நந்தலாலா – எளிமையின் அழகியல்

சலசலக்கும் நீரோடையின் பின்னணியுடன் அமைதியாக டைட்டில் போடுவதிலேயே புரியவைத்து விடுகிறார்கள் இது வழக்கமான படமல்ல என்று.

வேறுவேறு சூழ்நிலைகளால் அம்மாவை பிரிந்து வாழும் இருவர் தங்கள் தாயைத்தேடி ஒரே பாதையில் பயணிக்கும்  பயணமும், அவர்கள் இடையில் சந்திக்கும் மனிதர்களும் தான் நந்தலாலா. எனக்குத் தெரிந்து இதற்குமுன் ஒரு பயணப் படம் இவ்வளவு அழுத்தமான உணர்வினைப் பதிய வைத்ததாக நினைவில்லை.

தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் மிஷ்கின். பல இடங்களில் வசனமே இல்லாமல் வெறும் காட்சிப்படுத்துதலில் மட்டுமே அனைத்தையும் நமக்கு புரிய வைத்திருக்கிறார். இதுதான் தன்னுடைய மாஸ்டர் பீஸ் என அவர் பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருந்தது பொய்யில்லை என்பது படத்தைப் பார்க்கும்போது புரிகிறது.

கேமராமேன் மகேஷ் முத்துசாமி. இதுபோன்ற பயணப் படங்களுக்கு ஒளிப்பதிவு மிகமிக அவசியம். அந்த பசுமையான வயல் பரப்புகளிடையே நீண்டு செல்லும் சாலைகளில் பயணிக்கும் பாஸ்கர் (மிஷ்கின்), அகியுடன் (அஸ்வத்) சேர்த்து நம்மையும் பயணிக்க வைக்கிறது இவரது ஒளிப்பதிவு. பல இடங்களில் அவர்களது காலைமட்டுமே காட்டி காட்சியை புரியவைக்கும் உத்தியும், கேமராவை நிலையாக ஒரே இடத்தில் வைத்து எடுத்திருக்கும் காட்சிகளும் அருமை. சிறுவன் அகி அவன் அம்மா எங்கே எனக் கேட்கும்போது, மிஷ்கினின் கையின் நிழலை மட்டும் காட்டுவது அருமை.

படத்தின் நிஜ ஹீரோ இசைஞானி இளையராஜாதான். பெரும்பாலான காட்சிகள் வசனமில்லாமல் பயணிக்கும்போது, இவரின் இசை நம்மை படத்துடன் கட்டிப்போட்டு விடுகிறது. இவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்துக்கு படத்தின் இயல்பு மாறாமல் இவ்வளவு சிறப்பாக இசையமைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. பாடல்கள் சரியான இடத்தில் பின்னணி இசைக்குரிய நேர்த்தியுடனெ அமைந்திருப்பது இன்னொரு ப்ளஸ். அதுவும் ‘தாலாட்டுக் கேட்க நானும்’  பாடல் வருமிடமும், இளையராஜாவின் குரலும் நம்மை கலங்க வைக்கின்றன.‌

அது என்னவோ தெரியவில்லை. ஒருபடத்தின் கதை மனதைத் தொடும் வகையில் அமைந்துவிட்டால் படத்தில் பணியாற்றும் அனைவருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துவிடுகிறார்கள். அதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

படத்தில் நடித்திருக்கும் அனைவரது நடிப்புமே அருமை. சிறுவன் அகியாக வரும் அஸ்வத் மற்றும் மனனிலை பிறழ்ந்த பாஸ்கர் மணியாக வரும் மிஷ்கின். திரைக்கதை முழுக்க இவர்களின் கால்களில்தான் பயணிக்கிறது. இருவருமே அருமை. மிகச்சிறப்பான நடிப்பு. மிஷ்கின் தான் நடித்த கதாப்பாத்திரத்துக்கு பல நடிகர்களைக் கேட்டாராம். எதற்காக தனது நேரத்தை வீணடித்தார் எனத்தெரியவில்லை. இவரைவிட சிறப்பாக அந்தப் பாத்திரத்தை வேறு ஒருவரால் செய்ய முடிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

படத்தில் சின்னச்சின்னதாக நிறைய பாத்திரங்கள். அனைத்தும் 5 முதல் 15 நிமிடங்கள்தான். கண்தெரியாதப் பாட்டி, அகியிடம் அவ்வப்போது காசு பெறும் வேலைக்காரி, போலீஸ்காரர், இளநீர் கடைக்காரர், சைக்கிளில் இருந்து கீழே விழும் பள்ளி மாணவி,  தன்னுடைய நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் கால் ஊனமானவர், அதே நிலையில் இருக்கும் அந்த டாக்டர், மாட்டுவண்டியில் மிஷ்கினையும், சிறுவனையும் கூட்டி செல்பவர், லாரி டிரைவர், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் தடிமனான இருவர், சிறுவன் அகியின் அம்மா, விபச்சாரியாக வரும் ஸ்னிக்தா, அம்மா 40கிமீ வேகத்துக்கு மேல் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்கன்னு சொல்லிட்டு காரில் ஹனிமூன் செல்லும் தம்பதியர், அந்த காருக்கு பீரபிஷேகம் செய்யும் இளைஞர் பட்டாளம், ஸ்னிக்தாவை தூக்கிப்போக நினைக்கும் வயதான கிழவன், பாஸ்கர் மணியின் குடும்பம், லாரியில் கடந்துபோகும் நாசர் என ஏகப்பட்டக் கதாப்பாத்திரங்கள். இவ்வளவையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்றாலே தெரிந்திருக்கும் எந்த அளவுக்கு அந்த சிறிய நேரத்தில் ஒவ்வொரு கதாப் பாத்திரமும் நம் மனதை ஈர்க்கின்றன‌ என்று. ஸ்னிக்தா மட்டும் கொஞ்சம் அதிக நேரம் வருகிறார். நல்ல அளவான நடிப்பு.

தமிழ் சினிமாவில் தான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என மேடைக்கு மேடை பேசும் கமல்ஹாஸன் மிஷ்கின் போன்ற படைப்பாளிகளின் படங்களை நிராகரித்துவிட்டு ரவிக்குமாரின் கமர்ஷியல் படங்களில் நடிப்பது சற்றே வருத்தமாகத்தான் இருக்கிறது. கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய பெர் இருக்கிறாங்க சார். இதுபோன்ற படங்களில் நடிப்பதுதான் உண்மையிலேயே தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுபோகும் முயற்சி. கமல் போன்றவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

நம்ம ஆளுங்களுக்கு, காதல், ரவுடி இதைத்தவிற வேறு எதுவும் எடுக்கத் தெரியாது என்றக் குற்றச்சாட்டுக்கு பதிலாக வந்திருக்கிறது இந்தப் படம்.  படத்தில் குறையே இல்லையா? இவ்வளவு நிறைகள் இருக்கும்போது, ஒரு சில சிறுகுறைகளை கண்டுக்காமல் விட்டுவிடலாம்.

ஆனால் படத்தின் விளம்பரம் போதுமான அளவுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஓசூரில் தியேட்டருக்கு வழியை சொன்னவர், என்னப் படம் எனக் கேட்டபோது, நாங்கள் ‘நந்தலாலா’ என சொன்னோம். உடனே அவர் ‘ஓ.. தெலுங்குப்படமா?’ எனக்கேட்டுவிட்டு போய்விட்டார். இது போன்ற நல்லப் படங்களுக்கு விமர்சனங்கள் மட்டுமல்ல, விளம்பரங்களும் தேவை.

Pics: indiaglitz.com

Advertisements
நந்தலாலா – எளிமையின் அழகியல்

8 thoughts on “நந்தலாலா – எளிமையின் அழகியல்

  1. நந்தலாலா – எளிமையின் அழகியல்…

    சலசலக்கும் நீரோடையின் பின்னணியுடன் அமைதியாக டைட்டில் போடுவதிலேயே புரியவைத்து விடுகிறார்கள் இது வழக்கமான படமல்ல என்று. வேறுவேறு சூழ்நிலைகளால் அம்மாவை பிரிந்து வாழும் இருவர் தங்கள் தாயைத்தேடி ஒரே பாதையில் பயணிக்கும் பயணமும், அவர்கள் இடையில் சந்திக்கும் ம…

  2. உண்மைதான். சிலர் எப்பொழுதும் பேசிப் பேசிப் பொழுது போக்குபவர்கள். கமலஹாசன் நல்ல யதார்த்தமான இயக்குனர்களிடம் அடங்கி நடித்தால் நல்ல படங்களைத் தர இயலும். ஆனால் அதற்கு அவரின் தான் எனும் மனம் இடங்கொடுக்க இயலாது என்பதுதான் நிதர்சனம்.

    1. எனக்கும் இந்த விஷயத்தில் கமல் மேல் கொஞ்சம் வருத்தம் உண்டு. 50 வருடங்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் இவர், வித்தியாசமாக நடித்தப் படங்கள் மிகமிகக் குறைவுதான். 😐

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s