கன்னடத்துப் பைங்கிளி

அதிகாலை 7 மணிக்கு  அடிச்ச அலாரத்தை அணைச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கப் போக மறுபடியும் அவள் முகம் தோன்றி மறைந்தது. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நண்பனை எழுப்பி ‘மச்சி, இது உண்மையிலேயே லவ் தாண்டா. காலங்கார்த்தால அவள் முகம் எனக்கு நினைவுக்கு வருதுன்னா கண்டிப்பா இது ட்ரூ லவ் தான?’ எனக் கேட்ட என்னை கொடூரமாக முறைச்சிட்டு திரும்பி படுத்துக்கொண்டான் அவன். ‘காலைல இருந்து ஒரு மூணுதடவை எழுப்பிக் கேட்டதுக்கே இவ்வளவுக் கோபப்படறான்!!’ என ஆச்சர்யப்பட்டவாரே எழுந்து குளிக்க சென்றேன்.  

7 மணிய அதிகாலைன்னு சொன்னப்பவே தெரிஞ்சிருக்கும் , நான் சாப்ட்வேர் கம்பனில  வேலை செய்யற ஆளுன்னு. என் கனவில வந்தப் பொண்ணும் என் ஆபீஸ்ல தான் வேலை செய்யறா. ஒரு மாசத்துக்கு முன்னதான் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.  முதல் தடவைப் பார்த்தப்பவே என் மனசில ஏற்கனவே இருந்த இன்னொரு பெண்ணை தூக்கி எரிந்து அந்த இடத்தில் இவள் அமர்ந்தாள். அந்த பெண்ணை நினைச்சு பாவமா இருந்தாலும், அவளும்  இன்னொருத்திய தூக்கி எறிஞ்சிட்டு மனசில இடம் பிடிச்சவதானேன்னு மனசத் தேத்திக்கிட்டேன்.

இதப் படிச்ச உடனே ஏதோ மத்தப் பொண்ணுங்களை நான் ஏமாத்திட்டதா நினைச்சுடாதீங்க.  நான் இந்தக் கதையின் ஹீரோ, வில்லன் இல்லை.  நான் சொன்ன பொண்ணுங்க எல்லாம் என் மனசில மட்டும்தான் இருந்தாங்க. அவங்க என் மனசில இருந்தாங்கன்னு கூட அவங்களுக்கு தெரியாது. :-(.

இந்தப் பொண்ணும் அப்படித்தான் போயிடும்ன்னு நெனைச்சேன். ஆனால் நானே எதிர்பாராமல் ஒரு நாள் எங்களுக்குள் அறிமுகம் நடந்தது. ஒரு நாள் வெள்ளிக் கிழமை சாயங்காலம், ‘ஐயா ரெண்டு நாள் லீவு’ன்னு ஸ்கூல் பையன் கணக்கா கிளம்பிக்கிட்டு இருந்த என்னை வரச் சொல்லி என் மேனேஜர் கூப்பிடும்போதே நெனைச்சேன். ‘தொலஞ்சுதுடா இந்த வார லீவுன்னு’. அதே போல உள்ள போனதில இருந்து மத்தவங்க எல்லாம் ஏன் சனிக்கிழமை வரமுடியாதுன்னு காரணப் பட்டியல் வாசிச்சதோட எனக்கும் கொஞ்சம் ஐஸ் வைக்க, வேறு வழியில்லாமல் நாளைக்கு  வந்து  தொலைக்கிறேன் என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

சனிக்கிழமை ஏனோ தானோ எனக் கிளம்பி வந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. (நீங்க நேனைச்சதே தாங்கோ!!) அந்தப் பெண்ணும் அன்னைக்கு ஆபீஸ் வந்திருந்தாள். பக்கத்து Cubicle-இல் நம்மவள் இருக்கிறாள் என்ற நினைப்பே நாளை உற்சாகமாகக்  கொண்டு செல்ல, முதல் முறையா என் மேனேஜர்-க்கு நன்றி சொன்னேன்.

மதியம் 1 மணிக்கு பக்கம், ‘ஹாய்’ அப்படின்னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தால் நம்பவே முடியல. என்னவள் அவளாகவே வந்து பேசுகிறாள். என்ன சொல்லறதுன்னே தெரியல. ‘ஹ.. ஹாய்’ ன்னு தட்டு தடுமாறி சொன்னதப் பார்த்து சிரிச்ச அவள்,

‘ஐம் ஜென்னி… ஜெனிபர்…  யுவர்  நேம்?’ 

‘ஐம்  ஆதி… ஆதித்தன்’

‘நம்ம  ரெண்டுபேர்தான்  இந்த ப்ளோரில்  இருக்கோம். தனியா சாப்பிட்டா போர் அடிக்கும். வுட்  யு  ஜாயின்  மீ   பார்  லஞ்ச்?’ எனக் கேட்க உடனடியாக செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு கிளம்பி விட்டேன்.   

ஒன்றாக சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலும் அதற்க்கு பிறகு டீ சாப்பிட என செலவு செய்த அரை மணி நேரத்திலும் ஓரளவுக்கு அவளைப் பற்றி தெரிந்தது. அவள் ஒரு கன்னடப் பெண். பிறந்தது, படித்தது அனைத்தும் பெங்களூரில்தான். எதிர்காலத்திலும்   இங்கயே  செட்டில் ஆவதுதான் அவள் ஆசை என்பதும் தெரிந்தது.  நானும் என் பங்குக்கு பிறந்தது வளர்ந்தது  அனைத்தையும் சொல்லிவிட்டு, ‘எனக்கு பெங்களூர் ரொம்பப் பிடிச்சிருக்கு’ எனப் பச்சைப் பொய்யை சொன்னேன், தினமும் இந்த ஊரை கரித்துக் கொட்டியதெல்லாம் மறந்திருந்தது அப்போது. மேலும் பெங்களூரின் நல்ல விஷயங்கள் அனைத்தும் மனதில் தோன்ற, பெங்களூர் நல்ல ஊர்தான் என என்னை நானே தேத்திக் கொண்டேன்.  

அன்று முதல்தான், கனவில் வர ஆரம்பித்தாள் அவள்.  திங்களன்று அதிகாலை ஊரிலிருந்து திரும்பிய நண்பனிடம்தான் இதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் பொறுமை இழக்க   ஆரம்பித்துவிட்டதால்  வேறு வழியில்லாமல் எழுந்து குளிக்க சென்றேன். என் தேவதையைப் பார்க்கும் ஆவலுடன்  என்றும்  இல்லாத  உற்சாகத்துடன்  ஆபீஸ்-க்கு  கிளம்பினேன்.

அலுவலகம் சென்றவுடன் என் கண்ணில்  முதலில்  பட்டது அவள்தான். நீலக் கலர் சல்வாரில் தேவதையாக  அவள். என்னைப் பார்த்தவுடன் சிரித்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு இன்றும் மதிய உணவு  ஒன்றாக  செல்லலாம்  என  முடிவெடுத்து  விட்டு  என்  இருக்கையில்  அமர்ந்தேன்.  ஒரு  வழியாக  நண்பர்களிடம்  டீம்  லஞ்ச்  என  ஒரு  பொய்யை  சொல்லிவிட்டு  அவளுடன்  சென்றேன்.

நான்  எப்போதுமே  சாப்பிடாத,  கன்னட  சாப்பாடு  கிடைக்கும்  இடத்திற்கு  செல்லலாம் என அவள் கூறிய போது மறுக்கவா முடியும். அங்கே சென்று சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஏதோ சில பேர் நம்மையே பார்ப்பது போல் தோன்ற, திரும்பி பார்த்தால், என் நண்பர்கள்.  அவர்கள் பார்த்த பார்வையிலேயே  தெரிந்தது  இன்னிக்கு நான் செத்தேன் என்று.  சாப்பாடு முடிந்து உள்ள போனவுடனே நண்பன் அழைத்தான். அவனிடம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனோ ‘எவ்வளோ நாள் அங்க சாப்பிடலாம்ன்னு கூப்பிட்டிருப்போம்? ஒரு நாள் வந்திருப்பியாடா? அங்க சாப்பிட்டா வாந்தி வரும்ன்னு   சொன்ன? இப்போ மட்டும் என்ன ஆச்சு?’ எனக் கேட்க, வழிவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  

ஒரு வழியாக நண்பர்களுக்கு விஷயம் தெரிய சமாதானம் ஆனார்கள். கன்னட உணவு பிடிக்க ஆரம்பித்தது. நேரில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் தொலைப்பேசியில் பேச ஆரம்பித்தோம். மாசம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ்  பண்ணிட்டு இருந்த நான் 1000 ரூபாய்க்கு செய்ய ஆரம்பித்தேன். அதற்க்கும் மேல செல்ல தாங்காது என்று போஸ்ட்பெய்ட்  வாங்கி CUG  போட்டு பேச ஆரம்பித்தேன்.

50 ரூபாய்க்கு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நான் PVR, Inox என மல்டிபிளக்ஸ்களில் ஆன்லைனில் புக் செய்து படத்திற்கு செல்ல ஆரம்பித்தேன்.  10 ருபாய் கூல்ட்ரிங்க்ஸ் 15 ருபாய் என்பதால் சாதாரண தியேட்டர்களிலேயே எதுவும் வாங்கி சாப்பிடாத நான் 100 ருபாய் கொடுத்து பாப்கார்ன் வாங்க ஆரம்பித்தேன். அம்மா எவ்வளவு திட்டினாலும் புத்தாண்டு அன்று கூட கோவிலுக்கு செல்லாத நான் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில்  சர்ச்-க்கு சென்று ஆமென்  சொல்ல  ஆரம்பித்தேன். நாங்கள்  காதலை  சொல்லவில்லையே  தவிர  அதைத்தான்  செய்து  கொண்டிருந்தோம். இரண்டு  பேருக்கும்  இது  தெரிந்தே  இருந்தது.

இதெல்லாம்  எந்தப்  பிரச்சினையும்  இல்லாம  நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. ஜென்னிக்கு  அவங்க  வீட்டில  வரன்  தேட  ஆரம்பிக்கிற  வரைக்கும்.  அவளுக்கு  வரன்  தேட  ஆரம்பிச்சதும்   எங்களுடைய  காதலை  வீட்டில்  சொல்லிவிட்டாள். அவள்  தந்த  என்னைப்  பார்க்க  வேண்டும்  என  சொல்ல  எனக்கு  போன்  செய்த  அவள் ‘ஆதி, எங்க  அப்பா  உன்னை  பார்க்கணும்ன்னு  சொல்லறார்’ எனச் சொன்ன  போது  எனக்கு  ஒன்றும்  புரியவில்லை. பிறகுதான் ‘நம்ம  காதலைப்  பற்றி  பேசணுமாம்’ எனக் கூறினாள்.

அவர்கள்  வரவேற்ற  விதத்திலேயே  தெரிந்தது  பெரிதும்  பிரச்சினை  எதுவும்  இல்லை  என்று. உள்ளே சென்றதும்  அவள்  தந்தை ‘பண்ணி  பண்ணி’  என  வரவேற்க, நான்  ஏதோ  திட்டுகிறார்  என நினைத்தேன். நல்ல  வேளையாக  அங்கே  ஜென்னி  இருந்ததால்  இந்த  பண்ணி  பிரச்சினையில்  இருந்து தப்பிக்க முடிந்தது. இல்லையென்றால்  அங்கேயே  சண்டை  போட்டுட்டு  வெளியே  வந்திருப்பேன்.

கன்னடத்தில  ‘நனகே கன்னடா கொத்தில்லா’  தவிர  வேற  எதையும்  தெரிஞ்சுக்காதது  எவ்வளவு  தவறு என அங்கே புரிந்தது. அவர் தொடர்ந்து கன்னடத்தில் பேசிக்கொண்டே போக,  சிரித்துக்கொண்டும்  ‘ம்ம்’  சொல்லிக்கொண்டும்  சமாளித்தபடி,   நான் பரிதாபமாக  ஜென்னியை  பார்த்தேன். என்  நிலையைப்  புரிந்துகொண்ட  அவள் தன்   தந்தையிடம் ‘டாடி,  அவரிகே  கன்னடா  பரத்தில்லா’ எனச் சொன்னாள்.  என்னைக் காப்பாற்ற சொன்ன இந்த வார்த்தையே மிகப் பெரிய சிக்கலில் தள்ளிவிட்டது. அவர் தந்தை உடனடியாக, எப்போது நான் கன்னடம் கற்றுக் கொள்கிறேனோ அப்போதுதான் எங்கள் காதலை ஏற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டார். ‘உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு’ எனக் கூறியபடி வெளியே வந்தேன்.

எங்கள் வீட்டில் பேசச் சொல்லி ஜென்னி சொன்னதால் என் தந்தையிடம் சென்று எங்கள் காதலைப் பற்றி சொன்னேன். பொறுமையாகக் கேட்ட அவர் ‘அந்தப் பொண்ணு வீட்டில என்ன சொன்னங்க?’ எனக் கேட்க கன்னடம் கற்றுக் கொள்ளும் விஷயம் பற்றி கூறினேன். உடனே அவர் ‘அந்தப் பொண்ணுக்கு தமிழ் தெரியுமா?’ எனக் கேட்க ‘இல்லை’ என தலையாட்டினேன். உடனே அருகிலிருந்த அம்மா  ‘நீ மட்டும் கன்னடம் கத்துப்ப. அவள் தமிழ் கத்துக்க மாட்டாளா? அவங்க உன்னைக் கன்னடக்காரனாக்க  முயற்சிப் பண்ணறாங்க. என் பேரன் தமிழ் பையனாத்தான் இருக்கணும். அந்தப் பொன்னை தமிழ் கத்துக்க சொல்லு. சாதி, மதம் வேனாங்கிரதே பெரிய விஷயம். இதில மொழியும் வேண்டாமா?’ என மொழிப் பற்றிக் காண்பிக்க தந்தையும் ஆமோதித்தார்.

வேறு வழியில்லாமல், இப்போது நான் ‘கன்னட கலி’ வகுப்பிலும், ஜென்னி  ‘தமிழ்’  வகுப்பிலும்.  

கன்னடக்காரங்களே  பார்க்காத மொக்கை கன்னடப் படத்தையெல்லாம் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருக்கும் என்னை பரிதாபமாகப் பார்க்கின்றனர்  நண்பர்கள்.

Advertisements
கன்னடத்துப் பைங்கிளி

13 thoughts on “கன்னடத்துப் பைங்கிளி

 1. YOGA.S சொல்கிறார்:

  உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வச்சாங்கன்னு சத்தியமா தெரியாது!ஆனா,ஒண்ணு காதலுக்காக கன்னடா படிக்கீங்கன்னு மட்டும் தெரியுது!!!!!!!

  1. வணக்கம் யோகா.. வில்லங்கத்தை ஆரம்பிச்சி வச்சிட்டீங்களே… :-).

   இதனால சகலமானவர்களுக்கும் சொல்லறது என்னன்னா இந்த கதை முற்றிலும் கற்பனையே. சத்தியமா என் சொந்த கதை இல்லீங்கோ…

   நன்றி.

  1. என்னை மாட்டிவிடரதுன்னே முடிவு பண்ணீட்டிங்களா? உண்மையிலேயே இது கற்பனைங்க சமுத்ரா.. எனக்கு இது வரைக்கும் யாரும் கிடைக்கல.. :-(…

 2. ha..ha… கதை ரெம்ப நல்லாயிருக்கு.What an idea sir விளம்பரம் பார்க்கலையா நம்ம கதாநாயகன். கன்னடமும் படிச்சமாதிரி இருக்கும் பேசின மாதிரியும் இருக்கும்.

 3. //முதல் தடவைப் பார்த்தப்பவே என் மனசில ஏற்கனவே இருந்த இன்னொரு பெண்ணை தூக்கி எரிந்து அந்த இடத்தில் இவள் அமர்ந்தாள். அந்த பெண்ணை நினைச்சு பாவமா இருந்தாலும், அவளும் இன்னொருத்திய தூக்கி எறிஞ்சிட்டு மனசில இடம் பிடிச்சவதானேன்னு மனசத் தேத்திக்கிட்டேன்.//

  🙂

 4. மீனாட்சி நாச்சியார் சொல்கிறார்:

  நானும் ஒன்னரை வருடம் மைசூரில் வேலை பார்த்தவன் தான். நான் ஒரு பொண்ண சைட் அடிக்கிறேன்னு தெரிஞ்சாலே அந்த பொண்ணிடம் இவரு ரெம்ப நல்லவரு , கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குனு” என்று நம்ம நண்பர் கூட்டம் போட்டுகொடுத்து அதோட கதைக்கு முற்றுபுள்ளி வச்சிருவாங்க. நண்பேண்டா ..

  1. விடுங்க பாஸ்.. அரசியல்ல (நட்புல) இதெல்லாம் சாதாரணம்.. :).. இன்னிக்கு நம்மளை வாரினா நாளைக்கு அவனை வாரப்போறோம்.. :)..
   ஆமா.. அந்த கல்யாணம் ஆன மேட்டர் நெஜமாலுமே பொய்யா? உண்மையத்தான சொன்னாங்க.. 😛

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s