எப்படி இன்னொரு மொழியை கத்துக்கிறது..?

நம் தமிழ் மக்களைப் பற்றி எப்பவுமே ஒரு பொதுவான குறையை மற்ற மொழிக்காரங்க சொல்லுவதுண்டு.  மொழி விஷயத்தில் நாம் வளைந்து கொடுப்பதில்லை என்று.

இதையே நம்ம ஆளுங்க காமெடியா ‘நாம ஆஃப்ரிக்கா போனாலும் கரடிக்கு தமிழ் கத்துக் கொடுத்து பேசுவோமே தவிர, அந்த மொழியை நாம கத்துக்க மாட்டோம்’ ‍ன்னு சொல்லுவாங்க.

அது என்னவோ தெரியல நம்ம ஆளுங்க ஆங்கிலம் படிக்கும் அளவுக்கு மத்த‌ இந்திய மொழிகள் எதையும் கத்துக்கரதில்ல. நானும் சில நாள் முயற்சிப் பண்ணிப் பார்த்திருக்கேன். சில சமயம் இந்தி கத்துக்கவும், பல சமயம் கன்னடம் கத்துக்கவும். ம்ஹூம்.. வர மாட்டேங்குது. சொல்லித்தரப்போ இவ்வள‌வுதானேன்னு தோணும். ஆனால் பேச ஆரம்பிச்சா பாதி வார்த்தை தமிழும், மீதி ஆங்கிலமும். கேக்கரவங்க‌ எல்லாம் ‘இதில கன்னடமே வரலயே’ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க.

நானாவது பரவாயில்ல. என் நண்பன் ஒருவன் கொஞ்ச நாள் ஹைதராபாத்தில் இருந்துவிட்டு வந்தான். அங்க இருந்த கொஞ்ச நாளில் ஓரளவு தெலுங்கு கத்துக்கிட்டேன்னு சொன்னான். நாங்க எல்லாம் ஆச்சர்யமா பார்த்தோம். என்னடா இது மூணு வருஷமா பெங்களூரில் இருக்கோம் இன்னும் கன்னடம் கத்துக்க முடியல. இவன் ஆறு மாசத்தில தெலுங்கு கத்துக்கிட்டானேன்னு. ஒரு நாள் வாடகைக்கு வீடு பாக்கப் போனப்ப வீட்டு ஓனர் தெலுங்கு. நம்மகிட்டதான் தெலுங்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கானேன்னு இவன பேசச் சொன்னோம். இவன் பேசுனது ஒண்ணுமே அவருக்குப் புரியல.

அப்போது பக்கத்தில் தமிழ் தெரிந்த தெலுங்குக்காரர் ஒருத்தர் நாங்கள் எங்களுக்குள் தமிழில் பேசுவதைக் கேட்டு ‘தமிழா தம்பி நீங்க?’ன்னு கேட்டு நாங்கள் சொன்னதை தெலுங்கில் மொழிபெயர்த்து வீட்டு ஓனரிடம் சொன்னார். அப்புறமா ஒரு கேள்வி கேட்டார் பாருங்க. என் நண்பன் தெலுங்கு பேசறத அன்னியோட விட்டுட்டான். அவர் கேட்டக் கேள்வி ‘இந்தத் தம்பி தமிழ் இல்லீங்களா? ஏதோ வித்தியாசமான மொழி பேசுனாரே?’

இந்தத் தென்னிந்திய மொழிகளாவது பரவாயில்லை. தமிழ் மாதிரியே இருக்கறதுனால கொஞ்ச நாள் கவனிச்சா புரியவாவது செய்யுது. ஆனால் இந்த இந்தி, இந்தின்னு ஒரு மொழி இருக்குப் பாருங்க. CBSE ல படிச்ச நண்பன் ஒருவன் ஒரு ரெண்டு நாள் எனக்கு இந்திக் கத்துக் கொடுக்கிரேன்னு உக்கார்ந்தவன் அதுக்கப்புறம் என் ரூமுக்கு வர்றதையே நிறுத்திட்டான். ஏன்னு கேட்டால் அவனுக்கு இந்தி மறந்துடுமோன்னு பயம் வந்திடுச்சாம்.

சரி நண்பர்கள்தான் கைவிட்டுட்டாங்க, ரெபிடெக்ஸ் இந்திக் கத்துக்கற புத்தகம் வாங்கிக் கத்துக்கலாம்ன்னு அந்த புத்தகத்தை லேண்ட்மார்க்‍ இல் தேடிக் கண்டுபிடித்து வாங்கி வந்தேன். எடுத்தவுடனே எழுத்துப் பயிற்சி இருந்தது. நம்ம பேசுனா போதும்ன்னு சொல்லிட்டு அதெல்லாம் தான்டி உள்ள போனால் விளக்கம் எல்லாம் இந்திலயே கொடுத்திருந்தாங்க. ‘அட..  நாம இந்தி எழுத்துக்களில் பயிற்சி பெறணும்ன்னு தமிழ் விளக்கத்தையும் இந்தி எழுத்துகளில் கொடுத்து இருக்காங்க’ன்னு நானா முடிவு பண்ணி மறுபடியும் முதல் பக்கத்தில் எழுத்துங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

அப்ப பார்த்து உள்ள வந்த என் கன்னட நண்பன் ஒருவன் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்துட்டு ‘இந்த புக் உனக்கு எதுக்கு?’ எனக் கேட்டான். நானும் ‘எனக்குத்தான் இந்தி தெரியாதே அதான் கத்துக்கலான்னுட்டு வாங்கிட்டு வந்த்தேன்’ன்னு சொன்னேன். அவன் அது என்னமோ உலகமகா ஜோக் மாதிரி சிரிச்சான். எதுக்கு கிறுக்குப்பய‌ மாதிரி சிரிக்கிறான்னு எனக்கு ஒண்ணும் புரியல.

ஒருவழியா சிரிச்சு முடிச்சிட்டு ‘இது இந்தி வ்ழியில் தமிழ் கத்துக்கிற புத்தகம். இத வச்சி நீ ஒண்ணும் பண்ண முடியாது, நானாவது தமிழ் கத்துக்கறேன்’னு சொல்லிட்டு தூக்கிட்டு போயிட்டான். இதுக்கப்புறம் எங்க இந்தி கத்துக்கிறது?

மற்ற மொழி கத்துக்கிற விஷயத்தில் பெரிய ஆளுங்க மலையாளிகள்தான். பெங்களூரில் எந்த மலையாளியைக் கேட்டாலும் குறைஞ்சது நாலு மொழி தெரிஞ்சு வச்சிருக்காங்க. ‘எப்படிய்யா இத்தனை மொழி கத்துக்கிட்டீங்க?’ எனக் கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் ‘பேச பேச தானா மொழி பழக்கமாயிடும்’  அப்படீங்கறதுதான். எங்க நம்ம பேசுனாதான் அது அந்த மொழியே இல்லைன்னு சொல்லிடறாங்களே.

அப்பவும் மனம் தளராம‌, ஒருநாள் ஆட்டோக்காரரிடம் ‘இங்க இருந்து ஜெயா நகர் போயிட்டு வரணும். எவ்வளவு ஆகும்’ன்னு தெளிவான கன்னடத்தில கேட்டேன். ஆட்டோ டிரைவரோ ‘அம்பது ரூபாய் ஆகும் சார். அந்த ஏரியால ட்ராஃபிக் அதிகம். சுத்திசுத்திப் போகணும்’ன்னு நல்லா தமிழ்ல பேச ஆரம்பித்துவிட்டான். இதுக்கப்புறம் எங்க நம்ம பேசிப்பேசி கன்னடம் கத்துக்க?

இதிலெல்லாம் வெறுத்துப் போய் எனக்கு தெரிஞ்ச ஒரு மொழியே போதும். அப்படி எங்கையாவது போனால் ஆங்கிலத்தை வச்சு சமாளிச்சுக்க வேண்டியதுதான். அதுவும் புரியலன்னா, சைகை காமிச்சு கேக்க வேண்டியதுதாங்கிற முடிவுக்கு வந்திட்டேன்.

Advertisements
எப்படி இன்னொரு மொழியை கத்துக்கிறது..?

9 thoughts on “எப்படி இன்னொரு மொழியை கத்துக்கிறது..?

 1. மொழி கத்துக்க ஒரே வழி…..
  நமக்கு தெரிஞ்ச மொழி பேசறவங்கள விட்டு தனியா போய் இருக்குறது தான்.
  கொஞ்சம் கஷ்டமானது அது.

  சுவாரசியாமான வழின்னா….
  அந்த மொழில “ஆள்” செட் பண்ணிக்கிறது தான் (செட் ன்னா extra channel இல்ல‌)

  1. //அந்த மொழில “ஆள்” செட் பண்ணிக்கிறது தான் //

   நல்ல ஐடியாதான் சௌந்தர்.. ஆனால் தமிழ் தெரிஞ்ச பொண்ணுங்களே மதிக்க மாட்டேங்கராங்க.. இதில வேற மொழிப் பொண்ணா, வாய்ப்பே இல்லை 🙂 (எனக்கு சொன்னேங்க!!)..

  1. நான் இந்திப்படம் பார்த்ததெல்லாம் DVD-ல சப்டைட்டிலுடன்தான். மத்தவங்கக் கிட்ட அந்தப் படத்தைப் பற்றிப் பேசும்போது கூட வசனங்களை இங்கிலிஷில் சொல்லியே பழகிடுச்சு.. :‍)

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துளசி.

 2. kanagu சொல்கிறார்:

  அது தான் நம்ம பழக்கம் 🙂 எங்க போனாலும் தமிழ மட்டும் பரப்பிட்டு வந்துடுவோம் 🙂

  /*இது இந்தி வ்ழியில் தமிழ் கத்துக்கிற புத்தகம். இத வச்சி நீ ஒண்ணும் பண்ண முடியாது, நானாவது தமிழ் கத்துக்கறேன்*/

  இதுல இருந்தே தெரிஞ்சுக்கலாம் நமக்கு இருக்குற ராசிய… 🙂 🙂

 3. //நம் தமிழ் மக்களைப் பற்றி எப்பவுமே ஒரு பொதுவான குறையை மற்ற மொழிக்காரங்க சொல்லுவதுண்டு. மொழி விஷயத்தில் நாம் வளைந்து கொடுப்பதில்லை என்று.

  🙂

  எனக்கும் இப்படி நிறைய சோகக்கதை இருக்கு. 😦

  1. உங்க‌ளுக்கு மட்டும் இல்லை.. நிறைய தமிழ் ஆளுங்களுக்கு இதே பிரச்சினைதான்.. :).. நாம வெளிய சொல்லிடறோம்.. நிறைய பேர் சொல்லாம சுத்திக்கிட்டு இருக்காங்க.. :)..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s