உண்மை காதல்

உண்மை காதலுக்கு பலரும் பல விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் இதுவரை எது உண்மையான காதல் என்று எனக்கு புரிந்ததே  இல்லை.  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பல வருடங்கள் காதலித்த சிலர், சில சாதாரண காரணங்களால் பிரிந்திருக்கின்றனர். அதே சமயம்,  காதலித்த  பெண்ணிடம் காதலை சொல்லாமலேயே, காதல் தோல்வியில்  உயிர்  விடுபவர்களும்  உண்டு. எனவே என்னை பொறுத்தவரை  உண்மை காதல் என்பதற்கு வரையறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை, அது முழுவதும்  ஒருவரின்  உணர்வு சார்ந்த  விஷயமாகவே  கருதுகிறேன். இங்கே உள்ள கதையும்  அது  போலத்தான். 

அது சென்னையின் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று. ஜீவா கல்லூரி விடுமுறை முடிந்து  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.   “இனி நாம  சீனியர்டா மச்சி, நம்மக்கிட்ட பயப்படவும் சில பேரு வருவாங்க!”  என்றபடி உடன் வந்து சேர்ந்தான் சரவணன். ஆனால் ஜீவாவுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஏனென்றால்  ஜீவாவின் முகம் அப்படி. மகாராஷ்டிரா வம்சாவழி என்பதாலும், சிறு வயது முதல் வீட்டிலேயே வளர்ந்ததாலும்,  நல்ல அமுல் பேபி முகம் அவனுக்கு. நண்பர்கள் அனைவரும் அவனை ‘பேபி’ என்றுதான் அழைப்பார்கள். எனவே அவனுக்கு ‘நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும் வரை நம்மை பார்த்தும் சில பேர் பயப்படுவார்கள். ஆனால் தனியாக போனால் ஒருத்தன் கூட பயப்பட மாட்டான்’  என்பது தெளிவாக தெரிந்தது.

வகுப்பிற்கு வந்ததும் பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்ததும், எப்பொழுதும் போல கடைசி பெஞ்ச்-இல் சென்று அமர்ந்தார்கள் ஜீவாவும், சரவணனும்.  சரவணன் திடகாத்திரமானவன்.  விரிவுரையாளர்களே   அவனிடம் பெரிதாக வைத்துக்கொள்ள  மாட்டார்கள். இவனும் ஜீவாவும் ஒன்றாக செல்லும்போது இரு துருவங்கள் போல காட்சியளிக்கும்.

மதியம் வரை வகுப்பில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. சரவணன் ஒரு அவசர வேலையாக வெளியில் செல்ல, ஜீவா மட்டும் தனியே கேண்டீனுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போதுதான் திடீரென தென்றல் வீசியது போல அவள் கடந்து சென்றாள். ஏனோ இதுவரை எந்த பெண்ணை பார்த்தாலும் தோன்றாத  புது உணர்ச்சி, அவனுக்கு இப்போது தோன்றியது.  திரும்பி பார்த்த போது, அவள் ஒரு தேவதை போல, துப்பட்ட காற்றில் பறக்க, வெள்ளை சல்வாரில் சென்று கொண்டிருந்தாள்.  ‘உடனே அவன் காதலில் விழுந்திருப்பான்’ என நீங்கள் நினைத்தால் அது தவறு.  ஜீவா முப்பது வினாடிகளுக்கு முன்பிருந்தே  அவளை காதலிக்க தொடங்கி இருந்தான்.

இதை சரவணனிடம் சொல்ல, உடனே அவன் “மச்சி, நிச்சயமா அவ ஜுனியராத்தான் இருப்பா. எப்படியும் கண்டுபிடிச்சிடலாம். இனிமேல் நீதான் அவளோட ஆளு”  என உசுப்பேத்த, ஜீவாவுக்கு அவள் மீதான காதல் இன்னும் அதிகமானது.  நண்பர்களின் உதவியால், அடுத்த நாள் மதியத்துக்குள் அவள் பெயர் சரண்யா என்றும், சென்னைதான் அவள் என்பதும் தெரிந்தது. மேலும், அவள் முதல் வருடமல்ல, இரண்டாவது வருடம் CSE, வேறு ஒரு கல்லூரியிலிருந்து  இங்கே சேர்த்து இருக்கிறாள் என்பதும் தெரியவந்தது.  ஆனால் இந்த தேடலில் தெரிந்த இன்னொரு விஷயம் தான் நண்பர்களை கவலைக்குள்ளாக்கியது.

அது, அவளுக்கு எல்லாமுமாக ஒருவன் இருக்கிறான் என்றும், அவளின் தந்தை இறந்ததிற்கு பிறகு இவனும் இவன் குடும்பமும்தான் அவர்கள் குடும்பத்திற்கு சகலமும் செய்து வருகிறர்கள் என்பதுதான் அது. மேலும் அவனும் இதே கல்லூரியிலேயே ECE படித்து வருகிறான் அன்று தெரிந்தபோது மேலும் ஆதிரம்மனது. மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களான இவர்களுக்கும் ECE மாணவர்களுக்கும் எப்போதும் ஆகாது. எனவே இதை இரண்டு பிரிவுகளுக்குமான மோதலாகவே தீர்மானித்தார்கள்.

கம்ப்யூட்டர் பிரிவில் இருக்கும் பெண் நண்பர்கள் மூலமாக அவளின் நண்பன் ஆனந்த், வெறும் நண்பன் மட்டுமே வேறு எதுவும் இல்லை என்று தெரிந்தபின்புதான் ஜீவாவுக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் ஆனந்த்,  day scholar   என்பதால் அவனது வகுப்பிலும் பெரியதாக நண்பர்கள் இல்லை, மேலும் அவன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவன் என்று தெரிந்ததால் சரவணனும், மற்ற  நண்பர்களும் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று நம்பினர். 

பிறகு சரவணன் ஜீவாவை தயார்படுத்தும் வேலையில் இறங்கினான். மிகவும் பயந்த அவனுக்கு  தைரியமூட்டி, அவளிடம் பேச சொன்னான். அவனும் ஒரு வழியாக அவளிடம் பேசுவதாக ஒத்துக்கொண்ட போது இரண்டு மாதங்கள் ஓடி இருந்தன. ஒரு நாள், அவள் தனிமையில் வந்து கொண்டிருக்க, ஜீவா அவள் எதிரில் போய், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவளோ, “எனக்கு உன்னை யாருன்னே தெரியாது” எனக்கூற, இவன் “எனக்கு உன்னை பத்தி நிறையா தெரியும், அதுபத்தி பேசத்தான் கூப்பிடறேன்”, எனசொல்லி கான்டீன்-க்கு கூட்டிபோய் ஒரு தனிமையில் அமர்ந்தனர்.

“என்ன சொல்லணும் எங்கிட்ட?”

“நான் உன்னை லவ் பண்ணறேன், உன்னை பார்த்த முதல் நாள்ல இருந்து”

“என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்?”

“நீதான் என் லவர்ன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம், நெறைய தெரிஞ்சுக்கிட்டேன்.”

“இதெல்லாம் ஜஸ்ட் இன்பாச்சுவேசன். கண்டதும காதல் எல்லாம் சினிமாவுக்குத்தான் லாயக்கு”

“இல்ல சரண்யா, நான் உண்மையிலேயே உன்னை லவ் பண்ணறேன்”

“இங்கப்பாரு, உன் பேரே எனக்கு தெரியாது, எப்படி உன்ன லவ் பண்ண.”

“நான் ஜீவா. மெக்கானிக்கல்  ஸ்டுடென்ட்”

“சாரி, வேற ஏதாவது பொண்ண  ட்ரை பண்ணு.”  

சொல்லிவிட்டு விடுவிடுவென போய்விட்டாள். 

இந்த ஏமாற்றத்தின்  காரணமாக  அடுத்த நாள் ஜீவா கல்லூரிக்கு செல்லவில்லை. சரண்யா இதைப்பற்றி அவள் ஆனந்தனிடம் சொல்லி இருந்ததால், அன்று மெக்கானிக்கல் வகுப்பறைக்கு ஜீவாவை பார்க்க வந்தான். அவன் இல்லாததால், அவன் சரவணனிடம் பேச, சரவணன் இவனை பயமுறுத்த இதுதான் சந்தர்ப்பம் என்று முடிவு செய்தான்.

“என்னது, ஜீவாக்கிட்ட இதெல்லாம் விட சொல்லவா? டேய் விளையாடறியா? நான் ஏதாவது சொல்லபோக அவன் என்னை சாத்தறதுக்கா?”

அவ்வளவு பெரியவனாய் இருந்த சரவணனே இவ்வாறு சொல்லவும், ஆனந்த் கொஞ்சம் பயந்துதான் போனான். இதை கவனித்த மற்ற நண்பர்களும் சேர்ந்துகொண்டனர்.

“இங்க பாருடா, இவன் ஜீவாவை மிரட்ட வந்திருக்கான்.”

“ஐயோ, நான் மிரட்ட எல்லாம் வரலீங்க, சும்மா பேசத்தான் வந்தேன்”

“சும்மா கை காமிச்சவனையே, தூக்கிப்போட்டு மிதிச்சவண்டா அவன்”

“அன்னைக்கு பைனல் இயர் பையனை பொறட்டி எடுத்தானே, தெரியாதா  உனக்கு?”

மிகவும்  பயந்த ஆனந்த், தான் வந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டு சென்றுவிட்டான்.

இதைப்பற்றி சரவணன்  ஜீவாவிடம் சொல்ல, அவனோ, “ஏண்டா இந்த கொழந்த மூஞ்சியை போய் பெரிய தாதா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வச்சு இருக்கீங்களேடா. எவனாவது நம்புவானா?” என கேட்டான். 

“அவன் நம்பிட்டான் மச்சி. அது போதும். இனி அவன் உன் வழியில வரமாட்டான். கவலைய விடு. அது மட்டுமில்ல அநேகமா உன் கொழந்த மூஞ்சிய பாத்துதான் வேணாம்ன்னு சொல்லி இருப்பா. இப்ப நீ பெரிய ரௌடின்னு நெனச்சான்னா, அவ  எண்ணம்  மாறும்.” இதை கேட்ட ஜீவாவும் நம்பினான்.

சில நாட்கள் கழித்து, மீண்டும் சரண்யாவை இடைமறித்து பேசினான் ஜீவா. அவளும் வேறு வழியில்லாமல் நின்றாள்.

“நான் சொன்னத பத்தி என்ன முடிவு பண்ணின?”

“நாந்தான் அன்னைக்கே சொன்னனே”

“ஹே, அதெல்லாம் ஒரு அவசரத்தில பேசறது. நிதானமா யோசிச்சு என்ன முடிவு பண்ணினன்னு கேட்டேன்.”

“யோசிக்கறதுக்கு ஒன்னுமே இல்ல. எப்போ நீ ஒரு பெரிய ரௌடின்னு தெரிஞ்சதோ அப்பவே உன்னைப்பத்தி முடிவு செஞ்சுட்டேன்”

“அதெல்லாம் சும்மா பிரெண்ட்ஸ் விளையாட்டுக்கு சொன்னது”

“அதுவோ, நான் முடிவு பண்ணது பண்ணதுதான்”

“இதெல்லாம் சும்மா. நீ வேற யாரையும் லவ் பண்ணல இல்ல. அப்புறம் என்ன பிரச்சன?”

“யார் சொன்னா? நான் ஆனந்தை லவ் பண்ணறேன்.”

“ஹே சும்மா பொய் சொல்லாத. நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பிரெண்ட்ஸ்-தான்னு எனக்கு தெரியும்”

“அதெல்லாம் எப்படி நீயா முடிவு பண்ணுவ?”

“நீ இன்னும் அவன்கிட்ட propose பண்ணல இல்ல?”

“அதான் பிரச்சனையா? வேணும்ன்னா என் பின்னாடி வந்து பாரு”.

சொன்னவள் நேராக ஆனந்திடம் சென்று, “ஆனந்த், ஐ லவ் யு” எனச்சொல்ல, ஜீவா ஆடிப்போனான். 

ஆனந்த் என்ன நடந்திருக்கும் என புரிந்துகொண்டு அவளை சமாதான படுத்த முயற்சிக்க, அவளோ மிகவும் உறுதியாக அவனை காதலிப்பதாக சொன்னாள். பிறகு வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொண்டான். 

இந்த அதிர்ச்சியுடன் வந்து நண்பர்களிடம் ஜீவா, “என்னை பிடிக்கலைன்னு சொன்னதுகூட பெரிசில்ல மச்சான். என்ன தவிர்க்கறதுக்காக இன்னொருத்தன் கிட்ட போய் லவ் யு சொல்லிட்டாடா”, என புலம்பியவனை அனைவரும் சமாதானப்படுத்தினார்கள். சரவணனும், ‘இவனை தான் ரௌடியாக உருவகப்படுத்தியதால்தான் அவள் வேண்டாம் என சொன்னாள்’ என நினைத்து வருத்தம் கொண்டான். இதற்கு பிறகு ஒருவாரம் தொடர்ந்து, குடித்து போதையில் வகுப்பிற்கும் வராமல் பைத்தியக்காரன் போல் திரிந்தான் ஜீவா.

அடுத்த ஞாயிற்றுகிழமை, இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தனர் நண்பர்கள். சரவணன்,  ஜீவாவை கடற்கரைக்கு  அழைத்து போய், நண்பர்கள் வாங்கி வைத்திருந்த சரக்குகளை காண்பித்து, “எவ்வளவு வேணுமோ குடிச்சுக்கோ. ஆனால் அவளை இங்கயே மறந்துட்டு வரணும்” எனக்கூறி சற்று தொலைவில் சென்று அமர்ந்தான். 

மற்ற நண்பர்கள், ஜீவா குடித்து முடித்தவுடன், “அவள மற, அவள மற” எனக்கூறி, அவனை தண்ணியில் அமிழ்த்தினார்கள். அதற்கு பிறகு, பழையபடி நண்பர்களிடம் பேசிக்கொண்டு வகுப்பிற்கு ஒழுங்காக வர ஆரம்பித்ததால், இவன் மறந்துவிட்டதாங்க எண்ணி நண்பர்கள் மகிழ்ந்தனர்.

இது நடந்து 7 வருடங்கள் ஆகியும், அவள் மீதான தனது காதலை மறக்க முடியாமலே வாழ்ந்து வருகிறான் ஜீவா.

இது நடந்து ஏழு வருடங்களுக்கு  பிறகு, ஒரு நாள் ஜீவாவின் வீட்டுக்கு  சென்ற சரவணன் ஜீவாவின் டைரி-ஐ பார்த்த போதுதான்  அவன் இன்னும் அவளை  மறக்கவில்லை  என்பதும்,  அவளுக்காக  இன்னும் ஏங்குகிறான் என்றும்  புரிந்தது.  ஆனால் அவள்  ஆனந்தை திருமணம்  முடித்திருந்தாள்.  இதை  ஜீவாவிடம்  சொல்ல நினைத்தவன், அது முடியாது என தெரிந்து,  பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு  வந்துவிட்டான். 

இது காதலோ, இல்லை இனக்கவர்ச்சியோ ஜீவாவின் மனதில் இன்னும் அது வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது ‘உண்மை காதலாக’.

Advertisements
உண்மை காதல்

2 thoughts on “உண்மை காதல்

  1. கதை இன்றைய இளைய தலைமுறையின் மீதான சினிமா தாக்கத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது.

    காதல் இவர்களுக்கு தன்னிச்சையாக வருவதற்கு முன்னேயே சினிமாவினால் இவர்கள் மனதில் புகுத்தப்படுகிறது.

    வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s