திராவிடமும் தமிழ் தேசியமும்

சமீப காலமாக திராவிடர் இயக்கங்களும், பெரியாரியக் கருத்துக்களை  ஏற்றுக்கொண்டவர்களும்   தமிழ்  தேசியத்துக்கு  எதிரானவர்கள்  என்ற   மாயையை  சில  ‘தூய’  தமிழர்  அமைப்புகள்  உருவாக்கிவருகின்றன.  மேலும் இந்த அமைப்புகள் இன்னும் ஒரு படி மேலே போய் ஏதோ இப்பொழுது தமிழர்கள் அனுபவிக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் ‘திராவிடர்’ கொள்கைகள்தான் காரணம் எனவும், அதை விடுத்து தூய தமிழர் அமைப்புகளின் கொள்கைகள் மூலமாகவே தமிழர்களின் நலன்கள் காக்கப்படும் என்பது போலவும் பேசும் பொது இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

இந்த அமைப்புகளை பொருத்தவரை, எவன் ஒருவனுக்கு தமிழ் தாய் மொழியாக இருக்கிறதோ அவன் மட்டுமே நட்பு கொள்ள ஏற்றவன். மற்ற ஆட்களை எல்லாம் தமிழகத்தை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமா என்ன?

பிறகு, ஒவ்வொரு தலைவர்களின் பின்னணியையும் ஆராய்ந்து இவர் தெலுங்குக்காரர், இவர் கன்னடிகர் எனவே இவர்களெல்லாம் நம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள தகுதியில்லாதவர்கள் என்ற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இவர்களின் ஆய்விலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்ட பெரியாரும் தப்பவில்லை.

சமீபத்திய நாம் தமிழர் அமைப்பின் ஆய்வறிக்கை பெரியாரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல், ஏதோ அவரின் கொள்கைகள்தான் நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என குறிப்பிட்டிருந்ததை அறிந்த போது, சீமான் மேல் இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது. நாம் தமிழர் அமைப்பின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் அவர்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சமீப காலமாக அவர்களின் நடவடிக்கைகள், இவர்களுக்கும் சிவ சேனா, MNS போன்ற அடிப்படைவாத அமைப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபிக்கின்றன.

பெரியார், திராவிடர் எனக் குறிப்பிட்டது பார்ப்பனர் அல்லாத மக்களைத்தானே தவிர, அண்டை மாநில மக்களை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற பொருளில் அல்ல என்பதை பலர் எடுத்துரைத்தும் ஏன் இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

பெரியார் தமிழ் தேசியத்தை ஆதரித்தவர் என்பது பெரியாரை உண்மையிலேயெ பின்பற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். பெரியார் சொன்ன தமிழ் தேசியத்துக்கும், இவர்கள் சொல்லும் தமிழ் தேசியத்துக்கும் வித்தியாசம் உண்டு. பெரியார் கனவு கண்ட தமிழ் தேசம் தமிழகத்தில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் சாதி, மதம் மொழி கடந்து இணைக்கும் ஒரு நாடு. ஆனால் தற்போது நாம் தமிழர் போன்ற அமைப்புகள் சொல்லும் தமிழ் தேசத்தில் தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை.

இதைவிடக் கொடுமையான விஷயம், சிங்களர்களை திராவிடர்கள் எனக் குறிப்பிடுவதுதான். சிங்களர்களை திராவிடர்கள் எனக் கருதமுடியாது என பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கும் போது, இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி ஒரு தகவல் கிடைத்தது என தெரியவில்லை.

நாம் தமிழர் அறிக்கையின்படி, இந்து மத சம்பிரதாயங்களில் மூழ்கித்திழைத்த பார்ப்பனர் உள்ளிட்டவர்களைக் கூட அவர்கள் தமிழர்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் தமிழகத்தில் வாழும் மற்ற திராவிட மொழிகளை தாய்மொழியாகவும், தமிழை வழக்கு மொழியாகவும் கொண்ட மக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை படித்தபோது இவர்களின் மூடத்தனத்தை இன்னும் எவ்வளவு பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது என்றே தோன்றுகிறது.

இவர்கள் கூறும் பழமைவாத பாசிச தமிழ் தேசத்துக்கு, இப்போதிருக்கும் இந்திய தேசமே தேவலாம். தமிழ் தேசத்தின் உண்மையான நோக்கமே ஆரிய மூடப் பழக்க வழக்கங்களான சாதி பேதங்கள், பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றை  அழித்து, அனைவருக்கும் சரிசமமான வாழ்க்கையை அழிப்பதுதான், அதற்கு பெரியாரின் திராவிடர் கொள்கைகளைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்பதை இவர்கள் எல்லாம் எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை.

திராவிடமும் தமிழ் தேசியமும்

6 thoughts on “திராவிடமும் தமிழ் தேசியமும்

  1. Anbu சொல்கிறார்:

   பெரியாரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்களுக்கு, இது போன்ற “ஆய்வறிக்கைகள்” அவர்மீது தவறான எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற மறுப்பு பதிவுகளை பதிய வேண்டியிருக்கு.

 1. பிறர் விலக்க இயல்பென்பது தூய இனத் தேசியத்தில் உள்ளார்ந்து இருப்பதனை உணர்ந்ததால்தான், தேசியம் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டுமானால் சாதிய,மத நீக்கம் நிகழ வேண்டும் என்பதனை பெரியார் முன்வைக்கிறார். தேசியத்தின் உள்ளார்ந்த பிறர்விலக்க உணர்வு கொண்ட தேசியம் குறித்த எச்சரிக்கையை அம்பேத்கரியப் பார்வையில் நாம் காணமுடியும். தமிழ் மொழி குறித்த பெரியாரின் விமர்சனங்கள் அந்தத் திசை நோக்கியவைதான். சீமானது நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தமிழ்த் தேசியம் இந்த தமிழக இடதுசாரி, பெரியாரிய மரபை, அம்பேத்காரிய மரபை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது.

  1. Anbu சொல்கிறார்:

   முற்றிலும் உண்மை. பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கைகளுக்கெதிரான இவர்களது தேசியம், வேற்றினத்தவர்களுக்கு பாசிச கொள்கைகளாகத் தெரிவது மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் தேசிய கொள்ககளும் இதுபோன்றவை என்ற உணர்வை மிக எளிதாகப் பரப்ப எதிரிகளுக்கு வழிவகுக்கும்.

 2. dieta சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கா என்றும், தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை நடத்த இந்த அரசு தயாரா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s