எந்திரன் – என் பார்வையில் 

நான் விமர்சனம் எழுதும் அளவுக்கு பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க. ஆனாலும் நாங்களும் படம் பாத்துட்டோம் என எல்லோருக்கும் சொல்லணுமில்ல.

எந்திரன், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் சில மாதங்களாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். ரஜினி, ஷங்கர், சன் டிவி என ஜாம்பவான்கள் இணைந்த இந்தியாவில் 150 கோடிக்கு மேலான பட்ஜெட்இல் உருவான முதல் படம். இங்கே மற்ற மாநில நண்பர்கள் எல்லாம் எப்படி ஒரு மாநில மொழி படத்துக்கு இவ்வளவு செலவு செய்யும் துணிச்சல் என மூக்கில் விரல் வைக்க வைத்த படம். ஒரு வழியாக நேற்று ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகும் முன்னரே புக்கிங்கில் பல சாதனைகளை முறியடித்தது. எனினும் பெரும்பான்மையர் பயந்தது, இது போல மிகப் பெரும் வந்த பல தமிழ் படங்கள் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன. இப்படமும் அதில் சேர்ந்துவிடுமோ என்றுதான்.


எந்திரன் கதை மிகவும் எளிய ஒன்றுதான். பலர் பயப்பட்டதை போல c-கிளாஸ் ரசிகர்களுக்கு புரியாதபடி பெரிதாக எதுவும் இல்லை. ஹீரோ ரஜினி (வசீகரன்) மனித உணர்வுகளுடன் கூடிய ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அது ஐஸ்வர்யா ராயின் மேல் காதல் கொண்டு, அவரை அடைவதற்காக செய்யும் விஷயங்களை விஞ்ஞானி ராஜி எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதை.

முதல் பாதி முழுக்க குழந்தைத்தனமான ரோபோ செய்யும் கலகலப்பான விஷயங்களும், இரண்டாம் பாதியில் வில்லத்தனமான ரோபோ செய்யும் கபலீகரங்களும் என திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார் ஷங்கர். என்ன ரஜினி ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம். அறிமுகப் பாடல் இல்லை, விஞ்ஞானி  ரஜினிக்கு பெரிதாக வேலை இல்லை என சில குறைகள். எனினும் உலகத் தரமான சினிமா என்று வரும் போது இது போன்ற சில விஷயங்களை இவர்கள் விடுவது சரியாகத் தான் படுகிறது.

‘வசீகரன்’ ரஜினி இந்த கதாப்பாத்திரம் ரஜினி ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்தான். அதுவும் கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவது போன்ற காட்சியெல்லாம் சற்றே ஏமாற்றம்தான். எனினும் ஹீரோ யாராக இருந்தாலும் எதிராளிகள் நூறு பேரை அடித்து துவைப்பவராக காட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரஜினி படத்திலேயே முறியடித்திருபபதற்கு ஷங்கருக்கு ஒரு சபாஷ்.

சிட்டிரஜினி படத்தின் நிஜ ஹீரோ. முதல்  பாதியில்  எதுவும் தெரியாத  குழந்தைத்தனத்துடன் கலகலக்க வைக்கும்போதும், இரண்டாவது பாதியில் வில்லனாக கதி கலங்க வைக்கும் போதும், கலக்குகிறார் மனுஷன். நிச்சயமாக தமிழ் சினிமா மிகச் சிறப்பான வில்லன் நடிகரை இழந்துவிட்டது என்பதை சந்திரமுகிக்கு பிறகு இதில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதுவும் ரோபோக்களோடு கலந்திருக்கும் விஞ்ஞானி  ரஜினியை கண்டுபிடித்து விட்டு சிரிக்கும் இடத்தில் அவரின் வில்லத் தனம் சபாஷ் போட வைக்கிறது. பல இடங்களில் இந்த கதாப்பாத்திரம் தான் ரசிகர்களிடம் விசில், கைதட்டல் வாங்குகிறது.

ஐஸ்வர்யா ராய் பெரிதாக வேலை இல்லை. வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிதான். ஆனாலும் இயந்திரத்துக்கு காதல் வரவைக்கத் தேவையான அழகுடன் பவனி வருகிறார். இந்த வயதிலும் இவ்வளவு அழகா என அனைவரும் கேள்வி கேட்கும்படி அழகுப் பதுமையாக வலம் வருகிறார். பாடல் காட்சிகளில் ஆடுகிறார் அவ்வளவுதான்.

சந்தானம், கருணாஸ் காமடி காட்சிகளில் பெரும்பாலும் சிட்டிரஜினியே கலக்கிவிடுவதால் இவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை. சில இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார்கள்.

ஷங்கர் படம் முழுக்க முழுக்க இவரின் உழைப்புதான். சுஜாதாவின் கதைக்கு திரைவடிவம் கொடுப்பதில் மிக சிரமப்பட்டு ஜெயித்திருக்கிறார். சில காட்சிகளின் கற்பனை நிச்சயமாக பாராட்டுக்கு உரியானவாக இருக்கின்றது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளின் கற்பனையும், கிராபிக்ஸ் காட்சிகளும் தமிழ் படத்தில் தான் இருக்கிறோமா இல்லை ஏதாவது ஆங்கிலப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோமா என பிரம்மிப்பைக் கொடுப்பது நிஜம். அதற்கு மிக முக்கியமானவர் இவர். சரியான அளவு பணம் இருந்தால் ஹாலிவுட் அளவுக்கு நாமும் படமெடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் என்ன தான் அறிவியல் படமாக இருந்தாலும், அனைவருக்கும் புரியும்படியாக எடுப்பது என்பதும் தனித் திறமைதான். ரஜினி போன்ற ஒரு மிகப் பெரிய நடிகரை வைத்து இயக்கியும் இது ஷங்கர் படம், ரஜினி படம் இல்லைஎன ரசிகர்களை பேச வைத்திருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவின் தொழிற்நுட்பங்களை அடுத்த படிக்கு கொண்டு சென்றிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

ரஹ்மான் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே  மிகப் பெரிய ஹிட். பின்னணி இசையில் பின்னி எடுத்துவிட்டார் மனுஷன். அதுவும் அந்த 2.0 பின்னணி பாடல் அருமை. கிளைமாக்ஸ் காட்சிகளில் கிராபிக்ஸ்க்கு இணையாக பின்னணி இசையும் மிரட்டுகிறது.

ரத்னவேலு அனைத்துக் காட்சிகளும் ஷங்கரின் கற்பனைகளாகவே பார்க்கப் பட்டாலும் அதை சிறப்பாக கொடுப்பதில் இவரின் பங்கும் முக்கியம். காதல் அணுக்கள் பாடலின் அந்த பாலைவனமும் அதில் உள்ள சிறு சிறு குளங்களையும் சிறப்பாக படம் பிடித்திருந்தனர். முதல் பாதி முழுக்க வண்ண மயமாகவும், இரண்டாவது பாதி மிரட்டலாகவும், நிச்சயம் ஓளிப்பதிவும் பாராட்டப் படவேண்டிய அம்சம்.

இரண்டாவது பாதியின் சிலக் காட்சிகள் நீளம், தேவை இல்லாமல்  ஒட்டப்பட்ட  ஒரு பாடல் என சில இடங்களை மட்டுமே குறை என என்னால் கூற முடிகிறது. அனிமேட்ரானிக்ஸ் தொழிர்நுட்பத்தைப்  பயன்படுத்தியுள்ள முதல் இந்திய திரைப்படம் எந்திரன். நிச்சயமாக இந்த தொழிற்நுட்பம் படத்துக்கு எவ்வளவு தேவையை இருக்கிறது என படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். eன்னொருவரை மறந்துவிட்டேனே. சாபு சிரில். அந்த விண்வெளி ஆய்வுக் கூடம், கடைசியில் சிட்டி ரோபோவின் கோட்டை என இவரின் பங்கும் பாராட்டுக்கு உரியதுதான்.

உலகத்தரம் உலகத்தரம் என்று வாய் மொழியாக பல படங்களில் சொன்னதை சரியான அளவுக்கு வசதி இருந்தால் உண்மையாக்கி காட்ட முடியும் என நிரூபித்திருக்கின்றனர். திருட்டு DVD இல் பார்த்து இது போன்ற நல்ல படங்கள் தமிழில் வராமல் தடுக்காமல், திரையில் காணவும். நிச்சயம் அந்த கிராபிக்ஸ் காட்சிகளும், இசையும் திருட்டு வீடியோவில் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பை தராதென்பது நிச்சயம்.

பாலா போன்றவர்களின் படங்கள் ஒரு வகையில் தமிழ் சினிமாவை உயர்த்துகிறது என்றால், எந்திரன் வேறு ஒரு வகையில் உயர்த்துகிறது. மொத்தத்தில் இரண்டுமே தேவைதான் நமக்கு.

எந்திரன் அஃறிணைக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவுக்கும் அரசன் இவன்.

Advertisements
எந்திரன் – என் பார்வையில் 

6 thoughts on “எந்திரன் – என் பார்வையில் 

  1. பத்து ஆண்டுகளுக்கு முன் வந்த பத்து இங்கிலீஷ் படங்களைக் காப்பியடித்து ஒரு படத்தை எடுப்பதால் தமிழ் சினிமா உயர்ந்துவிடுமா?பாலா போன்ற நல்ல கலைஞர்களோடு ஷங்கரை ஒப்பிட எப்படி மனம் வருகிறது நண்பரே…

    1. நான் இந்தப் படத்தை பாலாவின் படங்களோடு ஒப்பிடவில்லை.
      பாலாவின் படங்கள், கதை, நடிப்பு ஆகியவற்றில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துகின்றன. ஷங்கரின் இந்தப் படம், தொழிற்நுட்ப விஷயங்களில் தமிழ் படங்களின் தரத்தை உயர்த்துகின்றன என்ற பொருளில்தான் எழுதியிருக்கிறேன்.
      ஹாலிவுட் தரம் என சும்மா சொல்லிக்கொண்டிருந்தது போய் உண்மையிலேயே ஹாலிவுட் தரத்தில் தரப்பட்ட படம் எந்திரன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s