சென்று எங்கள் காதலைப் பற்றி சொன்னேன். பொறுமையாகக் கேட்ட அவர் ‘அந்தப் பொண்ணு வீட்டில என்ன சொன்னங்க?’ எனக் கேட்க கன்னடம் கற்றுக் கொள்ளும் விஷயம் பற்றி கூறினேன். உடனே அவர் ‘அந்தப் பொண்ணுக்கு தமிழ் தெரியுமா?’ எனக் கேட்க ‘இல்லை’ என தலையாட்டினேன். உடனே அருகிலிருந்த அம்மா  ‘நீ மட்டும் கன்னடம் கத்துப்ப. அவள் தமிழ் கத்துக்க மாட்டாளா? அவங்க உன்னைக் கன்னடக்காரனாக்க  முயற்சிப் பண்ணறாங்க. என் பேரன் தமிழ் பையனாத்தான் இருக்கணும். அந்தப் பொன்னை தமிழ் கத்துக்க சொல்லு. சாதி, மதம் வேனாங்கிரதே பெரிய விஷயம். இதில மொழியும் வேண்டாமா?’ என மொழிப் பற்றிக் காண்பிக்க தந்தையும் ஆமோதித்தார்.

வேறு வழியில்லாமல், இப்போது நான் ‘கன்னட கலி’ வகுப்பிலும், ஜென்னி  ‘தமிழ்’  வகுப்பிலும்.  

கன்னடக்காரங்களே  பார்க்காத மொக்கை கன்னடப் படத்தையெல்லாம் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருக்கும் என்னை பரிதாபமாகப் பார்க்கின்றனர்  நண்பர்கள்.

கன்னடத்துப் பைங்கிளி

உண்மை காதல்

உண்மை காதலுக்கு பலரும் பல விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் இதுவரை எது உண்மையான காதல் என்று எனக்கு புரிந்ததே  இல்லை.  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பல வருடங்கள் காதலித்த சிலர், சில சாதாரண காரணங்களால் பிரிந்திருக்கின்றனர். அதே சமயம்,  காதலித்த  பெண்ணிடம் காதலை சொல்லாமலேயே, காதல் தோல்வியில்  உயிர்  விடுபவர்களும்  உண்டு. எனவே என்னை பொறுத்தவரை  உண்மை காதல் என்பதற்கு வரையறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை, அது முழுவதும்  ஒருவரின்  உணர்வு சார்ந்த  விஷயமாகவே  கருதுகிறேன். இங்கே உள்ள கதையும்  அது  போலத்தான். 

அது சென்னையின் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று. ஜீவா கல்லூரி விடுமுறை முடிந்து  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.   “இனி நாம  சீனியர்டா மச்சி, நம்மக்கிட்ட பயப்படவும் சில பேரு வருவாங்க!”  என்றபடி உடன் வந்து சேர்ந்தான் சரவணன். ஆனால் ஜீவாவுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஏனென்றால்  ஜீவாவின் முகம் அப்படி. மகாராஷ்டிரா வம்சாவழி என்பதாலும், சிறு வயது முதல் வீட்டிலேயே வளர்ந்ததாலும்,  நல்ல அமுல் பேபி முகம் அவனுக்கு. நண்பர்கள் அனைவரும் அவனை ‘பேபி’ என்றுதான் அழைப்பார்கள். எனவே அவனுக்கு ‘நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும் வரை நம்மை பார்த்தும் சில பேர் பயப்படுவார்கள். ஆனால் தனியாக போனால் ஒருத்தன் கூட பயப்பட மாட்டான்’  என்பது தெளிவாக தெரிந்தது.

வகுப்பிற்கு வந்ததும் பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்ததும், எப்பொழுதும் போல கடைசி பெஞ்ச்-இல் சென்று அமர்ந்தார்கள் ஜீவாவும், சரவணனும்.  சரவணன் திடகாத்திரமானவன்.  விரிவுரையாளர்களே   அவனிடம் பெரிதாக வைத்துக்கொள்ள  மாட்டார்கள். இவனும் ஜீவாவும் ஒன்றாக செல்லும்போது இரு துருவங்கள் போல காட்சியளிக்கும்.

மதியம் வரை வகுப்பில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. சரவணன் ஒரு அவசர வேலையாக வெளியில் செல்ல, ஜீவா மட்டும் தனியே கேண்டீனுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போதுதான் திடீரென தென்றல் வீசியது போல அவள் கடந்து சென்றாள். ஏனோ இதுவரை எந்த பெண்ணை பார்த்தாலும் தோன்றாத  புது உணர்ச்சி, அவனுக்கு இப்போது தோன்றியது.  திரும்பி பார்த்த போது, அவள் ஒரு தேவதை போல, துப்பட்ட காற்றில் பறக்க, வெள்ளை சல்வாரில் சென்று கொண்டிருந்தாள்.  ‘உடனே அவன் காதலில் விழுந்திருப்பான்’ என நீங்கள் நினைத்தால் அது தவறு.  ஜீவா முப்பது வினாடிகளுக்கு முன்பிருந்தே  அவளை காதலிக்க தொடங்கி இருந்தான்.

இதை சரவணனிடம் சொல்ல, உடனே அவன் “மச்சி, நிச்சயமா அவ ஜுனியராத்தான் இருப்பா. எப்படியும் கண்டுபிடிச்சிடலாம். இனிமேல் நீதான் அவளோட ஆளு”  என உசுப்பேத்த, ஜீவாவுக்கு அவள் மீதான காதல் இன்னும் அதிகமானது.  நண்பர்களின் உதவியால், அடுத்த நாள் மதியத்துக்குள் அவள் பெயர் சரண்யா என்றும், சென்னைதான் அவள் என்பதும் தெரிந்தது. மேலும், அவள் முதல் வருடமல்ல, இரண்டாவது வருடம் CSE, வேறு ஒரு கல்லூரியிலிருந்து  இங்கே சேர்த்து இருக்கிறாள் என்பதும் தெரியவந்தது.  ஆனால் இந்த தேடலில் தெரிந்த இன்னொரு விஷயம் தான் நண்பர்களை கவலைக்குள்ளாக்கியது.

அது, அவளுக்கு எல்லாமுமாக ஒருவன் இருக்கிறான் என்றும், அவளின் தந்தை இறந்ததிற்கு பிறகு இவனும் இவன் குடும்பமும்தான் அவர்கள் குடும்பத்திற்கு சகலமும் செய்து வருகிறர்கள் என்பதுதான் அது. மேலும் அவனும் இதே கல்லூரியிலேயே ECE படித்து வருகிறான் அன்று தெரிந்தபோது மேலும் ஆதிரம்மனது. மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களான இவர்களுக்கும் ECE மாணவர்களுக்கும் எப்போதும் ஆகாது. எனவே இதை இரண்டு பிரிவுகளுக்குமான மோதலாகவே தீர்மானித்தார்கள்.

கம்ப்யூட்டர் பிரிவில் இருக்கும் பெண் நண்பர்கள் மூலமாக அவளின் நண்பன் ஆனந்த், வெறும் நண்பன் மட்டுமே வேறு எதுவும் இல்லை என்று தெரிந்தபின்புதான் ஜீவாவுக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் ஆனந்த்,  day scholar   என்பதால் அவனது வகுப்பிலும் பெரியதாக நண்பர்கள் இல்லை, மேலும் அவன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவன் என்று தெரிந்ததால் சரவணனும், மற்ற  நண்பர்களும் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று நம்பினர். 

பிறகு சரவணன் ஜீவாவை தயார்படுத்தும் வேலையில் இறங்கினான். மிகவும் பயந்த அவனுக்கு  தைரியமூட்டி, அவளிடம் பேச சொன்னான். அவனும் ஒரு வழியாக அவளிடம் பேசுவதாக ஒத்துக்கொண்ட போது இரண்டு மாதங்கள் ஓடி இருந்தன. ஒரு நாள், அவள் தனிமையில் வந்து கொண்டிருக்க, ஜீவா அவள் எதிரில் போய், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவளோ, “எனக்கு உன்னை யாருன்னே தெரியாது” எனக்கூற, இவன் “எனக்கு உன்னை பத்தி நிறையா தெரியும், அதுபத்தி பேசத்தான் கூப்பிடறேன்”, எனசொல்லி கான்டீன்-க்கு கூட்டிபோய் ஒரு தனிமையில் அமர்ந்தனர்.

“என்ன சொல்லணும் எங்கிட்ட?”

“நான் உன்னை லவ் பண்ணறேன், உன்னை பார்த்த முதல் நாள்ல இருந்து”

“என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்?”

“நீதான் என் லவர்ன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம், நெறைய தெரிஞ்சுக்கிட்டேன்.”

“இதெல்லாம் ஜஸ்ட் இன்பாச்சுவேசன். கண்டதும காதல் எல்லாம் சினிமாவுக்குத்தான் லாயக்கு”

“இல்ல சரண்யா, நான் உண்மையிலேயே உன்னை லவ் பண்ணறேன்”

“இங்கப்பாரு, உன் பேரே எனக்கு தெரியாது, எப்படி உன்ன லவ் பண்ண.”

“நான் ஜீவா. மெக்கானிக்கல்  ஸ்டுடென்ட்”

“சாரி, வேற ஏதாவது பொண்ண  ட்ரை பண்ணு.”  

சொல்லிவிட்டு விடுவிடுவென போய்விட்டாள். 

இந்த ஏமாற்றத்தின்  காரணமாக  அடுத்த நாள் ஜீவா கல்லூரிக்கு செல்லவில்லை. சரண்யா இதைப்பற்றி அவள் ஆனந்தனிடம் சொல்லி இருந்ததால், அன்று மெக்கானிக்கல் வகுப்பறைக்கு ஜீவாவை பார்க்க வந்தான். அவன் இல்லாததால், அவன் சரவணனிடம் பேச, சரவணன் இவனை பயமுறுத்த இதுதான் சந்தர்ப்பம் என்று முடிவு செய்தான்.

“என்னது, ஜீவாக்கிட்ட இதெல்லாம் விட சொல்லவா? டேய் விளையாடறியா? நான் ஏதாவது சொல்லபோக அவன் என்னை சாத்தறதுக்கா?”

அவ்வளவு பெரியவனாய் இருந்த சரவணனே இவ்வாறு சொல்லவும், ஆனந்த் கொஞ்சம் பயந்துதான் போனான். இதை கவனித்த மற்ற நண்பர்களும் சேர்ந்துகொண்டனர்.

“இங்க பாருடா, இவன் ஜீவாவை மிரட்ட வந்திருக்கான்.”

“ஐயோ, நான் மிரட்ட எல்லாம் வரலீங்க, சும்மா பேசத்தான் வந்தேன்”

“சும்மா கை காமிச்சவனையே, தூக்கிப்போட்டு மிதிச்சவண்டா அவன்”

“அன்னைக்கு பைனல் இயர் பையனை பொறட்டி எடுத்தானே, தெரியாதா  உனக்கு?”

மிகவும்  பயந்த ஆனந்த், தான் வந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டு சென்றுவிட்டான்.

இதைப்பற்றி சரவணன்  ஜீவாவிடம் சொல்ல, அவனோ, “ஏண்டா இந்த கொழந்த மூஞ்சியை போய் பெரிய தாதா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வச்சு இருக்கீங்களேடா. எவனாவது நம்புவானா?” என கேட்டான். 

“அவன் நம்பிட்டான் மச்சி. அது போதும். இனி அவன் உன் வழியில வரமாட்டான். கவலைய விடு. அது மட்டுமில்ல அநேகமா உன் கொழந்த மூஞ்சிய பாத்துதான் வேணாம்ன்னு சொல்லி இருப்பா. இப்ப நீ பெரிய ரௌடின்னு நெனச்சான்னா, அவ  எண்ணம்  மாறும்.” இதை கேட்ட ஜீவாவும் நம்பினான்.

சில நாட்கள் கழித்து, மீண்டும் சரண்யாவை இடைமறித்து பேசினான் ஜீவா. அவளும் வேறு வழியில்லாமல் நின்றாள்.

“நான் சொன்னத பத்தி என்ன முடிவு பண்ணின?”

“நாந்தான் அன்னைக்கே சொன்னனே”

“ஹே, அதெல்லாம் ஒரு அவசரத்தில பேசறது. நிதானமா யோசிச்சு என்ன முடிவு பண்ணினன்னு கேட்டேன்.”

“யோசிக்கறதுக்கு ஒன்னுமே இல்ல. எப்போ நீ ஒரு பெரிய ரௌடின்னு தெரிஞ்சதோ அப்பவே உன்னைப்பத்தி முடிவு செஞ்சுட்டேன்”

“அதெல்லாம் சும்மா பிரெண்ட்ஸ் விளையாட்டுக்கு சொன்னது”

“அதுவோ, நான் முடிவு பண்ணது பண்ணதுதான்”

“இதெல்லாம் சும்மா. நீ வேற யாரையும் லவ் பண்ணல இல்ல. அப்புறம் என்ன பிரச்சன?”

“யார் சொன்னா? நான் ஆனந்தை லவ் பண்ணறேன்.”

“ஹே சும்மா பொய் சொல்லாத. நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பிரெண்ட்ஸ்-தான்னு எனக்கு தெரியும்”

“அதெல்லாம் எப்படி நீயா முடிவு பண்ணுவ?”

“நீ இன்னும் அவன்கிட்ட propose பண்ணல இல்ல?”

“அதான் பிரச்சனையா? வேணும்ன்னா என் பின்னாடி வந்து பாரு”.

சொன்னவள் நேராக ஆனந்திடம் சென்று, “ஆனந்த், ஐ லவ் யு” எனச்சொல்ல, ஜீவா ஆடிப்போனான். 

ஆனந்த் என்ன நடந்திருக்கும் என புரிந்துகொண்டு அவளை சமாதான படுத்த முயற்சிக்க, அவளோ மிகவும் உறுதியாக அவனை காதலிப்பதாக சொன்னாள். பிறகு வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொண்டான். 

இந்த அதிர்ச்சியுடன் வந்து நண்பர்களிடம் ஜீவா, “என்னை பிடிக்கலைன்னு சொன்னதுகூட பெரிசில்ல மச்சான். என்ன தவிர்க்கறதுக்காக இன்னொருத்தன் கிட்ட போய் லவ் யு சொல்லிட்டாடா”, என புலம்பியவனை அனைவரும் சமாதானப்படுத்தினார்கள். சரவணனும், ‘இவனை தான் ரௌடியாக உருவகப்படுத்தியதால்தான் அவள் வேண்டாம் என சொன்னாள்’ என நினைத்து வருத்தம் கொண்டான். இதற்கு பிறகு ஒருவாரம் தொடர்ந்து, குடித்து போதையில் வகுப்பிற்கும் வராமல் பைத்தியக்காரன் போல் திரிந்தான் ஜீவா.

அடுத்த ஞாயிற்றுகிழமை, இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தனர் நண்பர்கள். சரவணன்,  ஜீவாவை கடற்கரைக்கு  அழைத்து போய், நண்பர்கள் வாங்கி வைத்திருந்த சரக்குகளை காண்பித்து, “எவ்வளவு வேணுமோ குடிச்சுக்கோ. ஆனால் அவளை இங்கயே மறந்துட்டு வரணும்” எனக்கூறி சற்று தொலைவில் சென்று அமர்ந்தான். 

மற்ற நண்பர்கள், ஜீவா குடித்து முடித்தவுடன், “அவள மற, அவள மற” எனக்கூறி, அவனை தண்ணியில் அமிழ்த்தினார்கள். அதற்கு பிறகு, பழையபடி நண்பர்களிடம் பேசிக்கொண்டு வகுப்பிற்கு ஒழுங்காக வர ஆரம்பித்ததால், இவன் மறந்துவிட்டதாங்க எண்ணி நண்பர்கள் மகிழ்ந்தனர்.

இது நடந்து 7 வருடங்கள் ஆகியும், அவள் மீதான தனது காதலை மறக்க முடியாமலே வாழ்ந்து வருகிறான் ஜீவா.

இது நடந்து ஏழு வருடங்களுக்கு  பிறகு, ஒரு நாள் ஜீவாவின் வீட்டுக்கு  சென்ற சரவணன் ஜீவாவின் டைரி-ஐ பார்த்த போதுதான்  அவன் இன்னும் அவளை  மறக்கவில்லை  என்பதும்,  அவளுக்காக  இன்னும் ஏங்குகிறான் என்றும்  புரிந்தது.  ஆனால் அவள்  ஆனந்தை திருமணம்  முடித்திருந்தாள்.  இதை  ஜீவாவிடம்  சொல்ல நினைத்தவன், அது முடியாது என தெரிந்து,  பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு  வந்துவிட்டான். 

இது காதலோ, இல்லை இனக்கவர்ச்சியோ ஜீவாவின் மனதில் இன்னும் அது வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது ‘உண்மை காதலாக’.

உண்மை காதல்

ஒரு காதல் கதை – பகுதி 2

முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.

“எவ்வளோ நேரம் கையை பிடிச்சுட்டு இருக்கிற மாதிரி ஐடியா?”

  “இந்த வாழ்க்கை முழுக்க..”

 எப்படி எனக்கு தைரியம் வந்ததென்றே தெரியவில்லை. ஒருவேளை அவள் ஸ்பரிசத்தால் இருக்கலாம். எப்படியோ மனதில் இருந்ததை அவளிடம் சொல்லியாயிற்று என்று ஒரு திருப்தி. ஆனால் அவளோ எதுவும் சொல்லாமல் ஓடிவிட்டாள்.

 எனக்கோ இருப்பு கொள்ளவில்லை. அந்த வாரம் முழுக்க என்னை தவிர்த்து வந்தாள். அந்த சனிக்கிழமை, எனக்கு கட்டை பிரித்தார்கள். வீடிற்கு வந்தவுடன், கோவிலுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு, அவள் வாரா வாரம் செல்லும் அழகர் கோவிலுக்கு சென்றேன். அவள் மஞ்சள் நிற தாவணியில் பளிச்சென்று தெரிந்தாள். எவ்வளவு பேர் இருந்தாலும், நம்மவளை பார்ப்பது நமக்கு எளிது தானே.

 நல்லவேளையாக அவள் தனித்து இருந்தாள். அவளிடம் சென்று, “என்ன ஆச்சு. ஏன் எங்கிட்ட பேச மாட்டேங்கர? புடிக்கலைன்னு பொய் சொல்லாத, எனக்கு தெரியும் என்னை உனக்கு புடிச்சிருக்குன்னு”. என சொல்லிமுடித்த போது,  எனக்கே ஆச்சரியமாக இருந்தது, ஏன் தைரியத்தை எண்ணி.

 அவளோ, தலை குனிந்தவாறே, “இதெல்லாம் ஒத்து வராது. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா வெட்டி போட்டுருவாங்க”, என்றாள்.

 நான், “அதெல்லாம் ஆறு வருசத்துக்கு அப்புறம், நான் நல்ல நெலமைக்கு வந்ததுக்கு அப்புறம் உங்க வீட்டில வந்து பொண்ணு கேட்டா குடுக்காமயா போய்டுவாங்க?” என கேட்க, அவள் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். 

 “இங்க பாரு நந்தினி, எனக்கு தெரிய வேண்டியதெல்லாம், உனக்கும் என்னை புடிச்சிருக்கா, இல்லையாங்கறதுதான். அஞ்சு ஆறு வருசத்துக்கு அப்புறம் நடக்க போறத பத்தி இப்போ பேசி ஒண்ணும் ஆக போறதில்ல”.

 அவள், “பிடிச்சுருக்கு” எனச்சொன்ன போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 அன்றிலிருந்து, பள்ளி முடியும் வரை நாங்கள் இந்த உலகிலேயே இல்லை. வகுப்பு முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், மற்ற நேரங்களில் பேசிக்கொண்டும், வீட்டில் இருக்கும்போது அவளை நினைத்துகொண்டும் நாட்கள் கடந்தன.

 அந்த நாட்களில் எல்லாம், அப்பாவின் கனவு, என் எதிர்காலம் எதுவும் ஞாபகம் இல்லை, எல்லாம் நந்தினி தான். அவளுடைய புத்தங்களிலும் பல இடங்களில் மறைவாக ஆதித்தன் எனும் என் பெயரை பார்க்கும் போது மனம் துள்ளி குதிக்கும்.

 எப்போது +1 முடித்தேன் என்றே ஞாபகம் இல்லை, அதற்குள் +2 பொது தேர்வு வந்து விட்டிருந்தது. வகுப்பில் முதல் மாணவனாக இருந்த நான் சராசரி மாணவனாகி பல நாட்கள் ஆகியிருந்தன. ஸ்டடி ஹாலிடேஸ் எல்லாம் அவள் ஞாபமாகவே கழிந்தது. சனிக்கிழமைகளில், கோவிலில் அவளை சந்தித்த போது, இதையே அவளும் சொல்லி என் காதலை மேலும் வலுப்படுத்தினாள்.   

பொது தேர்வு முடிந்து, கொடுமையான விடுமுறைக்காலமும் கடந்து, என் தேர்வு முடிவு நாள் வந்தது. 700 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன் நான்.   வீட்டில் அனைவரும் வருத்தப்பட்டாலும் யாரும் என்னை திட்டவில்லை, எப்போதும்போல. பள்ளி சென்ற போதுதான் தெரிந்தது அவளும் 700 மதிப்பெண்கள் என்று. ஏன் என்று தெரியாமல் மனதில் ஒரு மகிழ்ச்சி.

 அதற்க்கு பின் நடந்தது நாங்கள் எதிர்பாராத ஒண்டு. ஏன் தந்தை பலரை பிடித்து, கடன் எல்லாம் வாங்கி என்னை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BE சேர்த்துவிட்டார். நந்தினியின் தந்தையோ சிரமமெல்லாம் படாமல் அவளை மதுரையிலேயே BSc சேர்த்து விட, எங்கள் பிரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டிருந்தது.

 நல்லவேளையாக, அப்போது இருவரும் மொபைல் போன்கள் வைத்திருந்ததால் Airtel CUG தயவில், எங்கள் காதல் தினமும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.  

மூன்று வருடங்களில் அவள் படிப்பு முடிய, நானோ 10 அர்ரியருடன், இறுதி ஆண்டில் இருந்தேன், நான்கு ஆண்டுகளில் படிப்பை முடிப்பேனா என்பது கூட தெரியாமல்.  இருந்தும் ஏன் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. அவள் இருக்கும் வரை என்ன கவலை?.

 திடீரென்று ஒரு நாள் அவளிடம் இருந்து அழைப்பு அதுவும் பகலில். (படிப்பு முடிந்தவுடன் எங்கள் உரையாடல்கள் இரவில் அவள் வீட்டில் அனைவரும் உறங்கியவுடன் தான் நடந்துகொண்டிருந்தது). 

 “ஆதி, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”.

“சொல்லு நந்தினி”.

“எங்க வீட்டில எனக்கு மாப்பிள பாக்கிறாங்க”.

“எப்படியாவது ஒரு வருஷம் தள்ளி போடு நந்தினி, அதுக்குள்ள என் படிப்பை எப்படியாவது முடிச்சுடுவேன்”.

 “படிப்பை முடிச்சா போதுமா ஆதி? எங்க வீட்டில நல்ல செட்டில் ஆனவனான்னு பாக்க மாட்டாங்களா?”

“என்ன சொல்லற நந்தினி? கண்டிப்பா முடிச்சு ஒரு வருசத்தில வேலை கெடச்சுடும். நீதான் உங்க வீட்டில பேசி சம்மதிக்க வைக்கணும்”

“கண்டிப்பா வேலை இல்லாத ஒருத்தன எங்க வீட்டில ஏத்துக்க மாட்டங்க..”

நான் அதிர்ச்சி ஆனேன். இப்படி ஒரு பதிலை அவளிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.

“அப்போ ஒரே வழிதான். எப்படியாவது ஒரு வருஷம் தள்ளி போடு. அப்புறம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம். நல்ல வேலை கெடச்சு செட்டில் ஆனதுக்கு அப்புறம் வீட்டில பொய் நின்னா ஏத்துப்பாங்க தான?”

“விளையாடறியா ஆதி. ஒரு வேலையும் இல்லாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா , சாப்பாட்டுக்கு என்ன பண்ணறது?”  

“அப்போ என்னதான் பண்ணலாம்னு நீயே சொல்லு”   

“ஒரே வழிதான் இருக்கு ஆதி, நாம நம்ம காதல மறந்திடறதுதான் சரின்னு தோணுது..”

“நந்தினி.. என்ன சொல்லறே? என் வாழ்க்கையே நீதான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்”

 “பிரக்டிகலா யோசி ஆதி. நான் நேத்து நைட்டே இத முடிவு பண்ணிட்டேன்.. அத சொல்லத்தான் இப்போ கூப்பிட்டேன். மறுபடியும் காதல் அது இதுன்னு எனக்கு தொல்லை குடுக்க மாட்டன்னு நம்பறேன். பை”. சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாள்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு திரும்ப அழைத்த போது, மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அவள் கேட்டுக்கொண்டபடி அவ வீட்டுக்கெல்லாம் போகவில்லை. அவள் வீட்டுக்கென்ன, மதுரைக்கே போகவில்லை. இந்த பிரச்சினையில் மேலும் நான்கு பேப்பர் அர்ரியர் கணக்கில் சேர்ந்தது. செமஸ்டர் லீவில் மதுரை சென்ற போது நண்பர்கள் மூலம் அவளை பற்றிய தகவல் தெரிந்து கொள்ள முயன்றேன். நந்தினி பற்றி எந்த நண்பனிடமும் தகவல் இல்லை.  இதற்கிடையே, அப்பா உடல்நிலை சரியில்லாமல் போக, என் கடமையை உணர்ந்தேன். திரும்பி  சென்னை வந்த போது புது மனிதனாக வந்தேன்.

அவளை மறக்க முடியவில்லை என்றாலும், அவள் சுட்டிக்காட்டிய குறை என்னை படிக்க வைத்தது. அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக அனைத்து பேப்பர்களையும் கடைசி செமஸ்டரில்  முடித்தேன். முடித்து வந்த மூன்று மாதங்களில் ஒரு MNC -யில் வேலை கிடைக்க வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.  

என்ன நடந்த போதும் அவளை மறக்க முடியவில்லை. ‘இது போல, வாழ்க்கையில் நீ நல்ல நிலைக்கு வரத்தான் அப்படி பேசினேன்’ என்று சொல்லி, என்னை பார்க்க வருவாள் என கனவுகளுடன் வாழ்ந்து வந்தேன்.

இப்படியாக அவள் நினைவுகளுடன் காலத்தை கழித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், facebook நண்பர் பரிந்துரையில் அவளின் பெயர் பார்த்தவுடன், என்னையுமறியாமல் கை அவளை க்ளிக்கியது. உள்ளே குழந்தையுடன் அவள் புகைப்படம். லண்டனில் இருக்கிறாளாம்.

ஊரிலிருந்து தந்தை அழைத்தார். கல்யாணத்துக்கு பெண் பார்க்க முடிவு செயதிருப்பதாய்.

 ‘மனதில் இருப்பவள் வெளியேறும் நாள் வரை பொறுங்கள்’ என கூற நினைத்து முடியாமல், “ரெண்டு மூணு வருஷம் ஆகட்டும்”, என்று கூறி அழைப்பை துண்டித்தேன்.

ஒரு காதல் கதை – பகுதி 2

ஒரு காதல் கதை – பகுதி 1

சற்றே நீளமாக போய் விட்டதால், இரண்டு பகுதியாக சமர்ப்பிக்கிறேன். என் நண்பனின் சில ஞாபகங்களுடன் என் கற்பனை கலந்த ஒரு கதை.

காதல் சில நேரங்களில் எதனால் வருகிறதென்றும் தெரியாது, எதனால் விட்டு போகிறதென்றும் புரியாது.  நான் ஆதித்தன். என்னை எப்படியாவது பொறியியலாளன் ஆக்கி விட வேண்டும் என்ற என் தந்தையின் கனவின் விழைவாக, மதுரையின் முக்கிய பள்ளிகளில் ஒன்றான TVS லக்ஷ்மி பள்ளியில் படித்து கொண்டிருந்த காலம். என் தந்தையின் கனவையெல்லாம் கால் தூசாக எண்ணவைத்த என் காதல் பிறந்த காலம்.

பத்தாம் வகுப்பு வரை சிறியதொரு பள்ளியில் அனைவருக்கும் தெரிந்த முகமாய், ஆசிரியர்களின் செல்ல பிள்ளையாய் இருந்து வந்த நான், திடீரென்று  இவ்வளவு பெரிய பள்ளியில் மாணவர் கடலுக்குள் ஒரு சிறு துளியாய் சங்கமித்த நேரம். பள்ளியில் சேர்ந்த ஒரு வாரத்தில் என்னையொத்த சில நண்பர்களை கூட்டிக்கொண்டு காலையில் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

“என்னடா மாப்பு, உங்கள் ஸ்கூல்ல சேர்ந்ததே சில பல பிகருங்கள பாத்துதான். ஆனா ஒன்னு கூட நம்ம கிளாஸ்ல இல்லையேடா”  இந்த பள்ளியிலேயே பல வருசமாய் படித்துக்கொண்டிருந்த நண்பனிடம் கேட்டேன்.

 “அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும் மச்சான். மேத்ஸ் குரூப் எல்லாம், படிக்கிற புள்ளக தான் எடுக்கும். என்ன பண்றது, அழகா இருக்கிற எவ படிக்கிறா? எல்லாம் தேர்ட் க்ரூப்ல ஒக்காந்து இருக்காளுங்க பாரு” அவனின் வயித்தெரிச்சல்.

அப்போதுதான் அவள் எங்களை தாண்டி போனாள், அவள் தந்தையுடன். வெளிர்நீல நிற சுடிதாரில், அந்த வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல. நண்பர்களிடம் கூறினேன், 

“மாப்பு, இவ மட்டும் நம்ம கிளாஸ் வந்தான்னா, சத்தியமா ஒரு நாள் கூட கிளாஸ் கட் அடிக்க மாட்டேண்டா”.

 “டேய்! இப்பதான சொன்னேன், அழகான பொண்ணுங்க எவளும் உருப்பிடியா படிக்க மாட்டாளுங்கன்னு. எங்க ரிசர்ச் மேலேயே சந்தேகமா உனக்கு?” கண்ணை உருட்டி முறைத்தான் நண்பன்.  

 ஆனால் அவன் ஆராய்ச்சி பொய்யாகத்தான் போனது.  அவள் எங்கள் வகுப்பிற்க்குத்தான் வந்தாள். நான் என் நண்பனை பார்த்து சிரிக்க, அவன் அவளை முறைத்தான். வழக்கம் போல எங்கள் ஆசிரியை அவளை வகுப்பிற்கு அறிமுக படுத்திக்கொள்ள சொன்னார். அப்போதுதான் அவள் பெயர் நந்தினி என்றும், எங்கள் தெருவில் இருந்து மூன்று தெரு தள்ளிதான் அவள் வீடு என்றும் தெரிந்தது. அவளது கனவும் BE தான் என தெரிந்த போது, ஏனோ மனம் மகிழ்ச்சி கடலில் குதித்தது.

 அறிமுகத்துக்கு பின், என் ஆசிரியை, நாளை முதல் யூனிபார்மில் வரவும் என்று கூற, எனக்கோ ‘இவளுக்கு மட்டும் இந்த உடையையே சீருடையாக அனுமதித்தால் என்ன?’ என்று தோன்றியது. ஆனால், ‘அழகு உடையில் அல்ல, உடுத்துபவரிடம்’ என அடுத்த நாள்தான் உறைத்தது எனக்கு. இவள் யூனிபார்ம் போட்டவுடன்தான் அந்த உடையும் இவ்வளவு அழகாக இருக்கிறதேன்று தெரிந்தது.

 அவள் எப்படியாவது என்னுடன் பேச மாட்டாளா என மனம் ஏங்கி தவித்தது. எனக்கு ஏற்கனவே அறிமுகமான சில பெண்களிடம், intro கொடுக்க சொல்லி கேட்ட போதெல்லாம் மறுத்துவிட,  எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கு. முதல் தேர்வில் வகுப்பிலே முதல் மதிப்பெண் பெற்று இருந்தேன். அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் தேவதை என்னிடம் பேசிய நாள்.  அவளுக்கு சில கணக்குகள் புரியவில்லை என்றும், சொல்லிதர முடியுமா என்றும் கேட்க, நானோ அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  கண் முன்னே நிழலாடிய போதுதான் சுயநினைவுக்கு வந்த நான், அவள்தான் என் முகம் முன்னே சிரித்தபடி கையை ஆட்டிக்கொண்டிருப்பதை பார்த்து சங்கடத்துடன், “கண்டிப்பா! கண்டிப்பா சொல்லித்தரேன்!’ என்று கூறினேன்.

என்னதான் நாங்கள் பேச ஆரம்பித்து இருந்தாலும், பேச்சு படிப்பை தவிர வேறு எங்கும் போகவில்லை. நமக்குத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே என்று அவர்கள் உதவி கேட்க, அவர்களோ பல படங்களின் கதைகளை அவர்கள் சொந்த சிந்தனை போல உதிர்த்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம், ‘மாப்பு, நானும் அந்த படம் எல்லாம் பாத்திருக்கேண்டா, உருப்பிடியா ஏதாவது இருந்தா யோசிச்சு சொல்லுங்கடா’ என சொல்லிவிட்டு வீட்டுக்கு போனேன்.

அடுத்த நாள் காலை, வழக்கம் போல சைக்கிளில் பள்ளியை நெருங்கிக்கொண்டிருந்தேன். சைக்கிள் ஸ்டாண்டை நெருங்கிய போதுதான் தெரிந்தது, அவள், அங்கே தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள் என்று. நண்பர்கள் சொன்ன ஐடியா எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்க, சைக்கிளை வேகமாக அழுத்திக்கொண்டு பொய், ஸ்கிட் அடித்து நிறுத்தினேன். அப்போதுதான் தெரிந்தது, இவளை பார்த்ததில், முன்னே வைத்திருந்த, மதிய சாப்பாட்டு கூடையை மறந்து விட்டிருந்தது. சைக்கிளை நிறுத்திய வேகத்தில், சாப்பாட்டு கூடை பாராது பொய் பத்தடி தூரத்தில் விழுந்து, சாப்பாடு அனைத்தும் கீழே கொட்டியது.

சாப்பாடு கொட்டியதை விட பெரிய வருத்தம், அவளும் அவள் தோழிகளும் சிரித்ததுதான். நான் சைக்கிளில் இருந்து கீழே இறங்குவதற்குள், அவளே என் டிபன் பாக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். முகத்தில் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று எளிதில் புரிந்தது எனக்கு.

முதல் முயற்சி, படுதோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்த என்னை, என் நண்பர்கள்தான் உற்சாக படுத்தினார்கள். அடுத்த முயற்சிக்கு. அதில் ஒருவன், “மச்சி, சைக்கிள்ல பண்ணதாலதான் இப்பிடி ஆயிடுச்சு. நீ மட்டும் பைக்ல ட்ரை பண்னன்னு வையி, கண்டிப்பா வொர்க்அவுட் ஆயிடும்” என உசுப்பேத்த, இந்த சனிக்கிழமை அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். அப்பாவின் கை, காலில் விழுந்து நண்பன் வீட்டுக்கு செல்வதாக கூறி, அவளிருக்கும் தெருவுக்கு சென்றேன். 

 நான் எதிர்பாத்தது போலவே, அவள் வீட்டிற்கு வெளியில் நின்று இருந்தாள். அவளை பார்த்துக்கொண்டே பைக்கை வேகமாக செலுத்திய நான் அங்கே இருந்த குழியை கவனிக்கவில்லை என்பது, நான் பைக்குடன் காற்றில் பறந்துகொண்டிருந்த போதுதான் உறைத்தது.  பிறகு, மருத்துவமனையில் தான் கண்விழித்தேன். திரும்ப பள்ளிக்கு செல்ல ஒரு மாதம் ஆனது.

கையில் கட்டுடன், அது ஆடாமல் இருக்க, கழுத்திலிருந்து ஒரு கயிறும் சேர்க்கப்பட்டு இருந்தது. அவள் என்னை பார்த்ததும் அருகில் வந்து, “இப்போ எப்படி இருக்கு” என கேட்க, நானோ “எல்லாம் சரி ஆயிடுச்சு. இதெல்லாம் எனக்கு பெரிய அடியே இல்ல. எங்க அம்மாவுக்காகத்தான் இதெல்லாம்” என, கழுத்தில் இருந்து வந்த கயிறில் இருந்து கையை எடுத்து கீழே தொங்கவிட்டேன்.  ஆனால் வலி எல்லைமீற, என்னையறியாமல் ‘அம்மா’ என கத்திவிட்டேன்.

 அவள் உடனே, என் கை பிடித்து அந்த கயிற்றில் மாட்டிவிட்டாள். மாட்டிய பிறகும் நான் அவள் கையை விடவே இல்லை. சற்று நேரம் பொறுத்து அவள்,

 “எவ்வளோ நேரம் கையை பிடிச்சுட்டு இருக்கிற மாதிரி ஐடியா?”

  “இந்த வாழ்க்கை முழுக்க..”

பகுதி-2 இங்கே.

ஒரு காதல் கதை – பகுதி 1