கொலைக்களம்

நான் இதுவரை செய்தவைகளிலேயே முக்கியமான வேலை. இந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் நான் கேட்டதை செய்துகொடுக்கிறேன்னு அண்ணன் சொல்லிட்டாரு. அதனால் மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் வச்சிக்கிட்டிருக்கிறேன். முக்கால் பகுதி ஏற்கனவே முடிஞ்சுது. இதையும் வெற்றிகரமாக முடிச்சுட்டால் அண்ணனோட அன்புக்கு பாத்திரமானவன் ஆயிடுவேன்.

இந்த வேலைய மொதல்ல சொன்னப்ப எப்படியும் அண்ணன் கூட இருக்கிற ஆளுங்களுக்கு எடுபிடியாத்தான் இருக்க சொல்லுவாருன்னு நினைச்சேன். ஆனா, ‘ஆதி, இந்த வேலையை நீதான் செய்யப் போற, எவன்லாம் தேவையோ கூப்பிட்டுக்கோ’ன்னு சொன்னப்போ எனக்கே ஆச்சரியம் தாங்கல.

என்ன வேலைன்னுதான கேக்கறீங்க.. பெருசா ஒண்ணுமில்ல. அண்ணனோட வழிக்கு வராம தனியா ராஜ்ஜியம் நடத்திக்கிட்டுருக்கிற ஒரு  மூணு பேரைப் போடணும். மூணும் பெரிய கை. எல்லாருக்கும் அந்த ஏரியா அரசியல்வாதிகளோட சப்போர்ட் இருக்கு. இவங்களுக்கும் அண்ணனுக்கும் கொஞ்ச நாளா ஒத்துவரல. இப்ப ஆட்சியில இருக்கிறவங்ககிட்ட அண்ணனுக்கு பெருசா சப்போர்ட் இல்லாததால இவனுங்களுக்கும் பயம் போயிடிச்சு. இப்படியே விட்டா சரியா வராதுன்னுதான் இவங்களை போடறதுன்னு முடிவு எடுத்தாரு அண்ணன்.

நான் ஆதி. எங்கப்பா வாத்தியாரா இருந்தாரு. இங்க இல்லை. சேலத்துல. நான் வீட்டுக்கு ஒரே பையன். நல்லா படிச்சு எப்படியாவது ஒரு அரசாங்க வேலையில சேர்ந்திடணுங்கிறதுதான் இலட்சியமா இருந்துச்சு. நான் பன்னெண்டாவது படிச்சுட்டு இருக்கிறப்ப சொத்து தகராறுல என் அப்பாவோட தம்பியே, அவரையும், அம்மாவையும் கொன்னுட்டான். தலை சிதைஞ்சு இரத்த வெள்ளமாக் கிடந்தவங்களைப் பாத்ததும் வந்த ஆத்திரத்தில நேரா அவங்க வீட்டுக்குப் போயி எல்லாரையும் வெட்டி சாச்சேன். அவங்க 10 வயசு பையனைக் கூட விடல.

ஆயுள் தண்டனையில ஜெயிலுக்கு போயி, 10 வருஷத்தில் வெளிய வந்தேன். ஜெயில்ல இருந்தப்ப பழக்கமானவங்கதான், வெளீய வந்தவுடனே அண்ணங்கிட்ட சேர்த்திவிட்டாங்க. என்ன பண்ணப்போறோம்ன்னே தெரியாம வெளிய வந்தவனுக்கு, நல்ல சோறு போட்டு, செலவுக்கு பணமும் கொடுத்து பாத்துக்கிட்ட இவருக்குத்தான் இனி வாழ்நாள் முழுக்க வேலை செய்யறதுன்னு முடிவாச்சு. அப்பப்ப சும்மா போயி மிரட்டிட்டு வரதுல ஆரம்பிச்சு, கை, கால் எடுக்கிறதுன்னு போயி, சில கொலைங்களையும் சாதாரணமா பண்ணிட்டு வந்தப்பதான் என் மேல அண்ணனுக்கு நம்பிக்கை வந்தது.

‘ஆதி மாதிரி தொழில சுத்தமா செய்யறவன் நாலு பேர் இருந்தாப் போதுண்டா, நாமதான் ராஜா’ன்னு அண்ணன் என்னைப் பத்தி பெருமையா பேசிட்டு இருந்ததா கந்தசாமி சொன்னான். அதனாலதான் இந்த வேலைய எனக்கு தந்திருக்காருன்னு அவன் சொன்னப்ப ரொம்பப் பெருமையா இருந்துச்சு.

மொத ரெண்டு கொலையும் சப்பையா முடிஞ்சுது. ஒருத்தனை கோயில் கூட்டத்தில, கூட்டமோட கூட்டமா போயி கழுத்தில கத்தியை வச்சிட்டு போயிட்டேன். அவன யாரோ அறுத்துட்டாங்கன்னு தெரிஞ்சுப் கூட்டம் பதட்டமானப்போ நான், காரில போயிட்டு இருந்தேன்.

ரெண்டாவது ஆளக் கொல்லறது இன்னமும் ஈசியா இருந்துச்சு. தன் கழுத்துக்கு மேலக் கத்தி தொங்கறது தெரியாம ஜாலியா இருக்க வைப்பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். நான் ஜன்னல் வழியா உள்ள வந்ததுகூட தெரியாம, அவகிட்ட‌ மயங்கிகிடந்தவனை முடிச்சுட்டு, அவள மிரட்டி கொஞ்ச நேரம் ஜாலியா இருந்துட்டு, அவளையும் முடிச்சுட்டு வந்துட்டேன்.

ஒரு வாரத்துக்குள்ள மூணுபேர் செத்துப்போனதால, போலீஸ் அண்ணனையும், அவரோட முக்கியமான ஆளுங்களையும் கவனிக்கத் தொடங்கினாங்க. என்னைப் பெருசா யாரும் கண்டுக்கல. கொஞ்சம் தணியற வரைக்கும் வீட்டுக்கு வரவேணாம்ன்னு சொல்லிட்டாரு. இப்பொதான் எனக்கு புரிஞ்சுது ‘ஏன் பெரிய ஆளுங்களையெல்லாம் விட்டுட்டு என்னை செலக்ட் செஞ்சாருன்னுட்டு’. அண்ணனோட அறிவை நெனைச்சு பெருமைப்பட்டேன்.

ஆனால் ஏற்கனவே ரெண்டு பேர் செத்துப் போயிருந்ததால இவன் ரொம்ப பாதுகாப்பா இருந்தான். ரெண்டு, மூணுதடவை போட்ட ப்ளானெல்லாம் சொதப்பினதால அண்ணன் வேறக் கோவத்துல இருந்தாரு. இந்த தடவை எப்படியாவது போட்டுடணும்ன்னு முடிவு பண்ணிட்டு போயிட்டு இருந்தேன். கூட்டமாப் போனால் உஷாராயிடுவான்னுட்டு, யாரையும் உதவிக்கு வச்சுக்கல‌.

ப்ளான் இதுதான். ஏற்கனவே போடப்போனப்ப குறுக்க வந்து இவனக் காப்பாத்தினவனைப் பார்க்க வர்றான். ஆஸ்பத்திரியிலயே வச்சு போடறதுன்னு முடிவு பண்ணி, எல்லாத்தையும் அண்ணனுக்கும் சொல்லியாச்சு. இது தப்பாப் போகாதுன்னு அண்ணனுக்கும் நம்பிக்கை இருந்துது.

நல்லவேளையா போனதடவை முகத்த காண்பிக்காதது நல்லதாப் போச்சு. அவங்க ஆளுங்க‌ யாருக்கும் என்னை அடையாளம் தெரியல. நேத்தே வந்து எங்க நின்னு எப்படிப் பண்ணறதுன்னு எல்லாத்தையும் யோசிச்சு வச்சாச்சு. பொது இடத்தில அவனுங்க ஆளுங்க இவ்வளவு பேரு இருக்கிறப்ப கொஞ்சம் ரிஸ்க்தான். இருந்தாலும் அண்ணனுக்காக இதைப் பண்றதுல தப்பு இல்லை.

இந்நேரம் கந்தசாமி வெளிய வந்து நின்னிருப்பான். எப்படியாவது வடக்கு கேட்டைத் தாண்டிட்டாப் போதும், ரெடியா இருக்கிற காரில ஏறி பறந்துட வேண்டியதுதான்.

ப்ளான் படி, சட்டைக்குள்ள மறைச்சு வச்சிருந்த அரிவாளோட, அவன் வரப் பாதையில இருந்த சேரில் உக்கார்ந்துட்டு இருக்கேன். எல்லாரையும் தள்ளிவிட்டுட்டு அவன் ஆளுங்க வர்றாங்க. ஓரமா உக்காந்துட்டு இருந்தாப் போட முடியாது. எந்திருச்சு நடக்கிறேன். இதுதான் சரியான சந்தர்ப்பம், அரிவாளை எடுத்து ஒரே வீச்சு. தலை தனியாப் போய் விழுது. என்னை நினைச்சா எனக்கே பெருமையா இருக்கு.

சே, இதைப்ப் பார்க்க அண்ணன் இங்க இல்லாமப் போயிட்டாரே.. பரவாயில்லை, நைட்டு டிவியில பாத்து சந்தோசப்படுவாரு. நான் வெளிய வந்துட்டேன். அவங்க ஆளுங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சு துர‌த்த ஆரம்பிக்கற‌துக்குள்ள நான் பத்தடி தூரம் ஓடியிருந்தேன். எதிரில வந்த எத்தனை பேரை வெட்டினேன்னு தெரியாது. யாரை வெட்டினேன்னும் தெரியாது. என்னோட நோக்கமெல்லாம் வெளிய போயி வண்டியில ஏறிடணும்.

வெளிய வந்துட்டேன். அண்ணன் வண்டி எதுவுமே இல்லையே. இப்ப என்னப் பண்ண. கழுத்தில பயங்கரமா ஒரு வலி. ரவியோட ஆளுங்க‌ வந்துட்டாங்க. ஏன் கந்தசாமி வரல. சரியான வெட்டுன்னு நினைக்கிறேன். ஏற்கனவே கையெல்லாம் இரத்தமா இருந்ததால என் இரத்தம் எதுன்னு தெரியல. நெனைவு மங்குது. எப்படியோ அண்ணன் சொன்ன வேலைய முடிச்சுட்டேன், அந்த சந்தோசம் போதும். இங்க வராததுன்னால கந்தசாமியை எப்படியும் அண்ணன் முடிச்சுடுவாரு. நாய், பயந்துட்டு எங்கயாவது ஒழிஞ்சுக்கிச்சுன்னு நெனைக்கிறேன். ஆஆ, ரெண்டாவது வெட்டு வயித்துல. பொட்டப்பசங்களா, ஒரே வெட்டுல ஆளை முடிக்க முடியல, நீங்க எல்லாம் என்னடா ரௌடிங்க. ஆஆ..

அங்கே ‘அண்ணன்’ வீட்டில். கந்தசாமி சொல்லிக் கொண்டிருந்தான், ‘அண்ணே ஆதிய முடிச்சுட்டானுங்க. ரொம்ப முன்னாடியெ வெளிய வந்துட்டானாம், நாமப் போயிருந்தா ஈசியாக் காப்பத்தியிருக்கலாம்’.

‘டேய், ஒருத்தனுக்காகவெல்லாம் அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாதுடா. இதுல எப்படியும் செய்யறவன் உயிர் போகும்ன்னு சொல்லித்தான உங்கள எல்லாம் விட்டுட்டு அவன பண்ண சொன்னேன். நாம போயிருந்தா தேவையில்லாம போலிசுக்கு தண்டம் அழுவனும். பத்து பேரை ஆஸ்பத்திரியில போடு இருக்காண்டா. ஒண்ணும் பண்ண முடியாது, ஃப்ரீயா வுடு.’

Advertisements
கொலைக்களம்

12 thoughts on “கொலைக்களம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s