ஒரு காதல் கதை – பகுதி 1

சற்றே நீளமாக போய் விட்டதால், இரண்டு பகுதியாக சமர்ப்பிக்கிறேன். என் நண்பனின் சில ஞாபகங்களுடன் என் கற்பனை கலந்த ஒரு கதை.

காதல் சில நேரங்களில் எதனால் வருகிறதென்றும் தெரியாது, எதனால் விட்டு போகிறதென்றும் புரியாது.  நான் ஆதித்தன். என்னை எப்படியாவது பொறியியலாளன் ஆக்கி விட வேண்டும் என்ற என் தந்தையின் கனவின் விழைவாக, மதுரையின் முக்கிய பள்ளிகளில் ஒன்றான TVS லக்ஷ்மி பள்ளியில் படித்து கொண்டிருந்த காலம். என் தந்தையின் கனவையெல்லாம் கால் தூசாக எண்ணவைத்த என் காதல் பிறந்த காலம்.

பத்தாம் வகுப்பு வரை சிறியதொரு பள்ளியில் அனைவருக்கும் தெரிந்த முகமாய், ஆசிரியர்களின் செல்ல பிள்ளையாய் இருந்து வந்த நான், திடீரென்று  இவ்வளவு பெரிய பள்ளியில் மாணவர் கடலுக்குள் ஒரு சிறு துளியாய் சங்கமித்த நேரம். பள்ளியில் சேர்ந்த ஒரு வாரத்தில் என்னையொத்த சில நண்பர்களை கூட்டிக்கொண்டு காலையில் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

“என்னடா மாப்பு, உங்கள் ஸ்கூல்ல சேர்ந்ததே சில பல பிகருங்கள பாத்துதான். ஆனா ஒன்னு கூட நம்ம கிளாஸ்ல இல்லையேடா”  இந்த பள்ளியிலேயே பல வருசமாய் படித்துக்கொண்டிருந்த நண்பனிடம் கேட்டேன்.

 “அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும் மச்சான். மேத்ஸ் குரூப் எல்லாம், படிக்கிற புள்ளக தான் எடுக்கும். என்ன பண்றது, அழகா இருக்கிற எவ படிக்கிறா? எல்லாம் தேர்ட் க்ரூப்ல ஒக்காந்து இருக்காளுங்க பாரு” அவனின் வயித்தெரிச்சல்.

அப்போதுதான் அவள் எங்களை தாண்டி போனாள், அவள் தந்தையுடன். வெளிர்நீல நிற சுடிதாரில், அந்த வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல. நண்பர்களிடம் கூறினேன், 

“மாப்பு, இவ மட்டும் நம்ம கிளாஸ் வந்தான்னா, சத்தியமா ஒரு நாள் கூட கிளாஸ் கட் அடிக்க மாட்டேண்டா”.

 “டேய்! இப்பதான சொன்னேன், அழகான பொண்ணுங்க எவளும் உருப்பிடியா படிக்க மாட்டாளுங்கன்னு. எங்க ரிசர்ச் மேலேயே சந்தேகமா உனக்கு?” கண்ணை உருட்டி முறைத்தான் நண்பன்.  

 ஆனால் அவன் ஆராய்ச்சி பொய்யாகத்தான் போனது.  அவள் எங்கள் வகுப்பிற்க்குத்தான் வந்தாள். நான் என் நண்பனை பார்த்து சிரிக்க, அவன் அவளை முறைத்தான். வழக்கம் போல எங்கள் ஆசிரியை அவளை வகுப்பிற்கு அறிமுக படுத்திக்கொள்ள சொன்னார். அப்போதுதான் அவள் பெயர் நந்தினி என்றும், எங்கள் தெருவில் இருந்து மூன்று தெரு தள்ளிதான் அவள் வீடு என்றும் தெரிந்தது. அவளது கனவும் BE தான் என தெரிந்த போது, ஏனோ மனம் மகிழ்ச்சி கடலில் குதித்தது.

 அறிமுகத்துக்கு பின், என் ஆசிரியை, நாளை முதல் யூனிபார்மில் வரவும் என்று கூற, எனக்கோ ‘இவளுக்கு மட்டும் இந்த உடையையே சீருடையாக அனுமதித்தால் என்ன?’ என்று தோன்றியது. ஆனால், ‘அழகு உடையில் அல்ல, உடுத்துபவரிடம்’ என அடுத்த நாள்தான் உறைத்தது எனக்கு. இவள் யூனிபார்ம் போட்டவுடன்தான் அந்த உடையும் இவ்வளவு அழகாக இருக்கிறதேன்று தெரிந்தது.

 அவள் எப்படியாவது என்னுடன் பேச மாட்டாளா என மனம் ஏங்கி தவித்தது. எனக்கு ஏற்கனவே அறிமுகமான சில பெண்களிடம், intro கொடுக்க சொல்லி கேட்ட போதெல்லாம் மறுத்துவிட,  எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கு. முதல் தேர்வில் வகுப்பிலே முதல் மதிப்பெண் பெற்று இருந்தேன். அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் தேவதை என்னிடம் பேசிய நாள்.  அவளுக்கு சில கணக்குகள் புரியவில்லை என்றும், சொல்லிதர முடியுமா என்றும் கேட்க, நானோ அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  கண் முன்னே நிழலாடிய போதுதான் சுயநினைவுக்கு வந்த நான், அவள்தான் என் முகம் முன்னே சிரித்தபடி கையை ஆட்டிக்கொண்டிருப்பதை பார்த்து சங்கடத்துடன், “கண்டிப்பா! கண்டிப்பா சொல்லித்தரேன்!’ என்று கூறினேன்.

என்னதான் நாங்கள் பேச ஆரம்பித்து இருந்தாலும், பேச்சு படிப்பை தவிர வேறு எங்கும் போகவில்லை. நமக்குத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே என்று அவர்கள் உதவி கேட்க, அவர்களோ பல படங்களின் கதைகளை அவர்கள் சொந்த சிந்தனை போல உதிர்த்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம், ‘மாப்பு, நானும் அந்த படம் எல்லாம் பாத்திருக்கேண்டா, உருப்பிடியா ஏதாவது இருந்தா யோசிச்சு சொல்லுங்கடா’ என சொல்லிவிட்டு வீட்டுக்கு போனேன்.

அடுத்த நாள் காலை, வழக்கம் போல சைக்கிளில் பள்ளியை நெருங்கிக்கொண்டிருந்தேன். சைக்கிள் ஸ்டாண்டை நெருங்கிய போதுதான் தெரிந்தது, அவள், அங்கே தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள் என்று. நண்பர்கள் சொன்ன ஐடியா எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்க, சைக்கிளை வேகமாக அழுத்திக்கொண்டு பொய், ஸ்கிட் அடித்து நிறுத்தினேன். அப்போதுதான் தெரிந்தது, இவளை பார்த்ததில், முன்னே வைத்திருந்த, மதிய சாப்பாட்டு கூடையை மறந்து விட்டிருந்தது. சைக்கிளை நிறுத்திய வேகத்தில், சாப்பாட்டு கூடை பாராது பொய் பத்தடி தூரத்தில் விழுந்து, சாப்பாடு அனைத்தும் கீழே கொட்டியது.

சாப்பாடு கொட்டியதை விட பெரிய வருத்தம், அவளும் அவள் தோழிகளும் சிரித்ததுதான். நான் சைக்கிளில் இருந்து கீழே இறங்குவதற்குள், அவளே என் டிபன் பாக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். முகத்தில் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று எளிதில் புரிந்தது எனக்கு.

முதல் முயற்சி, படுதோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்த என்னை, என் நண்பர்கள்தான் உற்சாக படுத்தினார்கள். அடுத்த முயற்சிக்கு. அதில் ஒருவன், “மச்சி, சைக்கிள்ல பண்ணதாலதான் இப்பிடி ஆயிடுச்சு. நீ மட்டும் பைக்ல ட்ரை பண்னன்னு வையி, கண்டிப்பா வொர்க்அவுட் ஆயிடும்” என உசுப்பேத்த, இந்த சனிக்கிழமை அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். அப்பாவின் கை, காலில் விழுந்து நண்பன் வீட்டுக்கு செல்வதாக கூறி, அவளிருக்கும் தெருவுக்கு சென்றேன். 

 நான் எதிர்பாத்தது போலவே, அவள் வீட்டிற்கு வெளியில் நின்று இருந்தாள். அவளை பார்த்துக்கொண்டே பைக்கை வேகமாக செலுத்திய நான் அங்கே இருந்த குழியை கவனிக்கவில்லை என்பது, நான் பைக்குடன் காற்றில் பறந்துகொண்டிருந்த போதுதான் உறைத்தது.  பிறகு, மருத்துவமனையில் தான் கண்விழித்தேன். திரும்ப பள்ளிக்கு செல்ல ஒரு மாதம் ஆனது.

கையில் கட்டுடன், அது ஆடாமல் இருக்க, கழுத்திலிருந்து ஒரு கயிறும் சேர்க்கப்பட்டு இருந்தது. அவள் என்னை பார்த்ததும் அருகில் வந்து, “இப்போ எப்படி இருக்கு” என கேட்க, நானோ “எல்லாம் சரி ஆயிடுச்சு. இதெல்லாம் எனக்கு பெரிய அடியே இல்ல. எங்க அம்மாவுக்காகத்தான் இதெல்லாம்” என, கழுத்தில் இருந்து வந்த கயிறில் இருந்து கையை எடுத்து கீழே தொங்கவிட்டேன்.  ஆனால் வலி எல்லைமீற, என்னையறியாமல் ‘அம்மா’ என கத்திவிட்டேன்.

 அவள் உடனே, என் கை பிடித்து அந்த கயிற்றில் மாட்டிவிட்டாள். மாட்டிய பிறகும் நான் அவள் கையை விடவே இல்லை. சற்று நேரம் பொறுத்து அவள்,

 “எவ்வளோ நேரம் கையை பிடிச்சுட்டு இருக்கிற மாதிரி ஐடியா?”

  “இந்த வாழ்க்கை முழுக்க..”

பகுதி-2 இங்கே.

Advertisements
ஒரு காதல் கதை – பகுதி 1

2 thoughts on “ஒரு காதல் கதை – பகுதி 1

  1. […] என் எண்ணங்களின் வழித்தடம் என்னை பாதித்தவைகளின் சில குறிப்புகள் பொருளடக்கத்திற்கு தாவுக முகப்புஎன்னை பற்றி ← ஒரு காதல் கதை – பகுதி 1 […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s