சாதி, மதங்களின் அரசியல்

சாதிப்பற்று பற்றியும், மதப்பற்று  பற்றியும் பல ஆயிரக்கணக்கானோர்  பல மொழிகளில் தங்களதுக் கருத்துக்களைப் பதித்திருப்பது தெரிந்தாலும், இதைப்பற்றி எனது கருத்துகளில் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  சாதி மதங்களைப் பற்றி எழுதும் போதும் பேசும்போதும் எனக்கு தெரிந்தவரை பெரும்பாலானவர்கள்  வெளிப்படையாக தங்களின் சாதிப்பற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆனால்,  நிறைய பேருக்கு நிச்சயம் சாதி, மதப் பற்றுகள் தங்களின் முன்னோர்களிடமிருந்து சிறிதும் குறையாமல் இருந்து கொண்டுதானிருக்கிறது. இப்போதைய உலகில் முழுவதுமாக சாதி, மதங்களை மறுக்கின்ற மனிதர்களோ, அமைப்புகளோ மிக மிகக் குறைவு.

 இதைப் பற்றி நடுநிலையானக்  கருத்தைக் கொண்டிருப்பவர்கள் கூட, தன் சாதிக்காரனா, இல்லை அடுத்த சாதிக்காரனா என வரும்போது, இருவருமே தனக்கு நெருங்கியவர்கள் இல்லாத பட்சத்தில், தன் சாதிக்காரனுக்கு ஆதரவான நிலை எடுப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.  என் வீட்டில், எந்தக் கூட்டணியில் இருந்தாலும்,  பாமக எங்கள் தொகுதியில் போட்டியிட்டால்,  எங்கள்  குடும்பத்தில் அனைவரும் பாமகவிற்குத் தான் வாக்களிப்பார்கள்.

நான் கேட்டால், பெரும்பாலும் சரியான காரணம் எதுவும் அவர்களால் சொல்லமுடிந்ததில்லை, ‘நமக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்த கட்சி’ என்பதைத் தான் என் தந்தை அடிக்கடி சொல்லுவார். சரி, அவர்களாவது போன தலைமுறை என்று விட்டுவிடலாம் . என் பெரியப்பாவின் மகன்களும்,  தங்கள் சாதியினர் என வரும்போது காட்டும் அக்கறைதான் என்னை கவலை கொள்ள செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், நான் ஏதாவது சொல்லப் போனால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘நீ பெருசா படிச்சிட்டங்கறதுனால, சொந்தக் காரங்க எல்லாம் இல்லைன்னு ஆகாது. சொந்தத்துக்கு அப்புறம்தான் எல்லாம்’. நேற்று வரை யாரென்றே தெரியாமல் இருந்தவன், நமது சாதி என்றவுடன் எப்படி மாமா, மச்சான், பங்காளி ஆகிறார்கள் என்பது எனக்கு இன்றுவரை விளங்காத ஒன்று.

 இது படிக்காமல் கிராமத்தில் இருப்பவர்களிடம் மட்டும் இருந்திருந்தால், மக்களுக்கு படிப்பறிவு வரும்போது இதெல்லாம் மறைந்துவிடுமென  விட்டுவிடலாம்.   ஆனால், படித்துவிட்டு தகவல் தொழிற்நுட்பத் துறையில் வேலை செய்யும் நண்பர்கள் சிலரே சாதிகளையும் மதத்தையும் முக்கிய விஷயமாகப் பேசும்போதுதான்,  சாதி, மதம் என்பவை எப்பொழுதுமே அழிக்க முடியாத விஷயமாக மாறிவிடுமோ என்ற பயம் வருகிறது.

புதிதாகக் கல்லூரியில் முதுகலை கணினி பிரிவில் சேர்ந்திருந்த நண்பனிடம், கல்லூரி எல்லாம்  எப்படியிருக்கிறது என்ற கேள்விக்கு அவன் அளித்த பதிலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை.  ‘எங்க சாதிக்கார பசங்க நாலுபேரு இருக்காங்க. அவனுங்க கூட சேர்ந்தாச்சு. அவனுங்களும், கிளாசில இருக்க எங்க சாதிப் பொண்ணுங்க யாருன்னும் சொல்லிட்டாங்க. அவங்கள மட்டும் சைட் அடிச்சுட்டு போயிட்டு இருக்க வேண்டியதுதான்’. இதுதான் அவன் அளித்த பதில். நிச்சயமாக முதுகலைப் படிக்கும் மாணவனிடம் இந்த அளவுக்கு சாதிப் பற்றை நான் எதிர்பார்க்கவில்லை.

ஒருமுறை நண்பர்கள் சில விஷயங்களை விவாதித்து கொண்டிருந்தோம். அதில் நான், ‘நம்மையே ஒருவன்  தீட்டு என்று கோவில் கருவறைக்குள்  அனுமதிக்க மாட்டேன் என்கிறான். நாம் இன்னும் சிலரை, நம்மைவிட தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்குகிறோம்’  எனக்கூறியபோது நண்பன் ஒருவன், “தாழ்த்தப்பட்டோர்களுக்கான அமைப்புகள் எதுவும் இல்லை என்றால், நாட்டில் சாதிப் பிரச்சனைகள் எதுவும் வராது. நம்மில் யாரும் கருவறைக்குள் நுழையவிடவில்லை என்று சண்டையிடுவதில்லை,  நம்மைப் போல் ஏன் அவர்கள் இருக்கமாட்டேன் என்கிறார்கள்”  என்றான்.

அதற்கு  நான், “நாம் முதுகெலும்பில்லாமல் இருக்கிறோம் என்பதற்காக, அனைவரையும் அவ்வாறு இருக்கச்சொல்ல முடியாது” எனக் கூறினேன். சூடாகப் போன இந்த விவாதத்தில், கடைசி வரை அவன் இந்த போராட்டங்களின் அவசியத்தை புரிந்து கொள்ளவே இல்லை. இவர்களைப் போன்று சமுதாயத்தில் சாதி, மத வேறுபாடுகளைக் களைய நடக்கும் போராட்டங்கள் வீண் வேலை எனக் கருதுபவர்களும் நிறைய உண்டு.

 இது இந்து மதத்தில் மட்டுமில்லை. கிருத்துவ மதத்திலும் உள்ளது.  என்னுடன் பேசிக் கொண்டிருந்த  ரோமன்  கதோலிக்  பிரிவை சேர்ந்த ஒரு  பெண், மற்ற பிரிவினரின் நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் பெரிதாக சாடினாள். CSI பிரிவை சேர்ந்த இன்னொரு பெண்ணோ RC இன் குறைகளை மட்டுமே பேசினாள். முஸ்லிம் மதத்திலும் சாதி வாரியான வேறுபாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

தங்களுக்குள்ளேயே இவ்வளவு பிரிவுகளைக் கொண்டிருக்கும் இவர்களுக்கு (அனைத்து மதத்தினரும்தான்),  மற்ற மதத்தினர்  என்று வரும்போது மட்டும், நாமெல்லாம் ஒரு மதத்தினர்  என்ற  உணர்வு எங்கிருந்து வருகிறதோ  தெரியவில்லை.  இவர்களுக்கு நாமெல்லாம் ஒரே மனிதர்கள்  என்னும் உணர்வு எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை.  

முஸ்லீம்களை எனக்குப் பிடிக்காது எனச் சொல்கின்ற பலரை நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய  ஆச்சர்யமெல்லாம் ஒரு சாதி அல்லது மதத்தை வைத்து எப்படி ஒரு தனி மனிதனின் சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும் பலர் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான்.

இது கிராமத்தில் இருக்கும் சென்ற தலைமுறைக்காரர்களில்  இருந்து, ஐடி துறையில் இருக்கும் நவீன இளைஞர்கள் வரை தொடர்கிறது. தங்களைப் பகுத்தறிவாளர்கள் எனச் சொல்பவர்களும் இதில் அடக்கம். பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், ஒரு மனிதன் பார்ப்பனன் என்பதற்காகவே அவனை வெறுக்கிறார்கள் என்பதும் உண்மை.  ‘பிறப்பால் சாதி, மதப் பிரிவினைகள் இருக்கக்கூடாது’ என்னும் கருத்தை வலியுறுத்தும்  இவர்களும்  பிறப்பை வைத்து தானே ‘இவன் பார்ப்பனன்’ என முடிவு செய்து வெறுத்து ஒதுக்குகிறார்கள். இதன் நியாயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை.

இது போன்ற நிலைப்பாடுகளால் இதை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் அதிகம்.  இந்து மதப்பற்றாலர்களை இழுக்க ஒரு கூட்டமும், சிறுபான்மையினரை இழுக்க ஒரு கூட்டமும் என இந்திய அளவிலும் அனைத்து கட்சிகளும் சாதியையும், மதத்தையும் வைத்தே பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. மொத்தத்தில் சாதி, மதங்களை ஆதரித்தோ, எதிர்த்தோ அரசியல் செய்வதற்கு நிச்சயம் இவர்களுக்கு இவை தேவைப்படுகிறது.  பகுத்தறிவாளர்கள் சொல்லும்படி, பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் முன்னேறினாலும், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என இவர்கள் வைத்திருக்கும் இரு பிரிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சாதி மதங்கள் இல்லாத உலகு என்பது  கற்பனையாகவே  போய்விடுமோ என எண்ணத் தோன்றுகிறது.  முழுமையாக சாதி, மதங்களை ஒழிக்க அதைப்பற்றியே துளியும் பேசாமலிருப்பது அவசியமாகிறது. ஆனால் அதை செய்யும் எந்த அரசியல் அமைப்பையும் எனக்கு யாரும் இதுவரை அறிமுகப் படுத்தவில்லை.

Advertisements
சாதி, மதங்களின் அரசியல்

3 thoughts on “சாதி, மதங்களின் அரசியல்

 1. dharumi சொல்கிறார்:

  //சிறு வயதில் பல கனவுகள் கண்டு அது எதுவும் வாய்க்கபெறாமல், ..//

  உங்களின் நல்ல பல கனவுகள் – அதிலும் இப்பதிவில் கண்டிருக்கும் கனவுகள் – நடந்தேற விழைகிறேன்.
  வாழ்க

 2. அன்புக்குரிய நண்பர் திரு. அன்பு அவர்களே,

  உங்களின் சிந்தனைகளை நான் வரவேற்கிறேன்.

  இதே கருத்தை. ஒட்டிய ஒரு கட்டுரை எனது தளத்தில் வெளியிடப் பட்டு உள்ளது.

  “சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் -பகுதி 1”

  http://thiruchchikkaaran.wordpress.com/2010/09/25/casteless-homogenious-soceit/

  //இந்த‌ சாதி என்ப‌து எங்கே இருக்கிற‌து? அது ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருக்கிற‌து. ஒவ்வொரு ம‌னித‌னும் குழ‌ந்தையாக‌ கேட்க‌, பேச‌ ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவ‌னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌க் குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர். ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.

  சாதிப் பிரிவினை ம‌றைய‌ ந‌ம்முடைய‌ வ‌ழி, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ன‌வான் ஆக்குவ‌து தான். க‌ண்ணிய‌மும், சினேக‌ ம‌ன‌ப் பான்மையும் உடைய‌ ஒருவ‌ன் இன்னொரு ம‌னித‌னை நோக்கும் போது, அவ‌னை ம‌ரியாதையுட‌ன் எதிர் கொள்வான்//

  அதைப் படித்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s